புதன், 1 டிசம்பர், 2010

நெஞ்சைக் கவ்விய நந்தலாலா...

பல்வேறு காரணங்களால் சினிமா என்னைவிட்டு வெகுதொலைவில் இருந்தது. ஜனநாதன், வசந்தபாலன் போன்றோர் அருகில் அழைத்து வந்தார்கள். இப்பொழுது மிஷ்கின் 'நந்தலாலா' மூலம் சினிமாவைக் கட்டித் தழுவி நெடுநேரம் அழ வைத்துவிட்டார். தாயின் பாசத்திற்கு ஏங்கும் மனதுகளை இந்த அளவுக்கு யாரும் காட்டியதில்லை

செவ்வாய், 30 நவம்பர், 2010

சமூக சமத்துவப் படைத் தலைவரின் நேர்காணல்

 சமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் சிவகாமி இ.ஆ.ப. அவர்களின் நேர்காணல் இது. கட்சி ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம் ,தேர்தல் பாதையில் அது எதிர்கொள்ளும் சவால் ,இன்றைய அரசியல் சூழலில் ராசா விவகாரம் குறித்த அவரின் நிலைப்பாடு, பண்பாட்டு அரசியல் நிலைப்பாடு ஆகியவை குறித்து விரிவாகப் பேசிய காணொளி ....

சனி, 27 நவம்பர், 2010

தலித் அரசியல் எழுச்சி குறித்து நேர்காணல்...

 தலித் அரசியல் எழுச்சி அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துடன் நேர்கண்ட காணொளி.
YouTube - tmuthalvan's Channel

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஞான அலாய்சியஸ் நேர்காணல்...

அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிட்ட அறிவர் ஞான அலாய்சியஸ் அவர்களுடன் நடத்திய நேர்காணல்...
YouTube - tmuthalvan's Channel

திங்கள், 1 நவம்பர், 2010

வாழ்வு

வாழ்வு
வீடடையும் மனமுடுக்கத்தில்
முன் நகரும் பாதங்களால்
விழுங்கப் படுகின்றன
தெருவின் தூரங்கள்

பக்கவாட்டுத் திசைகளில் 
துரத்தப்படும் இணைத் தெருக்கள்தோறும்
இயங்குகின்றன
வீடடையும் மனங்கள்

அடைந்த வீட்டினுள்
எனக்குள் நுழைந்து விழுங்கப்பட்ட
தூரங்களில் நடந்தபொழுது

மளிகைக் கடைச் சாமான்கள்
ஆங்காங்கே சிதறிக் கிடந்தன
மதுப்புட்டிகளும் பிளாஸ்ட்டிக் குவளைகளும்
பெரும்பாலும் குவிந்துகிடந்தன
பல இடங்களில் நிறைந்து கிடந்தன
மருந்துகளும் மாத்திரைகளும்

வியாழன், 28 அக்டோபர், 2010

விடுபடுதல்

முகம் தெறிக்க ஓடுகிறதென்
பாதச் சுவடுகளையாவது அடைந்துவிடத் துடிக்கின்றன
நான் துரத்தும் அடையாளங்கள்

அதிவேக ஓட்டத்தில் வெளியேற்றப்பட்ட
மூச்சுக் காற்றோடு
சில அடையாளங்கள் பறந்துவிட்டன

துரத்திய களைப்பில் சில
தூரத்திலேயே ஒதுங்கிக் கொள்ள
வழியின் பக்கங்களெங்கும் நின்றால்கூட
வலிமையோடு தொட்டுவிட நிற்கின்றன மேலும் சில

கைகளிலும் கால்களிலும்
ஆடைகளிலும் அதற்குள்ளிருப்பவற்றிலும்கூட
தொற்றிய பலவும் காணாமல் போய்விட்டன
பூத்த வியர்வையில் கழுவப்பட்டு

அப்பொழுதாவது தொற்றிக் கொள்ளலாமென
களைத்துவிழும் இடம்நோக்கி
என்னை முந்தி ஓடுகின்றன
என்னையும் நானையும் அழிக்கும்
அவைகள்

