புதன், 23 ஜூன், 2010

தமிழ் முதல்வன்

அம்மா விலிருந்து பேசப்பழகிய
முதல் சொல்லைக் கடந்து

அ விலிருந்து எழுதத் தொடங்கிய
முதல் எழுத்தைக் கடந்து

தாய்மொழியிலிருந்து  கற்கத் தொடங்கிய
முதல் மொழியை கடந்து

எழுதமறுத்த தூவலேந்தி வருகிறது இரு கைகள்
பூகோளத்தைக் கட்டியணைக்க

வெள்ளி, 18 ஜூன், 2010

தாய் மொழியே அடையாளம்

         தமிழ் " செம்மொழி " என உறுதி படுத்தப்பட்ட  நிலையில், அதைக் கொண்டாடும்  தமிழக அரசு சில வேலைகளைச செய்தால் மட்டுமே, கொண்டாட்டம் முழுமையும் செழுமையும் அடையும்.    இல்லையெனில் விளம்பரமாக மட்டுமே  முடிந்து போகும்.
                                                       னக்குள் பொதிந்துள்ள ஆற்றலை வெளிப்படுத்தி மானுடக் கூடத்தின் பார்வையை ஈர்க்கும் வெற்றியின் அடையாளமே ஒவ்வொருவரும் அடையத் துடிப்பது. உடல் வலிமையின் மூலமே ஆதிகாலத்தில் தன்னை அடையாள படுத்திய மனிதர் , பிறகு எண்ணத்தையும் எழுத்தையும்  கொண்டு அடையாளம் பெற்று வருகின்றனர். இதையே புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவ இயலாளர் டெகாத், 'நான் சிந்திக்கிறேன். எனவே நான் இருக்கிறேன்' என்றார்.
                                                     சிந்தனை என்பது ஆய்வு . ஆய்வு என்பது மொழி+அறிவு புரியும் வினை. வினையின் விளைவு படைப்பு. அது இலக்கியமாகலாம்; தலைமையாகலாம்; இயந்திரமாகலாம்;தொழில் நுட்பமாகலாம். ஆக, படைப்பாற்றலே அடையாளம் பெற உதவுகிறது. கற்பதையும் கேட்பதையும் அதுபோல வெளிப்படுத்துவது  நகல்.  ஆனால், அதைக் கொண்டு எண்ணத்தின் வழியே புதியதொன்றை உருவாக்குவது படைப்பு. ஆக, படைப்புக்குத் தேவை சிந்தனை. சிந்தனைக்குத் தேவை மொழி. மேலும் தேடல், தொகுத்தல், ஒப்பிடுதல், வரையறுத்தல் போன்ற நேர்த்தியான நெறிகளுக்கு மொழிதான் வழி. இப்படியான இயங்கியலுக்கு பிறமொழியைக் காட்டிலும் தாய்மொழியே சிறப்பாக உதவ முடியும். ஆகவே தாய்மொழிதான் அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது.
                                      தமிழர் தொன்மையில்  மிகச் சிறந்த அடையாளத்தைப் பெற்று விளங்கினர். உலகப் பொதுமறை திருக்குறள் அதற்குச் சான்று. ஆனால், அண்மைக் காலமாக தமிழர் அடையாளமிழந்து வருகின்றனர். தன்னையே மறந்து வேறு ஒன்றாய்க் கிடக்கின்றனர். தாய்மொழியைத் தாழ்த்தி பிறமொழியை உயர்த்துகின்றனர். தனித் தமிழ் வழியில், தமிழர் தனித்து நின்றபோது கொண்டிருந்த பண்புகளிலிருந்து பிறமொழிக் கலப்பால் வழுக்கி விழுந்தனர். தமிழும் சிதைந்தது.
                                        இதைப் பெரியார் அவர்கள் ' மதத்திற்கு ஆதாரமாய் இருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களேயொழிய ,, தமிழ்மொழி நூல்களால் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது. தமிழிலிருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலேயே நமக்கு பழந்தமிழ் கிடைத்து விடும்'   என்று ஆய்ந்து கூறுகிறார்.அதன்படியே, அவரின் வழியே திராவிட இயக்கங்களும் வடமொழியை எதிர்த்து நின்றன. அப்படியே பழந்தமிழ்ப் பண்புகளைப் பாதுகாத்து, மேலும் செறிவூட்டி, அரிய பெரிய  கருத்துக்களையும், ஆய்வுகளையும் நுட்பங்களையும் தமிழில் படைத்து நிற்கவும், அதற்கு துணை நிற்கவும் , தூண்டுவதற்கும் மாறாக வடமொழிக்குப் பதிலாக ஆங்கிலத்தை நுழைக்கச்  செய்தன.
                                      ஆங்கிலமொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன எனக் கூறும் பெரியார் அவர்கள் அதற்கிணையாக தமிழிலும் நூல்கள் படைக்கப் பட வேண்டும் எனக் கூறுவதற்கு மாறாக, குழந்தைகளுக்கு தாய்ப் பாலில் ஆங்கிலத்தைக் கலந்து கொடுங்கள் என்று ஆங்கில வழிக் கல்விக்கு வழி வகுத்தார். ஏற்கனவே, வெள்ளைத் தோளில் உயர்வுப் பார்வை வீசியவர்களுக்கு ஆங்கிலமோகம் தலைக்கேற  இதுவும் ஒரு காரணமாயிற்று. ஆங்கிலத்தின் மூலமும் மூடநம்பிக்கைகள் மூச்சைப் பிடிக்குமென்று அவர் கருதவில்லை. அல்லது தமிழ் வழிக் கல்வியை அவர் வெறுத்தார்.
                                        விடுபட்ட விவரங்களை, செய்திகளை பிறமொழி வழியே அறிந்து கொண்டு தமிழராக தன்மொழி வழியே சிந்திப்பதை மறுத்து ஆங்கிலத்தில் படித்து அதிலேயே சிந்தித்து மேலை நாட்டுக்காரர்களாகவே தங்களை  வயப்படுத்தித தாழ்த்திக் கொண்டனர். மேற்கே எந்த ஒரு விளைவும் இங்கு வியப்பைத் தூண்டியதற்கும்,  நாற்றம் வீசும் சில மேலைப் பண்பாடு நறுமணமாய் இங்கு நுகரப் படுவதற்கும் ஆங்கில மொழியே முழு முதற் காரணமாகும். ஒருவரது மூளை முழுவதும் பரவியிருக்கும் பிரதிபலிப்பு நியூரான்கள் எதிரில் இருப்பவரின் உணர்வுகள், அசைவுகள் ஆகியவைகளை  தமது மூளையிலும் தூண்டி விட்டு எதிரிலிருப்பவரின் நகலாகவே அவரை ஆக்கும் என்பது சமூகம் சார்ந்த அறிவியல் துறையின் கண்டுபிடிப்பு.
                                          இதனூடாகக் கவனித்தால், ஆங்கிலமும் அது சார்ந்த அனைத்து ஆதிக்கமும் தீவிரமாக வெளிப்படும்போது அப்படியே ஏற்றுக் கொள்ளும் நரம்பியல் ஒத்திசைவு ஏற்படுகிறது. அனிச்சையாகவே அடிமைத்தனம் ஆட்கொள்ளப்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அமெரிக்க வல்லாதிக்கம் சீரழிக்கும்போது அதை அறிந்தும் அறியாமலும் கிடப்பதற்கு இதுவே காரணி
                                          அடிமை வாழ்வே ஆனந்தம் என்று நினைத்திருந்த இவ்விந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கிலமொழியறிவுதான் என்று கூறிய பெரியாரின் கருத்துக்கு மாறாக இன்று, ஆங்கில மொழியறிவே இவர்களை அடிமைகளாகவும் ஆகிவிட்டது.
