ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

.உசிலம்பட்டியிலிருந்து.....

அன்று உசிலம்பட்டியிலிருந்து கீரிபட்டிக்குச் செல்லும் வழியில் தானியின் (ஆட்டோ ) வேகதடுப்பு (பிரேக்) அறுந்துவிட சென்ற வேகத்தில் தொடர்வண்டி பாதையின் முன் உள்ள வேகத்தடையில் குதித்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. நல்ல வேளையாக அப்பொழுது தொடர்வண்டி வரவில்லை. இருந்தும் பிரேக் இல்லாமலே மெதுவாக கீரிபட்டிக்குப் போய் சேர்ந்தேன். நான் சென்று சேர்ந்த பொழுது இரவாகிவிட்டது.யார் வீட்டிலும் சாப்பாடு மீதமில்லை. குடும்பற்கும்,அந்த நேரத்திற்கும் அளவாகவே சமைத்திருந்தார்கள். இது நகரங்களில் காணும் நடைமுறை. ஆனால் கிராமத்திலும் தொற்றிக் கொண்டது. முன்பெல்லாம் கிராமங்களில் குடும்பம் சாப்பிடும் அளவுக்கு அதிகமாகவே சமைப்பார்கள். திடீரென்று வரும் விருந்தாளி , பக்கத்துவீட்டார் என அனைவருக்கும் உணவு காத்துக் கிடக்கும். ஆனால் இப்பொழுது வறுமை சூழ்ந்துவிட , உறவுகள் சுருங்கிவிட உணவும் குறைந்து விட்டது. இன்னொரு முக்கியக் காரணம் அவர்கள் சமைக்கும் ரேசன் அரிசி நெடு நேரம் காத்திருக்காது. இவ்வாறன அனுபவத்துடன் ஒரு சிலரை மட்டும் பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டேன். கீரிப்பட்டி சிக்கலை மைய்யமாகக் கொண்ட ஆவணப் படமொன்றை கையில் வைத்திருந்தேன்.அன்றுதான் பாரி செழியன் கொடுத்தார். மாமா சிவகுமார் அவர்கள் வழங்கிய மடிகணினியில் அப்படத்தை முப்பிலியான் என்பவர் வீட்டில் காட்டினேன். பத்துபேர் பார்த்தார்கள்.அவர்கள் பட்ட வேதனையை அவர்கள் முன் காட்டிய பொழுதுதான் இப்படியெல்லாம் சிரமப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள்.
மக்கள் திரைப்படக் கழகம் ஆரம்பித்தபொழுது எண்ணிய எண்ணம் சிவகுமார் அவர்களால் நிறைவேறியது. கிராமங்களுக்குச் சென்று குறும்படங்களையும்,ஆவணப்படங
்களையும் சினிமாவுக்கு மாற்றாக அறிமுகப் படுத்த வேண்டுமென்ற திட்டம் ஓரளவு செல்படத் தொடங்கியது. ஆனாலும் பெரிய திரையில் காட்டமுடியாதது மிகப் பெரும் குறையே. ஒளிப்பெருக்கியை (ப்ரொஜெக்டரை) வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு பொருளியல் சூழலும்இல்லை.
மறுநாள் காலையில் கஞ்சி குடிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். கிராமங்களில் கஞ்சிதான் வாசனையும் சுவையும் மிகுந்தது.அதிலும் பச்சை வெங்காயத்துடன் கஞ்சி சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். எந்த சமையல் நிபுணரும் அந்த சுவையை உருவாக்கமுடியாது. . மற்ற அனைவர் வீட்டிலும் சோறு மட்டுமே இருந்தது. இதன் மையக் காரணம் அரசு வழங்கும் அரிசி. ரேசனில் வாங்கும் அரிசியை சமைத்து சொராகமட்டுமே சாப்பிட முடியுமாம். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள். அதுவும் ஆக்கிய சோற்றை மீதம் வைக்க முடியாது. மீதமுள்ள சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிட்டால் கஞ்சி. ஆனால் அந்த ரேசன் சோற்றை நீர் ஊற்றி வைத்தால் கெட்டு விடுவதோடு நாற்றமும் அடிக்குமென மக்கள் சொல்கிறார்கள். ஒரு வழியாக கருப்பன் என்பவர் வீட்டில் பழைய கஞ்சி கிடைத்தது. அவர் கடையில் வாங்கிய குருணையை கஞ்சியாக்கியிருந்தார். அதுவும் புளிச்ச தண்ணிக் கஞ்சி. அதைச் சுவைக்க வறுத்த சுண்டவத்தல் துணைக்கு நின்றது.
சாப்பிட்டவுடன் மறுபடியும் ஆவணப்படத்தைக் காண்பித்துவிட்டு மதியமே கீரிபட்டியை விட்டு வெளியேறினேன். தொல்குடி மக்களாகிய தலித்துகள் வாழும் அப்பகுதியை விட்டு வெளியேற மனமில்லை. கள்ளங்கபடமற்ற மனதுடைய, யாரையும் எளிதில் நம்பும் குழந்தைகளைப் போன்ற தன்மையுடன் இருந்தார்கள். இவர்களைத்தான் சாதிச் சமூகம் சுரண்டிப் பிழைக்கிறது. ஆபத்தான அறிவற்ற விலங்கு சாதிச் சமூகத்திற்கு மனிதர்கள்தானே உணவு...

கீரிபட்டியில்....

லகப் புகழ்பெற்றது கீரிப்பட்டி.தொல்குடியான ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுத்த விலங்கு மனிதர்கள் வாழும் கிராமம் அது. ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளின் ஓயாத போராட்டத்தாலும்,தி.மு.க வின் முயற்சியாலும் இப்பொழுது பால்சாமி என்கிற தொல்குடி தலைவராயிருக்கிறார். கடந்த திங்களன்று அவரைச் சந்தித்தபோது எடுத்த படமிது. தலைவரென பட்டம் பெற்றபிறகும்  பதட்டம் குறையாமல்தான் இருக்கிறார்.