வியாழன், 27 மே, 2010

மொழியற்ற சொல்

எல்லோரும் விரும்பும்படியான
சொல்லொன்றை எழுதிவிட்டு வாசித்தேன்
என்னைக் காணவில்லை

நான் விரும்பும்படியான
சொல்லொன்றை பிறகெழுதி வாசித்தேன்
பிறரைக் காணவில்லை

எனக்காகவும் எல்லோருக்காகவுமான
சொல்லொன்றை தேடிஎழுதி வாசித்தேன்
எழுத்துக்களையே காணவில்லை

ஒளி யொலியறியா எங்கும்பரவின
மாய உடம்புச் சொல்லொன்றே
எனக்கும் பிறருக்குமான
தொடர்பு மொழியாயிருக்கிறது

இன்றையச் செய்திகள்

செய்தி-1
                 விரும்பிய பொழுதெலாம் கேட்டுக் கொள்வதற்காக
                 பறவைகளின் மொழிகளை
                 அலைபேசியில் பிடித்து வைத்தேன்
                  நினைவுகளில் கரைந்துகொண்டிருக்கிற
                 அதனுடைய மூலங்களை கண்டுகளிக்க
                 சென்ற இடமெல்லாம் சென்ற இடமெலாம்
                  ஒலிகள் மட்டுமே மிஞ்சியிருக்க
                  பறவைகளைக் காணவில்லை

செய்தி-2
                 நூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்டுகளை
                 நடந்தே கடந்து பழக்கப் பட்டவன்
                  சலித்துப் போய்
                 கால்களை மடக்கிவைத்து
                 உந்துகளில் கடக்கத் தொடங்கினேன்
                 வேகமாயபோயும்
                  ஐம்பதுகளில் முடிந்துபோகிறேன்


செய்தி-3
                  வெங்காய வாடை நாவைதூண்ட
                  கஞ்சிக் கலயத்தை திறந்துபார்த்தேன்
                  சோறு மட்டும் மிஞ்சியிருக்க
                  நீராகாரம் உறிஞ்சப்பட்டு
                   உணவறைகளின் குடுவைகள் தோறும்
                   மருந்துகளால்
                   நிரப்பப் பட்டிருக்கின்றன
                

முரண்தொடை

மனநிலைகள் பலஒப்ப
நான் நாணாகமறுத்ததில்
என் திரிந்து யாராகிவிட்டது

எதிர்பார்ப்பு அத்தனைக்குள்ளும்
விரைத்துநின்று நுழைய மறுத்ததில்
விரிசலானது உறவுவடிவங்கள்

திரும்பிகொண்ட நாலாப் புறமும்
உள்ளே குளிரும்படி சிதற மறுக்க
எல்லாப் புறமும் எதிராய்ப் போனது

நினைத்துக் கொண்ட உச்சங்களில் எல்லாம்
நினைத்துப் பார்த்து ஏறமறுத்ததில்
கிடைமட்டம் கீழ்மட்டமானது

இழுவைகளின் விசைகளினுமேலாய்
எடைமிகுந்து அசைய மறுத்ததில்
அந்தரத்தில் மிதக்கிறது வாழ்வு

முன்னிலைக்கு மாறாக
தன்மைநிலைகொள்ள
தன்மைக்கு மாறாக 
எந்நிலைகண்டாலும்
மறுப்பு ஒன்று மட்டுமே
மானத்தைக் காத்துக் கொண்டிருக்கிறது

நிரம்பிய வெற்றிடம்

கொடுமைகளைத் தூண்டிவிட்டு 
சாட்சியாகவும் இருந்துகொண்டு
ஒன்றுமறியாதவையாய் ஓடுகிறது 
கடிகாரம் 


அத்தனையும் நினைவுப் படுத்தி 
கணக்குத் தீர்க்கா வெற்றுத் தாளாய்
கிழிந்து கிழிந்து போகிறது 
நாட்காட்டி 