                                         பகுத்தறிவாய்ந்த  பண்புத்துவம், தொன்றுதொட்டு விளங்கும் தொன்மைத்துவம், இதர மொழிகளின் தாய்மைத்துவம் குறித்து தமிழை உயர்த்திப் பிடித்த பெரியார் அவர்கள் தாய் மொழிக் கருத்தில் வேறுபட்டு நிற்கிறார்.   தாய் மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்  என்றார். ' நம் தாய் நம்மைப் பெற்றெடுத்ததும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழிதான் பேசுவோமே தவிர , நம் தாய் தமிழ்ப் பேசியதன் காரணமாக பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக  வெளிவருமா? '  என மேலும் அவர் தாய் மொழிக்கான பொருளுருவையே அறியவில்லை. தாய் மொழியை கருத்தாக மட்டுமே நினைத்தவர் பொருளாக நினைக்கவில்லை. அவரின் கருத்தின் வழியே திராவிட அரசுகள் ஆங்கில வழிப் பள்ளிகளை வளர்த்து விட்டன. இன்று அந்தப் பள்ளிகளின் ஆதிக்கம் தமிழைச் சிதைப்பதோடு அல்லாமல் தமிழ்க் குழந்தைகளின் எண்ணத்தையும் சிதைத்து வருகிறது. வெளிக்காட்ட முடியாத மன அழுத்தங்களுக்கு ஆங்கிலப் பள்ளிகளின் குழந்தைகள் இரையாகின்றனர். இந்த இடத்திலதான் தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த  வேண்டியிருக்கிறது. காதால் கேட்டு, வாயால் பேசி, உள்ளதால் வாங்கிய பாடமே தாய் மொழி என்று புரிய வைக்க வேண்டியிருக்கிறது.
                                             கருக் குழந்தையின் மூளை அமைப்பு ஏழாவது மாதத்தில் முழுமையடைந்து அறிவைப் பெறும் ஆற்றலையும் பெறுகின்றது. தாயின் பேச்சொலி மூளையில் அதிர்வுகளாகப் பதிவாகின்றது. அதனால்தான் கருவுற்றவர்களை நல்லதைப் பேசவும், கேட்கவும் சொல்கிறது தமிழர் பண்பாடு. இவ்வாறு ஏழு முதல் பத்தாவது மாதம் வரை தாயின் மூலம், ஒலிகளைப் பதிவு செய்த குழந்தையின் மூளை, பிறந்த பின்பு வெளியில் கேட்கும் ஒலிகளை பதிவு செய்கிறது. பிறப்பிற்கு முன்னும் பின்னும் பதிவான, பதிவாகும் ஒலிகள் ஒன்றோடொன்று ஒன்றிப் போவதால் குழந்தையின் புரிந்துணர்வு திறன் வெகுவாக அதிகரிக்கின்றது. ஒலியும் ,( சைகை )  அசைவுகளும் தொடர்ந்து ஒன்றிணைவதால் குழந்தையின் புரிந்துணர்வும்  , அதனை வெளிப்படுத்தும் வேகமும் அதிகரித்து குழந்தை மழலை மொழி பேசுகிறது .  பள்ளியில் ஆசிரியரின் மொழி, பயிற்றுவிக்கும்  பாடம் ஆகியவை அதுவரை பழகிய தாய்மொழியாக இருந்தால், கருவறை முதற்கொண்டு உள்வாங்கிய ஒலி, அது உணர்த்தும் பொருள் ஆகியவை ஒத்துப் போகும் நிலை ஏற்பட்டு  எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மாறாக, பதின்மப்  (மெட்ரிக்) பள்ளிகளைப் போல வேற்று மொழியில் கற்பிக்கப்படும் பொழுது அந்த வேற்றுமொழியின் ஒலியும் பொருளும் முன்னதாக மூளையில் பதிவான தாய்மொழியோடு ஒத்துப் போகாததால்  புரிதலின்றி திகைக்கின்றது. பொருள் அறியாமல் குழம்புகிறது. அதன் மூளையும் சோர்வடைகின்றது.. இது குழந்தையின் நினைவாற்றல் திறன்மீது ஏற்றப்படும் தேவையற்ற  சுமையாக அமைகிறது. இதனால், பாடத்தை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, உணர்ந்து உள்வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக வேற்று மொழியினை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நகல் இயந்திரமாக குழந்தை மாறுகிறது.
                                       இந்த இடத்தில்தான்  தானாகச் சிந்திக்கும் ஆற்றலுக்கான அடித்தளம் மூளையில் தகர்க்கப்படுகிறது. இதன் மூலம் தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும் வரை தற்சிந்தனையில்லாமல் பிறர் சிந்தனையின் வழியே அடிமையாகி, எதிலும் சிறந்து விளங்க முடியாத நிலை ஏற்படுவதாக சொல்கிறார்  மணவை முஸ்தபா. மூளையிலுள்ள உணர்ச்சி  இயக்க அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது தாய்மொழி மட்டுமே.ஒவ்வொரு  மொழியினரும் தனிப்பண்பாடும் மனப்பான்மையும் கொண்டு விளங்குவதற்கு அவர்களுடைய தாய்மொழியே காரணம் என்கிறார் ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் சுனோடா.
                                         இதனால்தான், உலகமுழுக்க தாய்மொழிக் கல்வி வலியுறுத்தப்பட்டு  நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தாய்மொழியே சிறந்தது என்பதினால்தான் இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு,ஜப்பான்,ரஷ்யா, சீனா முதலிய நாடுகள் உயரத்தில் நிற்கின்றன.அதனால்தான் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்த பள்ளிகளை கர்நாடகம் தடையும் செய்தது.
                                          தமிழ் நாட்டில் கலைஞரின் அரசு இப்பொழுதான் தாய்மொழிக் கல்வியை முதல் வகுப்பிலிருந்து தொடங்கியுள்ளது. இந்தத் தொடக்கம் அனைத்து வகுப்புக்களிலும் நிறைவதற்குள் பல தலைமுறைகள் தாய்மொழி அறியாமலேயே வெளியேறிவிடும். அப்படித் தமிழேயறியாமல்  வெளியேறிய தலைமுறைகளின் குழந்தைகள் மேற்கண்ட ஆய்வுகளின்படி மீண்டும் தமிழ்வழியில் பயிலும்போது பல சோதனைகளைச் சந்திக்கலாம்.அதன்மூலம் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியே வலியுறுத்தும் சூழல் உருவாகும். தமிழ்வழிக் கல்வி புறக்கணிப்புக்கு உள்ளாகும். தொலைவில் நோக்கினால் , இவ்வாறு தமிழ் முற்றிலும் அழிவதற்கு இதுவே வழியாகலாம்.
                                          தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு, உடனடியாக தமிழ் வழிக் கல்வியை அனைத்து வகுப்புகளிலும் நடைமுறைப்படுத்தி தமிழை நிலைபெறச் செய்யவேண்டும்.பாடமொழியாக மட்டுமே இல்லாமல் பயிற்று மொழியாகவும் பயன்படுத்தும் பொழுதுதான் அது நிலைபெறும். ஒருமொழி எந்த அளவுக்கு பயிற்றுவிக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அம்மொழியின் வாழ்நிலை நீடித்திருக்கும் என்று ஆய்வுகள் சுட்டுகிறது. அடிப்படை முதல் ஆய்வுக் கல்வி வரையிலும்; அறிவியல், தொலைத்தொடர்பு, நிர்வாகம் போன்ற முன்னிலை வகிக்கும் துறைகளிலும் உடனடியாக தாய்மொழிக் கல்வி பயிற்றுவிக்கத் தேவையான சொற்களும் நூல்களும் உருவாக்கப்பட  வேண்டும். ஒவ்வொரு இயலிலும் உள்ள புதிய பரிமாணத்தையும் நுட்பத்தையும்  தொடுகின்ற தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும்.அப்பொழுதுதான்   பயிற்றுமொழி நோக்கம் வெற்றியடையும்.
                                             உயர்நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை நடைமுறை படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணாநிலை மேற்கொள்ளும் இந்த சமயத்திலாவது  அரசுதுரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் செம்மொழி மாநாடு வெற்று விளம்பரமாகவே முடிந்து போகும்