ஆசிரியரின் வன்முறை

மதுரை டி.வி.எஸ்.(சுந்தரம்) பள்ளியில் ஆரம்பப் பள்ளி மாணவனை குறிப்பேடு
எடுத்து வராத காரணத்தால் சோமசுந்தரம் என்கிற ஆசிரியர் கன்னத்தில் ஓங்கி
அடித்துள்ளான். இச்சம்பவம் பள்ளி துவங்கும் முன்பே நடந்துள்ளது.மாணவரை
அடிக்கக் கூடாது என சட்டமே இருக்க சட்டத்தை மீறி  துளி இரக்கமும்
இல்லாமல் அடித்துள்ளான்.அந்தப் பையனின் கன்னங்களில் சோமசுந்தரத்தின்
ஐந்து விரல்கள் அப்படியே பதிந்துள்ளன.வீங்கியும் சிவந்தும் உள்ளது
அச்சிறுவனுடைய கன்னம். அழுதழுது சோர்ந்து போயிருந்தன அவனது கண்கள்.
அவனைக் கண்டவுடன் அதிர்ந்த நான் பள்ளியின் தொலைபேசியில்(0452-2673666)
என் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தேன்.இன்று காலையிலிருந்து என்
மனம் வருந்திக் கொண்டே இருக்கிறது.சிறுவன்மீது நிகழ்த்திய இவ்வன்முறையை
அனைவரும் கண்டிப்போம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பருக்கை வேட்டை

பருக்கைகளைத் தேடும் முனைப்பில்
பறந்தது இருவேறு மனதுகள்
சிறிய வட்டைக்குள்
பெரிதாக இருக்கின்றன
வயிறு நிரப்பும் ஏக்கங்கள்
செல்போன்கள் வறுமையை ஒழித்துவிட
மழலைகள் மன்றாடுகின்றன
ஒரு கை பருக்கைக்கு
வாய்ச் சவடால்களின் இரைச்சல்களில்
வயிறு ஊதிக் கிடக்கும் சமூகத்தில்
மயிரைக் கூடப் புடுங்கமுடியவில்லை
பல எழுத்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

.உசிலம்பட்டியிலிருந்து.....

அன்று உசிலம்பட்டியிலிருந்து கீரிபட்டிக்குச் செல்லும் வழியில் தானியின் (ஆட்டோ ) வேகதடுப்பு (பிரேக்) அறுந்துவிட சென்ற வேகத்தில் தொடர்வண்டி பாதையின் முன் உள்ள வேகத்தடையில் குதித்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. நல்ல வேளையாக அப்பொழுது தொடர்வண்டி வரவில்லை. இருந்தும் பிரேக் இல்லாமலே மெதுவாக கீரிபட்டிக்குப் போய் சேர்ந்தேன். நான் சென்று சேர்ந்த பொழுது இரவாகிவிட்டது.யார் வீட்டிலும் சாப்பாடு மீதமில்லை. குடும்பற்கும்,அந்த நேரத்திற்கும் அளவாகவே சமைத்திருந்தார்கள். இது நகரங்களில் காணும் நடைமுறை. ஆனால் கிராமத்திலும் தொற்றிக் கொண்டது. முன்பெல்லாம் கிராமங்களில் குடும்பம் சாப்பிடும் அளவுக்கு அதிகமாகவே சமைப்பார்கள். திடீரென்று வரும் விருந்தாளி , பக்கத்துவீட்டார் என அனைவருக்கும் உணவு காத்துக் கிடக்கும். ஆனால் இப்பொழுது வறுமை சூழ்ந்துவிட , உறவுகள் சுருங்கிவிட உணவும் குறைந்து விட்டது. இன்னொரு முக்கியக் காரணம் அவர்கள் சமைக்கும் ரேசன் அரிசி நெடு நேரம் காத்திருக்காது. இவ்வாறன அனுபவத்துடன் ஒரு சிலரை மட்டும் பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டேன். கீரிப்பட்டி சிக்கலை மைய்யமாகக் கொண்ட ஆவணப் படமொன்றை கையில் வைத்திருந்தேன்.அன்றுதான் பாரி செழியன் கொடுத்தார். மாமா சிவகுமார் அவர்கள் வழங்கிய மடிகணினியில் அப்படத்தை முப்பிலியான் என்பவர் வீட்டில் காட்டினேன். பத்துபேர் பார்த்தார்கள்.அவர்கள் பட்ட வேதனையை அவர்கள் முன் காட்டிய பொழுதுதான் இப்படியெல்லாம் சிரமப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள்.
மக்கள் திரைப்படக் கழகம் ஆரம்பித்தபொழுது எண்ணிய எண்ணம் சிவகுமார் அவர்களால் நிறைவேறியது. கிராமங்களுக்குச் சென்று குறும்படங்களையும்,ஆவணப்படங
்களையும் சினிமாவுக்கு மாற்றாக அறிமுகப் படுத்த வேண்டுமென்ற திட்டம் ஓரளவு செல்படத் தொடங்கியது. ஆனாலும் பெரிய திரையில் காட்டமுடியாதது மிகப் பெரும் குறையே. ஒளிப்பெருக்கியை (ப்ரொஜெக்டரை) வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு பொருளியல் சூழலும்இல்லை.
மறுநாள் காலையில் கஞ்சி குடிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். கிராமங்களில் கஞ்சிதான் வாசனையும் சுவையும் மிகுந்தது.அதிலும் பச்சை வெங்காயத்துடன் கஞ்சி சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். எந்த சமையல் நிபுணரும் அந்த சுவையை உருவாக்கமுடியாது. . மற்ற அனைவர் வீட்டிலும் சோறு மட்டுமே இருந்தது. இதன் மையக் காரணம் அரசு வழங்கும் அரிசி. ரேசனில் வாங்கும் அரிசியை சமைத்து சொராகமட்டுமே சாப்பிட முடியுமாம். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள். அதுவும் ஆக்கிய சோற்றை மீதம் வைக்க முடியாது. மீதமுள்ள சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிட்டால் கஞ்சி. ஆனால் அந்த ரேசன் சோற்றை நீர் ஊற்றி வைத்தால் கெட்டு விடுவதோடு நாற்றமும் அடிக்குமென மக்கள் சொல்கிறார்கள். ஒரு வழியாக கருப்பன் என்பவர் வீட்டில் பழைய கஞ்சி கிடைத்தது. அவர் கடையில் வாங்கிய குருணையை கஞ்சியாக்கியிருந்தார். அதுவும் புளிச்ச தண்ணிக் கஞ்சி. அதைச் சுவைக்க வறுத்த சுண்டவத்தல் துணைக்கு நின்றது.
சாப்பிட்டவுடன் மறுபடியும் ஆவணப்படத்தைக் காண்பித்துவிட்டு மதியமே கீரிபட்டியை விட்டு வெளியேறினேன். தொல்குடி மக்களாகிய தலித்துகள் வாழும் அப்பகுதியை விட்டு வெளியேற மனமில்லை. கள்ளங்கபடமற்ற மனதுடைய, யாரையும் எளிதில் நம்பும் குழந்தைகளைப் போன்ற தன்மையுடன் இருந்தார்கள். இவர்களைத்தான் சாதிச் சமூகம் சுரண்டிப் பிழைக்கிறது. ஆபத்தான அறிவற்ற விலங்கு சாதிச் சமூகத்திற்கு மனிதர்கள்தானே உணவு...