கழிப்பதற்காகவே தின்னத் தேடியலையும்
தவிர்க்கவியலா சடங்கு தவிர்த்து 
திட்டமிட முயலுகையில் இருளுக்குள்ளும் 
அதையும் வசதியாக்கி திட்டமிட முயலுகையில் 
வெளிச்சத்திற்குள்ளும்
பயனற்றே புரளுகிறது 
உலக உருண்டை 


தலைகீழாய் புரண்டாலும்  
ஈர்த்த்துக் கொள்ளும் புவிவிசையாய் 
தொடர்ந்துகொண்டே இருக்கிறது 
அவலம் 


குறிக்கவேன்டியதைத் தவிர 
அத்தனையும் குறித்து நிரப்பி 
தற்குறிகளால் குதறிக் கிடக்கிறது 
வரலாறு 


சொல்லிக் கொண்டேயிருக்கும் கும்பலும் 
கேட்டுக் கொண்டேயிருக்கும் கூட்டமும்
கலைந்தமைந்து சுழலுகிறது
எல்லைசேரா சக்கரமாய் 


காலக் கழிவுகளைச் சுமக்கும் மானுடக் கூட்டம் 
அதுவே சுகமென்று ஒரே இடத்தில் 
எண்ணெய்சாத்தும் கற்களாய்

நவீனப் பார்ப்பனியம்

பார்ப்பன அவைகளைப் 
பின்னுந்தியோடும் 
உருளிக்குள் மறைந்த ஆரங்களாய் 
கணக்கற்றுக் கரையுமென்
கண்ணியச் சமர்களின் 
வீரியம் விழுங்கி வினைமிளிர்ந்து 
வயிறுபுடைத்து வன்ம சூழ்கொண்டு 
அலையும் நாயின் நாவில் வடியும் 
திரவக் குடுவைகளின் கொதிநிலையில் 
காவிச் சுவர்கொண்ட ஆய்வுக் கூடங்களில் 
மரபீநிமாற்றுத் தொழில்நுட்பத்துடன்
நன்செய் நிலமெங்கும் விதைக்கபடுகின்றன 
புதிய புதிய
பார்ப்பன அவர்கள்

நுன்நோக்கம்

மொழிக்குள் மொழிகிளையும் 
சொற்கள்  புனையும் வடிவில் 
சீர்தலை மிளிர்ந்து 
முதற் கரு உரிப்பொருளுடைத்து
மூலப்பொருளுணர்த்தும் 
கலைநய மிழையோடுமுயற்
தொழில்நுட்பமிகு 
பன்மைய வரிகள்தோறும் 
தெரிகிறது 
அழகிய தமிழ் முகம்

புதன், 19 மே, 2010

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி
தமிழ் முதல்வன்

வெளியேற்றப்பட்ட விந்தின்
அமைதிச் சுற்றிவளைப்பில்
தணியும் எழுச்சி

ஒளிச்சேர்க்கை நிகழ்வில்
கசியும் நீர்ப்பெருக்கம்
விரியும் இலை

உதிர மறுத்து
நிரம்பும் மகரந்த வாசனை
நிலம் கவ்வும்
முகில் கூட்ட ஆகாயம்

இதங்களின் நிகழ்வில்
இறுக்கம் மிகுந்து
விரிந்து பரந்த நெஞ்சு
இறகுகளாய் பறக்கின்றன
ஒளித் துகளினிடையில்

குலை நடுங்க                                                         
வேலிகள் உணர்கின்றன
 குருக்கெதிர் மாற்றங்கள்

எல்லாம் உணர்ந்துகொண்டு
உடற்பயிற்சி செய்கின்றன
ஓணான்கள்
t.muthalvan@gmail.com
நன்றி- உயிரோசை

செவ்வாய், 11 மே, 2010

தேர்தல் களம்

எப்பொழுதும் எதிலும் 
ஒட்டிக் கொள்வதற்காய்  பிசுபிசுத்த 
உள்ளங்கள்  விற்கும் சாலைகளின் 
வெள்ளைக் கோட்டில் நிற்கிறேன் 
சாதனைப் பட்டியலை புறமுதுகில் ஒட்டி 
திடுக்கிடத் தாண்டிச் செல்கின்றன 
எப்பொழுதும் எதையும் 
விழுங்குவதற்கான  வாய்பிளந்து 
ஈக்கள் மொய்க்கும் முகங்கள்