செவ்விலக்கியப் பாதையில் ஒடுக்கப் பட்ட குரல் - திலக பாமா

ஆயுதக் கோடுகள் விமர்சனம்


           -திலக பாமா
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விலிருந்து கிளம்பிய எழுத்துகள் வலியைமட்டும் கொட்டுவதாக இருந்த  காலங்கள் போன பின்பு இன்று மொழிக்கான பிரயத்தனங்களும் ,தங்களுக்கான செவ்விலக்கியப் பாதையை உருவாக்கிக் கொள்ளும் எத்தனங்களும் ஆயுதக் கோடுகளின் தொகுப்பில் பலமான முன்னகர்தல்கள்
                                                        வ்வொரு கவிதைத் தொகுப்பு வாசிப்பின் போதும் கவிதை என்பது என்ன என்ற கேள்வி முன்னால் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் படைப்பாளி ஏற்கனவே இருக்கின்ற இலக்கணங்களின் வழிச் செல்பவன் அல்ல. பழைய வழித் தடங்களில் இடர்களை கண்டபோது புதிய தடங்களை தேடுபவன். தேடியதை தேடியதன் வலியை அனுபவத்தை கண்டடைந்த மகிழ்வை எழுத்தின் வழி பகிர்ந்து தருபவன்.எழுதப் படுகின்ற கலங்களும் கேட்கின்ற மனிதர்களும் கூட எதை கவிதை பேச வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். கருத்தியலைத் தாண்டி அவற்றை எழுதி பார்கின்ற பிரயத்தனத்திலிருந்தும்   கூட கவிதை எது என்பது தீர்மானமாகின்றது. என்னைப் பொறுத்த வரையில் வாழ்வின் சரடுகளை நடப்பியல் யதார்த்தமோடு சொல்லிச் செல்கின்ற தருணம் எழுத்து இலக்கியமாகின்றது. அதிலும் சொல்லின் பொருளில் புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்கி போகின்ற இடம்தான் கவிதைக்கான இடம். அனுபவத் திரட்சியாக வந்து விழுகின்ற சொற்கள் ஒவ்வொரு சொல்லையும் நிகழும் கணமாக்கிக் காட்சியாகிப் போகும். ஆயுதக் கோடுகள் தொகுப்பைப் பொறுத்த வரையில் வாசகனாக அது எனக்குத் தந்த அனுபவத்தையும் விமரிசனாக நான் ஆய்ந்து பார்த்த விடயத்தையும் இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
                                              நான்கு வருடங்களுக்கு முன்னால் மதுரையின் ஒரு மேடையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொற்களை அர்த்தமிழக்கச் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆங்கில வசைச் சொல் எப்படி அர்த்தமிழந்து பல்வேறு தளத்திலேயும் உபயோகப்படுத்தப் படுகின்றதோ அதுபோல் தமிழ் மொழியின் சொற்களையும்  அர்த்தமிழக்கச் செய்யவேண்டும் என்று சொன்ன போது அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அப்படியான வருத்தம் இப்பொழுது வாசிக்கக் கிடைன்ற இத்தொகுப்பில் கடந்து போயிருப்பதையும் சொற்களுக்கான மொழிக்கான தேடல் நிறைந்து கிடப்பதுவும் நம்பிக்கை தருகின்றது அல்லது எதிர்பார்ப்பைத் தருகின்றது. இது இத்தொகுப்பின் முதல் பலம்.
                                              வார்த்தைகளை அர்த்தமிழக்கச் செய்வதைவிட அதன் அர்த்தங்களை இன்றைக்கானதாய்  நமக்கானதாய் மாற்றிக் கொள்வது அவசியம். அந்த அவசியம் உணர்ந்த தொகுப்பாக இத்தொகுப்பில் கவிதைகள் இருக்கின்றன. மயக்கப் படும் வார்த்தைகள் கவிதையில் மிதியடிப் பதிவுகள் போன்ற வார்த்தைகளும் தூவலியல் கவிதையும் மொழியின் வாசிப்பை மாற்றிப் போடும் பலம். இக்கவிதைகளில் சமூகப் பொறுப்புணர்வும் , படைப்பாளியின் சமூக அக்கறையும் கோபமும் முதல் வாசிப்பிலேயே எல்லோருக்கும் தெரிந்து விடுகின்ற விஷயம். அதையடுத்து அக்கோபம் எவ்விடத்தில் கவிதையாகின்றது என்பதில் இருக்கின்ற வாசகத் தேடலுக்கு "அநாதை மனம்" கவிதை நல்ல பதிலாகப் போயிருக்கின்றது.
                                           " வன்னழுத்தங்களால் பிளக்கப்பட்ட அணுதொகுப்பின்
                                            வலியுணர் வொலியதிர்வுகள் அடுக்கப் பட்டு 
                                            பீறிட்டு வெளியேறும் உயிரிணைப்பின்
                                            ............. "
                                           