கீரிபட்டியில்....

லகப் புகழ்பெற்றது கீரிப்பட்டி.தொல்குடியான ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுத்த விலங்கு மனிதர்கள் வாழும் கிராமம் அது. ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளின் ஓயாத போராட்டத்தாலும்,தி.மு.க வின் முயற்சியாலும் இப்பொழுது பால்சாமி என்கிற தொல்குடி தலைவராயிருக்கிறார். கடந்த திங்களன்று அவரைச் சந்தித்தபோது எடுத்த படமிது. தலைவரென பட்டம் பெற்றபிறகும்  பதட்டம் குறையாமல்தான் இருக்கிறார்.

வியாழன், 29 ஜூலை, 2010

மகிழ்ந்த காலம்

தெத்தூர் . மதுரைக்கு அருகிலுள்ள  மலைகள் சூழ்ந்த கிராமம். பெரும்பான்மையாக ஆதிக்க சாதியினரும் சிறிதளவு ஒடுக்கப்பட்டவர்களும் வாழும் சிற்றூர். விவசாய வாய்ப்பில்லாமலும் , வேறு வழியில்லாமலும் ஒடுக்கப் பட்ட மக்கள் மதுரை போன்ற நகரங்களைச் சார்ந்தே வாழும் சூழல். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மதுரையிலுள்ள பழைய திரையரங்குக் கட்டிடத்தை உடைக்கும் வேலை செய்தபோது சுவர் இடிந்து விழுந்து தெத்தூரைச் சார்ந்த பாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அவர் தவிக்க விட்டுச் சென்ற நான்கு பிள்ளைகளில் மூத்தவள் தந்தையின் நினைவிலேயே கடந்த மாதம் இறந்துவிட்டாள். பொருளாதார சூழலும் இரு பிள்ளைகளை பள்ளிக்குச் செல்லவிடாமல் செய்துவிட்டது. இவ்வாறு , தொடர்ந்து வந்த இழப்புக்களால் துவண்டுபோன குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னபோது மகிழ்ந்தார்கள்..அவர்களின் சிறு மகிழ்ச்சியில் நான் பேரு மகிழ்ச்சியடைந்தேன்..அம்மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம்.