சிலுவை மீதேறிய சுமை

குறுக்கையில் வழியும் இயேசுவின் 
குருதியை குடிப்பதற்காய் 
பூனைகள் பதுங்கியிருக்கும் 
ஆலயத்தில் அடைக்கலம் தேடி 
புகுந்த எலிகளின் பசிக்கு 
அப்பங்கள் கிடக்க 
பூனைக்கும் எலிக்குமிடையிலான
தடுப்பில் ஏறிநின்ற குரங்கொன்று 
இரண்டும் 
சண்டையிடும் காலத்திற்காய் 
காத்துக்கிடக்கின்றது  

முன்னறிவு

அவனுடைய வறுமைதீர
என்னைக் கோயிலுக்கு போகச்சொன்னான் 
சோதிடக்காரன் 
ஏற்கனவே அங்கு போனவர்கள் 
பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்கள்

போலிகள்

ஈழத் தமிழரவலத்தில் 
துடித்ததாய் சொல்லிய 
இந்தியத் தமிழரொருவரின் 
ஆடைஎங்கும்  ஒட்டியிருக்கிறது 
தொல்தமிழரின் ரத்தம்

பாதுகாப்பு

காப்பாற்றச் சொல்லி 
கடவுளை  வேண்டப்போனால் 
கடவுளையே காப்பாற்ற 
பூட்டுகள் தொங்கின 

குடியாட்சியில் நான்

கழிப்பறைக்குப் போனேன் 
காசு கேட்டார்கள் 
அருகிலேயே இருந்தது 
அரசு அலுவலகச் சுவர் 
பெய்துவிட்டு வந்தேன்

உவமை

மனித உடல்
விலங்குத் தலை
பிள்ளையார்கள்
அர்த்தமுள்ள இந்து மதம்

நன்றி மறதிகள்

நிறமற்ற வெளிச்சம் வீசும் 
உச்சிப் புயலின் எதிர் திசையில் 
படியும் நிழலில் விழுந்த 
வியர்வை குடித்த மண்ணெங்கும் 
விளையும் மணிகளுக்குள் பொதிந்த என் 
உப்பின் உணர்வற்று நெளியும் 
நாக்குப் பூச்சிகள் 
மலவாயை விட்டு வெளியேறினால் 
செத்துவிடுவேன்  என்கிறது

மண மாக்கள்

பெயருக்குப் பதில் 
சாதி 
பண்பிற்குப் பதில் 
மதம் 
மணமக்கள் தேவை விளம்பரங்கள் 
இணைத்துக் கொண்டிருக்கின்றன விலங்குகளை 
பிரித்துக் கொண்டிருக்கின்றன  மனிதரை

செவ்வாய், 4 மே, 2010

எடையற்ற பட்டங்கள் -(கவிதை)

பறவைகள்  கூடு திரும்பும்வரை 
குனிந்து நிமிரும் கட்டற்ற பொழுதுகளில் 
குறுக்கில் வெட்டும் மின்னலின் 
மீயாற்றலைத் தொட்டறியவில்லை

ஒட்டிய மண்வெட்டியுராய்ந்து
தீப் பொறித்த பொக்குலக் கங்குகளேந்தும் உள்ளங் 
கையுடன்கை ஒருமுறையும் இணைத்ததில்லை 

பன்னருவாச் சுனைகளறுத்து ரணம்படுத்த
ஆயுமற்று தானியமீட்டும் சமர்க்கள 
வெப்பம் வீசும் திசையையு  மறியவில்லை 

எடைமிகுந்த பாறாங் களைப்பு இரவாயமுக்க 
ஒருக்காலும் ஓய்வறியா உடலின் இருத்தலையும் 
உண்டபின்னும் எரிச்சலடங்கா வெம்மையின் 
வெளிமிகு இரைப்பையின் வலியும் உணரவில்லை 

எழுதியதைப் படித்துவிட்டும் 
படித்ததை எழுதிவிட்டும் அறிஞராகின்றனர் 
அறிவற்ற சமூகத்தில்