                                            அடுத்து  ஒரு விமரிசனாக தொடர்ந்து இங்கு நடக்கின்ற அரசியல் எழுத்தரசியல் , சமூக அரசியல் எல்லாம் ஒரு படைப்பாளியை எங்கெங்கு அசைத்துக் கொண்டிருக்கிறது என்று அவதானிக்கின்ற ஓர் ஆளாக அடுத்த கருத்தோட்டத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
                                             இன்றைக்கு படைப்பாளியின் வாழ்வு  வந்து தளத்தை தீர்மானிப்பதை விடுத்து எழுத்தின், இலக்கிய வாதிகளின், பத்திரிக்கைகளின் வியாபார அரசியல் பலநேரம் எழுத்தின் தளத்தை ஆக்கிரமித்து விடுகிறதுமுண்டு அப்படியான பாதிப்பை சமீப கால் தொகுப்புகளில் நிறையவே காண முடிகிறது. பெண்மொழி பின் நவீனத்துவம் என்று பத்திரிக்கையின் வியாபார உத்திகளின் பின்னால் நகலும் எழுத்தாளனின் மனமும் நிதர்சன மாயிருக்கிறது. வாழ்வு வழியாக எழுத்தை கொண்டு செலுத்தப் பழகிவிட்ட படைப்பாளி ஒன்று நேர்மையாக அந்த அரசியலுக்குள்ளும் அல்லது எதிர்க்கும் போதும் இவ்வரசியலுக்குள்ளுமாக செயல்படத் துவங்கி வ்டுவது தவிர்க்க முடியாததாகிப் போகின்றது.
                                              ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்வில் மலமள்ளுதலும் கழிவறைகளோடும் வாழ்வாக இருந்திருந்த மக்களின் எழுத்துகளில் தவிர்க்க முடியாமல் வார்த்தைகள் வந்து விழுந்த காலம் போய் அந்த வாழ்வை விட்டு நகன்று விட்ட மனிதர்களும் அதே வார்த்தைகளை தங்கள் உவமான உவமேயங்களுக்கு  தங்களையறியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாமலிருப்பதை இக்கவிதைகளிலும் அடையாளம் காண முடிகிறது.
                                              ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்விலிருந்து கிளம்பிய எழுத்துகள் வலியை மட்டும் கொட்டுவதாக இருந்த ஆரம்ப காலங்கள் போன பின்பு இன்று மொழிக்கான பிரயத்தனங்களும் தங்களுக்கான செவ்விலக்கிய பாதையை உருவாக்கிக் கொள்ளும் எத்தனங்கள்  எல்லாம் ஆயுதக் கோடுகளின் தொகுப்பில் பலமான முன்னகர்தல்கள். அதே நேரம் ஒடுக்கப் பட்டவர்களின் மொழி என்று இயற்கையியலாக பேசிக் கொண்டிருந்த எழுத்தின் சாயலை விட்டு விட்டால் ஒடுக்கப் பட்டவர்களின் மொழி என்பதிலிருந்து விலகி விடுவோமோ என்ற அச்சம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
                                           மக்களரசின் மகன்மாக்கள் போன்ற கவிதைகள் அந்த அச்சத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. அறிவாளிகளின் அரசியல்  போன்ற கவிதைகள் மக்களின்  வாழ்விலிருந்து என்றில்லாது நான் ஏற்கனவே சொன்னது போல் இலக்கியவாதிகளின் அரசியலை எதிர்த்து எழுதிப் போகின்றது.
                                           உதாரணமாக, ஒரு இலக்கிய நிகழ்வு நடக்கின்றது. அதில் நடக்கின்ற தனி மனித செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை. அதை ஒரு கவிஞர் தனது கவிதையில் பதிவாகுகிறார். என்னைப் பொறுத்த வரை அவற்றை ஒரு படைப்பாளி கடந்து விடலாம் என்று நினைக்கிறேன்.ஆயுதக் கோடுகளில்  ஆங்காங்கே அந்த எதிர்ப்பரசியல் தெரிகிறது. அது அவ்வெழுத்தின் பலவீனமாக நான் பார்க்கிறேன்.
                                           ஏற்கனவே இருக்கின்ற செவ்வியல் தன்மையை அப்படியே படி எடுப்பதுவும் பலவீனமாகவே அமையும். புதிய படைப்பாளிகள் புதிய செவ்வியல் கோட்பாடுகளை உருவாகுவது அவர்கள் எழுத்துக்கும் , எழுத்து கொண்டிருக்கும் அரசியலுக்கும் மிக பெரும் வலு சேர்க்கின்ற விசயமாகவே இருக்கும்.
                                           இன்னுமொன்று, அதிகார வர்க்கமோ ஒடுக்கப் பட்ட இனமோ எல்லோருக்கும் வாழ்வைப் பற்றிப் பேசும்போது அவர்களே அறியாமல் பெண் குறித்த அவர்களது எண்ணங்கள் வந்து விழுந்து விடும்.கவிதையில் பொய் பேச முடியாது. அது படைப்பாளியின் பலம் பலவீனம் இரண்டையுமே காண்பித்து விடும். அவ்வகையில் பெண் குறித்த பார்வைகள் படைப்பாளிகளிடத்தில் அவசியம் மாற வேண்டும். ஆண் வதைபட்டால் தியாகமேன்பதும் , பெண் வதைபட்டால்  கற்பிழப்பு என்பதும் ஆண் தலைப் பட்ட சமூகம். என்று வாசித்த வரிகள் நினைவில் வந்து போகின்றது.அப்படியான பெண்எதிர்நிலை பார்வைகளை தொகுப்பு நெடுகிலும் பார்க்க முடிகிறது. வழி மொழிதல் , சேயற்ற தமிழகம்  போன்ற கவிதைகளில் "கட்டுக் கதைகள் கலவி செய்யும் அந்தப் புறமாக இருக்கிறாள்" எனும் வரிகள் அதற்கு உதாரணம்.அந்தப் புறம் , சிவப்பு விளக்கு ஆகிய பிரதேசங்கள் அவச் சொல்லாக மாறி போனது பெண்ணால்தான் என்ற தோரணை கவிதைகளில் வழிகிறது.முற்போக்கு சிந்தனை தமிழ் முதல்வனுக்கும் இல்லை என்பது தெரிகிறது. சொல்லிப் பழகிய சொல்லின் மயக்கத்தில் அர்த்தம் மாறிப் போனதை அறியாமல் உச்சரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
                                   நான் உறங்கிய போது என்னோடு புணர்ந்தவள் 
                                   தவித்த வாய்க்கு தண்ணீர் கூட மறுக்கும் 
                                   எதிரிகளையும் பெற்று விட்டிருக்கிறாள்  (வழி மொழிதல் )
                                  
                             
                                   தன்னலத் தண்டன்களால் 
                                   கற்பழிக்கப் படுவதற்கு    (சேயற்ற தமிழகம் )
                                    இந்த வரிகள் பிள்ளைகள் பெருமை தேடித் தருகின்ற போது என் மகன் என்பதுவும் , அசந்தர்ப்பவசமாக சிக்கலுக்குள்ளாகும்போதும்  நீ பேத பிள்ளையின் லட்சணத்தைப் பாரு என தாயை நோக்கி சூழும் ஆணாதிக்க மனோநிலை சாமான்யனிடம்  இருக்கலாம். கவிஞரிடம் இருக்கக் கூடாது..தொடரும் ரவிக் குமார் போன்ற கவிதைகள் ஆதிக்க சாதி மேலான எதிர்ப்பைச் சொல்ல பெண்ணுடல் தன் வன்மத்தை நிகழ்த்திக் காட்டுகின்றது. இந்த வன்மம் காலம் காலமாக நம்மிடையே புரையோடிப் போன கிராமத்து ஆணாதிக்க மனோபாவம், வார்த்தைகள் இன்னமும் கவிதைகளில் இடம் பெறத்தான் வேண்டுமா?
                                   சிலுவை மீதேறிய சுமை எனும் கவிதையில் சண்டையிடும் காலத்துக்காய் காத்திருக்கும் குரங்கின் மேல் கோபம் வருவது இருக்கட்டும். அதற்காக நான் பரிதாபப் படவேண்டியது குருதி குடிக்க பதுங்கியிருக்கும் பூனைகள் மேலா? அடைக்கலம் புகுந்து அப்பங்கள் திங்கும் எலியின் மேலா? இல்லை குருதி வழிய சிலுவை சுமந்த இயேசுவின் உழைப்பின்மேல் அந்தத் தன்னலமற்ற தியாகத்தின் மேலா? குரங்கு பிடுங்கித் தின்கிறது என்பதற்காய் பூனை எலிமேல் பரிதாபப் படத் துவங்கச் சொல்லுகிறது சிலுவை மீதேறிய சுமை எனும் கவிதையின்  பொருள் மயக்கம், தவிர்க்க வேண்டியது என நினைக்கிறேன்.
                                   எவருக்கும் அறிவில்லை 
                                   எல்லாவற்றையும் உடைத்துவிட்டு 
                                   எனைப் பேசும் 
                                   ஏதாவதொரு பொருள் படைக்க 
                                   பேசுவதற்காக பொருள் படைக்க யாரையோ நம்பியிருத்தலை  தவிர்த்தர்க்குரிய உழைப்பும், நம்முடைய செயல்களே நமை பற்றிப் பேசும் எனும் அறிவு கொண்டிருத்தலும் இன்றைய நம் தேவை.
                                   தவிர்க்க முடியாதபடி உமை எல்லாப் பொருளும் பேச உண்மையும் திறமையுமாய் செயல் செய்க.உழைப்பே எல்லோருக்குமான விடுதலை. வாழ்த்துகள்.

                  -திலக பாமா 
                   mathibama@yahoo.com
                   94431 24688
(மதுரை அமெரிக்கன் கல்லூரி காட்சி ஊடகத் துறை 15.12.2009 அன்று  நடத்திய "ஆயுதக் கோடுகள் " நூல் திறனாய்வுக் கூட்டத்தில் கவிஞரும் நாவலாசிரியருமான திலக் பாமா வாசித்த கட்டுரை )

புதன், 16 ஜூன், 2010

ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளி! -எஸ். அர்ஷியா

Friday September 4, 2009

தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து...

எஸ். அர்ஷியா




ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட
வார்த்தைகளைக் கொண்டு
கட்டப்பட்ட அழகிய வெளி!

மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்டக் கிளையில் சிறுகதை வாசித்துவிட்டு, பார்வையாளர் பகுதிக்கு வந்து உட்கார்ந்தபோது, நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம், 'அர்ஷியா, இது தமிழ் முதல்வன். கவிஞர்!' என்று ஒரு இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்டாலினுடன் எனக்கு நல்ல பழக்கம். இருந்தாலும், யாரையும் அவர் அறிமுகம் செய்து வைத்ததில்லை. அவர் மூலம், இதுதான் முதல் அறிமுகம். அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நபர், தனது ஜோல்னாவிலிருந்து தடவி யெடுத்து, ஒரு கவிதைப் பிரதியை என்னிடம் நீட்டினார். வறுமையில் முக்கியெடுத்த சிறுவன், பரிதாபமாக விழித்துக்கொண்டிருக்கும் அட்டைப் படத்துடன் அக்கவிதைப் பிரதி இருந்தது.

எனக்கு வரும் தபால்களில் நாலில் மூன்று, கவிதைப் பிரதிகளாக இருப்பதில் கொஞ்சம் வருத்தம் இருப்பதுண்டு. அதற்காக, 'நான் இணையத்தில் எதையும் வாசிப்பதே இல்லை. எழுத மட்டுமே செய்கிறேன்' என்று சாரு நிவேதிதா பீற்றிக் கொள்வதுபோல, பீலாவெல்லாம் விட மாட்டேன். அதற்கு இயக்குநர் அமீர் கூட, 'புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்' என்று, அதே சாருவைப்போல யாரையும் துணைக்கு அழைக்கவும் மாட்டேன். கவிதைகள் வாசிக்கும் பழக்கம் எனக்கு அவ்வப்போது உண்டு.

மதுரை இலக்கிய வட்டத்தில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை எழுதுபவர்களைவிட துணுக்கு எழுத்துதான், ஒரு காலத்தில் நிறைந்து கிடந்தது. எங்கு திரும்பினும் துணுக்கு மயம். இப்போது அந்த இடத்தில், கவிதை!

ஒரு மதுரைக் கவிஞர், ஓராண்டில் ஆறு கவிதைப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒன்று என்று. ஒரு கவிஞர், தனது கவிதைத் தொகுதிக்கு, டுபாக் கூர் பதிப்பாளாரிடம் கவிதையையும் காசையும் கொடுத்துவிட்டு, இரண்டையும் எப்படி மீட்பது என்று, மூன்று வருடங்களாக அலைபாய்ந்து கொண்டிருப்பதும் எனக்குத் திரியும். இதையும்தாண்டி, நல்ல கவிதைகள் எப்போதாவது வெளிவந்து விடுவதுண்டு.

