செவ்வாய், 4 மே, 2010

எடையற்ற பட்டங்கள் -(கவிதை)

பறவைகள்  கூடு திரும்பும்வரை 
குனிந்து நிமிரும் கட்டற்ற பொழுதுகளில் 
குறுக்கில் வெட்டும் மின்னலின் 
மீயாற்றலைத் தொட்டறியவில்லை

ஒட்டிய மண்வெட்டியுராய்ந்து
தீப் பொறித்த பொக்குலக் கங்குகளேந்தும் உள்ளங் 
கையுடன்கை ஒருமுறையும் இணைத்ததில்லை 

பன்னருவாச் சுனைகளறுத்து ரணம்படுத்த
ஆயுமற்று தானியமீட்டும் சமர்க்கள 
வெப்பம் வீசும் திசையையு  மறியவில்லை 

எடைமிகுந்த பாறாங் களைப்பு இரவாயமுக்க 
ஒருக்காலும் ஓய்வறியா உடலின் இருத்தலையும் 
உண்டபின்னும் எரிச்சலடங்கா வெம்மையின் 
வெளிமிகு இரைப்பையின் வலியும் உணரவில்லை 

எழுதியதைப் படித்துவிட்டும் 
படித்ததை எழுதிவிட்டும் அறிஞராகின்றனர் 
அறிவற்ற சமூகத்தில்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக