வியாழன், 28 அக்டோபர், 2010

விடுபடுதல்

முகம் தெறிக்க ஓடுகிறதென்
பாதச் சுவடுகளையாவது அடைந்துவிடத் துடிக்கின்றன
நான் துரத்தும் அடையாளங்கள்

அதிவேக ஓட்டத்தில் வெளியேற்றப்பட்ட
மூச்சுக் காற்றோடு
சில அடையாளங்கள் பறந்துவிட்டன

துரத்திய களைப்பில் சில
தூரத்திலேயே ஒதுங்கிக் கொள்ள
வழியின் பக்கங்களெங்கும் நின்றால்கூட
வலிமையோடு தொட்டுவிட நிற்கின்றன மேலும் சில

கைகளிலும் கால்களிலும்
ஆடைகளிலும் அதற்குள்ளிருப்பவற்றிலும்கூட
தொற்றிய பலவும் காணாமல் போய்விட்டன
பூத்த வியர்வையில் கழுவப்பட்டு

அப்பொழுதாவது தொற்றிக் கொள்ளலாமென
களைத்துவிழும் இடம்நோக்கி
என்னை முந்தி ஓடுகின்றன
என்னையும் நானையும் அழிக்கும்
அவைகள்

ஆசிரியரின் வன்முறை

மதுரை டி.வி.எஸ்.(சுந்தரம்) பள்ளியில் ஆரம்பப் பள்ளி மாணவனை குறிப்பேடு
எடுத்து வராத காரணத்தால் சோமசுந்தரம் என்கிற ஆசிரியர் கன்னத்தில் ஓங்கி
அடித்துள்ளான். இச்சம்பவம் பள்ளி துவங்கும் முன்பே நடந்துள்ளது.மாணவரை
அடிக்கக் கூடாது என சட்டமே இருக்க சட்டத்தை மீறி  துளி இரக்கமும்
இல்லாமல் அடித்துள்ளான்.அந்தப் பையனின் கன்னங்களில் சோமசுந்தரத்தின்
ஐந்து விரல்கள் அப்படியே பதிந்துள்ளன.வீங்கியும் சிவந்தும் உள்ளது
அச்சிறுவனுடைய கன்னம். அழுதழுது சோர்ந்து போயிருந்தன அவனது கண்கள்.
அவனைக் கண்டவுடன் அதிர்ந்த நான் பள்ளியின் தொலைபேசியில்(0452-2673666)
என் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தேன்.இன்று காலையிலிருந்து என்
மனம் வருந்திக் கொண்டே இருக்கிறது.சிறுவன்மீது நிகழ்த்திய இவ்வன்முறையை
அனைவரும் கண்டிப்போம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பருக்கை வேட்டை

பருக்கைகளைத் தேடும் முனைப்பில்
பறந்தது இருவேறு மனதுகள்
சிறிய வட்டைக்குள்
பெரிதாக இருக்கின்றன
வயிறு நிரப்பும் ஏக்கங்கள்
செல்போன்கள் வறுமையை ஒழித்துவிட
மழலைகள் மன்றாடுகின்றன
ஒரு கை பருக்கைக்கு
வாய்ச் சவடால்களின் இரைச்சல்களில்
வயிறு ஊதிக் கிடக்கும் சமூகத்தில்
மயிரைக் கூடப் புடுங்கமுடியவில்லை
பல எழுத்துக்கள்