நல்ல கவிதைகள் என்பது என்ன? காதல். கத்தரிக்காய். காத்திருத்தல். அவள் தந்த முதல் முத்தம். மூடி தொலைந்துவிட்ட பேனா. அவள் நோட்டுப் புத்தகத்திலிருந்து திருடிய மயிலிறகு. முத்தம் கிடைத்த புறங்கையை கழுவாமல், அழுக்கேறப் பாதுகாப்பது போன்ற இத்தியாதி, இத்தியாதிகளைத் தாண்டி, சமூகத்தின் அவலங்களைத் தோலுரிப்பது. சமூகத்தின் இருப்பிடத்தைத் தக்க வைப்பது. சமூகத்தில் தனக்கான இடம் எது என்பதைக் கண்டுணர்வது. இன்னபிற என்றே நான் கருதுகிறேன். தமிழ் முதல்வன் அப்படியான ஒரு இடத்தைத் தேடித் திரிபவராகத்தான், 'ஆயுதக் கோடுகள்' நூல்வெளி முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்.

சின்னதாய் கையடக்க நூல்தான். நாற்பத்தெட்டு பக்கங்கள். சிறிதும் பேரிதுமான ஐம்பத்தேழு கவிதைகள். பத்தாம் வகுப்பு மாணவராயிருந்தபோது துவங்கி, இன்று வரையிலான உழைப்பின் தொகுதியாக அது வெளிப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தனக்கான இருப்பைத் தேடும் 'மொழியற்ற சொல்' மூலம்,
'ஒலியொறியறியா எங்கும் பரவின
தூல உடம்புச் சொல்லொன்றே
எனக்கும் பிறருக்குமான தொடர்பு மொழியாயிருக்கிறது'
எனக் கண்டறிகிறார்.

அதேவேளையில் தனது சமூகம் அழுக்குக்குள் மூழ்குவதை 'அசுத்தகரிப்பு' மூலம் வேதனைப் படர வெளிப்படுத்துகிறார். அதனிலிருந்து சமூகம் மீள ... சமூகத்தார் மனிதனாராய் பா¢ணமிக்க... விடுதலை மண் பிறக்க... தமது 'பந்து நிறை தொல்குடி வாழ்வை' மீள்பணி செய்யத் தலைப்பட்டவராகவும் முன்னிற்கிறார். என்றபோதும் ஒதுக் கீட்டில் பயன்பெற்று உயர்ந்தவர்கள், என்ன நிலையில் தன் சமூகத்திலிருந்து விலகிய வராக இருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டத் தயங்கவும் இல்லை. தவறவும் இல்லை என்பது, அவரது சமூக நேர்மையைக் காட்டுகிறது.

தொப்பூள்கொடி உறவு கொண்ட ஈழச் சகோதரனின் உடல், பொருள், வாழ்க்கை யின்மேல் சிங்கள வேர்கள் ஆழப் படர்வதையும், இங்கே தமிழினத் தலைவர்கள் நாய் மேய்த்துக் கொண்டிருப்பதையும், வெற்று விவாதங்களில் ஈடுபட்டு வெறுமனே காலத் தைத் தள்ளுவதையும் 'பொறுப்பு'டன் சுட்டிக் காட்டுகிறார்,
'உள்ளுறுப்புகள்கூட பயன்படா நிலையில்
அப்படியே புதைப்பதா அல்லது எரிப்பதா
ஞானவெட்டியான்களிடம் மையம் கொண்டிருக்கிறது
விவாதங்கள் மட்டுமே'
என்று.

இதுபோலவே நூல் முழுவதும் தொடரும் ரவிக்குமார், கடவுகளின் இனிமைகள், நிரம்பிய வெற்றிடம், நுந்நோக்கம், பெண்ணியம், உச்சியிலாடும் மயிர்கள், மீளாய்வு, மயக்கப்படும் வார்த்தைகள், போலிகள், சிலுவை மீதேறிய சுமை என தனலாய் நூல் முழுவதும் 'நேர்பட பேசு'கிறார், தமிழ் முதல்வன்.

கவிதைகள் ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளியில் நகர்கிறது.

வாசித்து முடித்த பின்பு, எனக்குள் ஏதோ வெற்றிடம் பரவுவதை என்னால் உணர முடிந் தது. சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம் எனும் கேள்வியை 'ஆயுதக் கோடுகள்' வரி  வரியாய் கிழித்துப்போட்டது.
·

மதுரையின் நான்காவது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாளில், நண்பர்களுடன் சுற்றிவந்த என்னை தமிழ் முதல்வன் 'ஐயா!' என்று விளித்துக் கொண்டு, கைநீட்டி வந்து சந்தித்தார். சந்தோஷமாக இருந்தது.

என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் அவரை அறிமுகப் படுத்தினேன், ஸ்டாலின் ராஜாங்கம் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது போலவே!

arshiyaas@rediffmail.com
-நன்றி:திண்ணை.காம்
Copyright:thinnai.com 

செவ்வாய், 15 ஜூன், 2010

தனித்தன்மை மிக்க எழுத்துக்கள் -யாழன் ஆதி



பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் 
உறவுகள் வலுவடைந்தால் உரிமைப் போர் தொடங்கும் 
யுத்தப் பாதை ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும் ''
-என்ற தலித் சுப்பையாவின் பாடல், பெயர்களை மாற்றுவதால் நிகழும் சமூக மாற்றத்தை தமிழகத்தின் மேடைகள் தோறும் ஒலிக்கிறது.இக்கருத்துக்கு வலு சேர்க்கிறது தமிழ் முதல்வனின் பெயர் மாற்றம்.கண்ணன் என்ற பெயர் தனித் தமிழ் சார்ந்த பெயராக இருப்பினும் ,அதில் அடிக்கும் இந்துக் கவுச்சி யால் அதை நிராகரித்து தொல்குடிகளே தமிழர்களில் முதலானவர் என்பதை அறிவிக்கும் பொருட்டு , தமிழ் முதல்வன் என்று பெயர் சூடிக் கொண்டிருக்கிறார்.
                       உலகப் புகழ் பெற்ற கீரிபட்டியினை பூர்வீகமாக கொண்டவர் தமிழ் முதல்வன்.நாட்டுப்  புற  கலைகள் மிகுந்திருக்கும் ஆ.கொக்குளத்தில் பிறந்தவர்.பவுத்த நெறியில் வாழ்ந்த தம் முன்னோர் கீரிபட்டியிலிருக்கும் தங்களின் நிலங்களை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு கொடுத்துவிட்டு இங்கு குடியேறிய பொழுது ,அழகன்-கருப்பாயம்மாள் ஆகிய இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
                        அவருடைய முதல் கவிதை நூலான "ஆயுதக் கோடுகள் "-புதிய கண்ணோட்டத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
                        தங்கள் முன்னோர்கள் நிலங்களை எல்லாம் இழந்து ஆ.கொக்குளத்தில் விவசாயக் கூலியாக வேலை செய்ய நேர்ந்து விட்ட இடங்களில், ஆதிக்க சாதியினரின் உணவையோ,நீரையோ வாங்க மறுத்து , அவர்களின் பாத்திரங்களைத் தொடமறுத்து,சாதி ஆதிக்கத்தை எதிர்த்ததை தன் எழுத்தில் கொண்டுவருகிற ஆற்றல்,தமிழ் முதல்வனுக்கு இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படித்த இவருக்கு, படிக்கும் காலத்தில் சாதி இந்துக்களின் தடைகள் ஏராளமாக இருந்ததாக தெரிவிக்கிறார். அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து, இன்றைக்கு ஓர் ஆககவாளியாக மிளிர்கிறார்.
                         தன்னுடைய அனுபவங்களின் மேல் நின்று கொண்டு தான் அநீதிக்கு எதிராக, 'மனிதம்' எனும் இதழை அவரால் கொண்டுவர முடிந்தது. அந்த இதழை கொண்டுவருவதில் பெரும் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் அவர் சந்தித் திருக்கிறார்.பக்தி இலக்கியங்களைச் சுமந்து , தமிழும் தலித்துகளுக்கு துரோகம் செய்து விட்டதாகக் கருதும் தமிழ் முதல்வன், ஊடகங்களை தலித்துகள் கைப்பற்றவேண்டும்; தலித் விடுதலைக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
                         தமிழ் முதல்வனின் கவிதைகள் மிக நிட்பமானவை.பூடகமான மொழியில் எழுதி , ஒளிவு மறைவின்றி வரக்கூடிய எழுத்துக்களை ,குறிப்பாக தலித் ஆக்கங்களை 'வெற்று முழக்கம்'என்று புறந்தள்ளுபவர்களுக்கு எதிராக அவர் ஒரு கவிதையை எழுதியுள்ளார்:
                          " எனக்குப் புரியாமல் எழுதியதால் 
                                     அறிவாளியானாய் 
                                     உனக்குப் புரியாமல் எழுதியதால் 
                                      அறிவாளியானேன்..."
                                                                   என்று தொடங்கி, இத்தகைய எழுத்துக்களால் ஒன்றும் நிகழப் போவதில்லை என்பதை -'இடையில் அப்படியே இருக்கிறது சமூகம்'  என்று எழுதுவதன்மூலம் நிலை நிறுத்துகிறார்.
                           உடல் மீதான தீண்டாமை பருப் பொருளானது,சொற்கள் அரூபமான அதே நேரத்தில், ஆற்றல் கொண்டவையாக மாறி தீண்டாமையை மிகவும் எளிதில் நிலை நிறுத்திவிடும். இதை தமிழ் முதல்வன் எல்லோருக்கும் பிடித்த சொல்லில் - அவர் இல்லை என்றும், அவருக்குப் பிடித்த சொல்லில் பிறர் இல்லை என்றும் , உடலே ஒரு சொல்லாகி, பிறருக்கும் அவருக்குமான தொடர்பினை அல்லது பிரிவினை ஏற்படுத்துகின்றது என்பதை கூறுகிறபோது, தன்னை ஒரு நவீனக் கவிஞராக்கிக் கொள்கிறார்.
                             தமிழகச் சூழலில் சாதிக்கு எதிராகவும்,ஈழச் சூழலில் தமிழர்களை மீட்டெடுக்கும் அன்பின் எழுத்தாகவும் அமைகிறது தமிழ் முதல்வனின் கவிதைகள். ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆக்க மனநிலையை தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு, விளிம்பு நிலைச் சமூகத்தின் ஆக்கவாளிக்கும் தேவையாயிருக்கிறது. தமிழ் முதல்வனிடம் அத்தகைய பொறுப்புடன் இயங்க வேண்டும் என்னும் ஆதங்கம் இருக்கிறது.
                             உலகத்தின் எந்த மூலையில் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் போராடினாலும் அவர்களோடு தன்னை இணைத்துக் கொள்வது இன்றியமையாதது..
                           "....மூடிய என்னிமை துளைத்து 
                           விழுந்த ஈழச் சதைகளின் குருதிகள் 
                           விழிகள் நிரம்ப எழுந்த பொழுது 
                           என்னைச் சுற்றியும் 
                           உறங்கிக் கொண்டேயிருக்கின்றன பிணங்கள் "
என்று எழுதுகின்டற வரிகளில், சகமனிதனின் மீது கொள்ளுகின்டற நேயம் வெளிப் படுகின்றது.
                             "உள்ளுறுப்புகள் கூடப் பயன்படா நிலையில் 
                              அப்படியே புதைப்பதா அல்லது எரிப்பதா
                              ஞான வெட்டியான்களிடம் மையம் கொண்டிருக்கிறது 
                               விவாதம் மட்டுமே "
                                                        ஈழச் சிக்கல்  இன்றைய தமிழக அரசியலில்  பகடைக் காயாக வெட்டி விளையாடும் கொடுமையை விவரிக்கும் கவிதையில், தமிழ் முதல்வனின் பேனாவிலிருந்து விழும் சொற்கள் வீரியம் மிகுந்திருக்கின்றன.வெட்டியான்கள் எனப் படும் தொழிலை இழி தொழில் என்று ஒதுக்கியவர்கள், ஞான வெட்டியாங்களாக மாறி விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்கின்றனர்.ஆனால், அவர்களின் விவாதங்கள் விண்ணைப் பிளப்பதாக இருக்கின்றன.
                         இந்நிலையில், சாதிச் சவுக்கடியில் வதைபட்டு கொண்டிருக்கும் தலித்துகள் மட்டுமே ஈழ மக்களின் வேதனையை உண்மையாக உணர முடியும் என்பதையும்; உலக  அளவில் கறுப்பின மக்களோடு தலித்துகளே அடையாள படுத்திக் கொள்ள முடியும் எனும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது , அவருடைய "தொலைவழி" எனும் கவிதை.
                         சாதியைத் தகர்ப்பதற்கு குடும்ப அமைப்பில் மாற்றத்தையும், குடும்பங்கள் அமைவதற்கு சாதி-மத மறுப்பையும் நம் முன்னோர்கள் கோரியிருக்கின்றனர்.'கலப்புத் திருமணம்' என்ற சொல்லாடலையே எதிர்த்து, அதை சாதி மறுப்புத் திருமணம் என்று கூறியவர் பெரியார். ஆனால், காலங்கள்  கடந்த பின்னும்  எத்தனையோ அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்த பின்னும்-இன்னும் திருமண விளம்பரங்களில் வரும் சாதியின் ஆதிக்கத்தை தன் கவிதையில் பகடியாக்குகிறார்:
                            "பெயருக்குப் பதில் சாதி 
                             பண்புக்குப் பதில் மதம் 
                             மணமக்கள் தேவை விளம்பரங்கள் 
                             இணைத்துக் கொண்டிருக்கின்றன விலங்குகளை 
                             பிரித்துக் கொண்டிருக்கின்றன மனிதர்களை"
                        
                             கவிதையில் சொற்களைச் சேர்ப்பதும், அவற்றைத் தன் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரிப்பதும் ஒரு கவிஞனுக்குரிய உரிமை. அதைச் சிறப்பாகக் கையாளுகிறார் தமிழ் முதல்வன். வாழ்வின் மீது சுமத்தப்பட்ட பாரங்கள் ஆகியவை அவருடைய கவிதைகளில் வெளிப்படுவதைக் காட்டிலும் சமூகம் சார்ந்து அவர் கொண்ட சிந்தனைகளே அவருடைய கவிதைகளாக வெளிப்படுகின்றன.
                             மயக்கும்  மாயச் சொற்களைக் கொண்டு படித்தவர்களை எல்லாம் படுத்துறங்க வைக்கும் முனை  மழுங்கிய தட்டையான எழுத்துகள் , தன்னுடைய எழுத்துகள் அன்று என்பதையும் மனித உறுப்புகளைச் சொல்லி அதிர்ச்சியூட்டி, அதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும் குறுக்கு எண்ணம் தனக்கில்லை என்பதையும் தன் கவிதைகள் மூலம் சொல்லாமல் சொல்லி விடுகிறார் தமிழ் முதல்வன்.
                               ஆதிக்கத்தைத் தகர்க்கும் காலத்தைக் காட்ட மறுக்கும் கடிகாரத்தையும், கணக்குத் தீர்க்காமல் கிழிந்திடும்  நாட்காட்டியையும் புறக்கணித்து, தலித்துகள் அவர்களுக்கான காலத்தை உருவாக்க மீளாய்வு செய்து , அதை எப்படி நிலைநாட்ட முடியும் என்பதைக் கூறும்போது,அவருக்குத் தேவைப் படும் பொருட்கள்-சாதி இந்துக்களால் மறுக்கப் பட்ட தோளில் அணியும் துண்டு, உரக்கச் சொல்லப்படும் புரட்சியாளர் அம்பேத்கர் பெயர், போடக் கூடாது என தடுக்கப் பட்ட மிதியடிகள், அவர்களால் பிடுங்கப்பட்ட  நிலம் முதலியவை.
                                 இவற்றைச் சுட்டிக்காட்டி,வாழ்வில் அடைந்திருக்கும் சமூக முன்னேற்றத்தைக் குறிப்பிடும் போது, ஒருவேளை ஆதிக்கசாதிக்காரன் தற்கொலை புரியவும் கூடும் என்னும் அவரின் உளப்பாங்கு நோக்கத் தக்கது.கணினி சமூகமாக மாறியிருந்தாலும் , அறிவியல் கருவிகள் எப்படி சாதிக்கு சாதகமானவையாக இருக்கின்றன என்பதையும் அவற்றை எல்லாம் தூர எறிந்துவிட்டு, மனிதனைப் பேசும் ஏதாவதொரு பொருளைச் செய்யவேண்டும் என்னும் ஏக்கம் கவிதையாகி இருக்கிறது.இது, இவருடைய தனித் தன்மை.
                                ஒடுக்கப் பட்ட மக்களின் மனநிலையில் நின்று வெளிப்படும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ் முதல்வன்.எந்நிலை கண்டாலும் மறுப்பு ஒன்று மட்டுமே மானத்தைக் காத்துக் கொண்டிருகிறது என்னும் அவர், ஊடகத்தை தலித்துகளுக்கானதாக மாற்ற வேண்டும் என்னும் அவாவின் வெளிப்பாடாகவே, "மக்கள் திரைப்படக் கழகம் " ஒன்றை நிறுவி செயல் பட்டு வருகிறார்.தற்பொழுது மதுரையில் வசிக்கும் தமிழ் முதல்வன், இருள் தீண்டும் இடமெங்கும் ஓய்வற்று வெளிச்ச வரிகளை எழுத முனையும் பேனாக்காரர்.
-யாழன் ஆதி(நன்றி -தலித் முரசு -செப் -2009)

திங்கள், 14 ஜூன், 2010

வைரஸ் வலி -கவிதை

ஆடைகள் உருவப்பட்ட 
அந்தரங்க வெளிகளில்  பாயும் 
தீ நாட்டியத்தின் நளின வெடிப்புகளில் 
தோன்றுகின்றன 
பிரபஞ்சம் விழுங்கும் பெரும் பள்ளங்கள் 

வலி சொருகி வளி கிழித்து 
நீண்டுபெருகும் 
குளோரின்  பின்னலாடைக்குள்
ஒளிந்து உருளும் 
அம்மண உடல்களில் மிளிரும் தோள்களில் 
கூடுகள் கட்டுகின்றன கறையான்கள்

பலர் சுருங்கி கிழிந்த 
குடையில் ஒழுகும் ஊதா மழையில் 
நனைந்து கருகும் 
அலைத் தாவரங்களின் ஆதரவின்றி 
அசைவற்று  நீந்திக் கொண்டிருக்கின்றன 
உயிரற்ற செதில்களுடன் 
ஆழி விலங்குகள் 

வண்ணமற்ற அரவணைப்பை அணைத்து
பசுமைக் கூட்டு வாசிகள் 
புவிக் கோபம் மிக 
அயனம் தாண்டியும் பயணம் செய்கின்றனர் 
கியோட்டாவைக் கடந்து 

வெற்றுப பாவனைகளின் 
வீரியம் விழுங்கி நெளிபவைகள் 
பருவகால நட்பை முறித்து 
உதிர்ந்த இலைகளோடு ஒடிந்து கிடக்கின்றன 
மட்காமல் 
-நன்றி  உன்னதம் பிப் -2010

சனி, 12 ஜூன், 2010

சிலுவை மீதேறிய சுமை

குறுக்கையில் வழியும் இயேசுவின்
குருதியைக் குடிப்பதற்காய்
பூனைகள் பதுங்கியிருக்கும்
ஆலயத்தில் அடைக்கலம் தேடி
புகுந்த எலிகளின் பசிக்கு
அப்பங்கள் கிடக்க
பூனைக்கும் எலிக்குமிடையிலான
தடுப்பில் ஏறிநின்ற குரங்கொன்று
இரண்டும்
சண்டையிடும் காலத்திற்காய்
காத்துக் கிடக்கின்றது

வியாழன், 3 ஜூன், 2010

பரிணாமப் பரிமாற்றம்

காசு மனிதனானது
மனிதன் காசானான்
காசைத் தேடினேன் மனிதர் கிடைத்தனர்
மனிதரைத் தேடினேன் காசு கிடைத்தது