சனி, 24 ஜூலை, 2010

செருப்புச் சமூகம்


புதிய செருப்புகளாய் விரிக்கப்பட்டிருக்கின்றன  
அன்றாட கஞ்சிக்கான எதிர்பார்ப்புகள் 
கடந்து செல்வோரின் பாதங்களோடு 
சென்று விடுகின்றன நம்பிக்கைகள்
கனரக வாகனங்கள் செல்லும் 
சாலைகளில் நசுங்கி கிடக்கிறது 
வாழ்க்கை 
திரும்பிக் கூட பார்க்காமல் செல்லும் 
முகங்களில் தெரிகிறது 
பணக்காரர்களுக்கு மட்டுமேயான 
இந்தச் சமூகம் 

சனி, 17 ஜூலை, 2010

வறுமையின் செய்தி

வறுமையின் செய்தி 






 நான் குடிக்கும் கம்பங் கூழ்
கலயத்தின் அருகில் இருக்கிறது
வறுமை
அது உண்டாக்கும் கோபத்தைவிட
 இயல்பாய் வரும் எம் புன்னகையில்
காத்திருக்கிறது
 உங்களுக்கான அதிர்ச்சி 

வெள்ளி, 16 ஜூலை, 2010

எதிர்காலங்களுடன் நான்

மூகத்திலும் பொருளாதாரத்திலும் விளிம்பு நிலையிலுள்ள எதிர்காலங்களுடன் நான். புறக்கணிக்கும் மனிதர்களையே கண்டு விரக்தியான கண்களுடன், குழந்தைமைகூட இல்லாமல் கனத்த மனதுடன் இருந்தவர்களுடன் அன்பாக பேசியபோது கைகளை இறுகப் பற்றி மிகவும் மகிழ்ந்த குழந்தைகளுடன், நானும் கிடைத்தற்கரிய மகிழ்ச்சி மனதெல்லாம் பொங்க இருந்த காட்சி அது.

வியாழன், 15 ஜூலை, 2010

தொல்லைக் காட்சிகள்

தொல்லைக் காட்சிகள் -தமிழ் முதல்வன் 

                 னியுடமைச் சிந்தனையை உள்வாங்கியபோது  சிதறிப் போனது மானுடக் கூட்டம். குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், பொதுமைச் சமூகத்தில் கூட்டாக வாழ்ந்ததன் எஞ்சிய அடையாளமாய் இருந்த கூட்டுக் குடும்பங்கள் , இன்று நம்மிடையே இல்லாமல்  போய்விட்டன. வளர்ந்து வரும் உலக, தாராளமயங்களின் நெருக்குதல்களால் நமது வாழ்வியல் கட்டுமானங்களை இழந்து விட்டோம்; வேலை வாய்ப்புகள், விவசாய சாகுபடி வாய்ப்புகள் ஆகியவற்றையும்  இழந்துவிட்டோம். மேலும், வளர்ந்து வரும் நவீன அறிவியல் ஈன்றுபோட்ட  தொலைக் காட்சிப் பெட்டிகளால்  நமது கூட்டு வாழ்முறைகளையும் இழந்து விட்டோம்.
                  நடைமுறையில் காணும் உண்மையான உலகைவிட, மிகைப்படுத்தப்பட்ட  நடைமுறைகளை ஊடகங்களின் கற்பனைப் பிம்பங்கள் வழியாக உற்பத்தி பண்ணும் போலியான உலகம்தான் இன்றைக்கு மனிதர் நடமாடும் வாழ்விடமாக கட்டமைக்கப் படுகிறது. மனவெளியில் திணிக்கப்படுகின்ற  கற்பனைப் பிம்பங்களை மெய்யாக உணரும்  களிமண் நிலைக்கு மானுடத்தைத் தள்ளுகின்ற வல்லாதிக்க அரசுகளின் உந்துகோளாய்  ஊடகங்கள் மாறிப்போயுள்ளன. முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து பின்னி இறுகியுள்ள வலைகளில் ஊடகங்கள் எளிதில் மாட்டிக்கொண்டு மக்கள் மனதை ஊனமாக்கும் கதிர்வீச்சை உமிழ்கின்றன. வீரியமிக்க அவ்வீசுகளை மென்மையாக உணர்ந்து சுகம் கொள்ளும் மக்கள் மெல்ல மெல்ல மாக்களாக (விலங்குகளாக) உளஉருமாற்றம்  செய்யப்படுகிறார்கள்.  தொடர்ச்சியான தொலைகாட்சி அலைவரிசைகளில் சிக்கிச் சீரழியும் மக்களை ( குறிப்பாக நமது பெண்களை ) ஒரு பொழுது மீட்டாலும் வலையில் சிக்கிய மீன்களாய் துடித்துத் துவண்டு போய்விடுகிறார்கள்.
                    ஆண் பெண் தோற்றங்களில் நிகழும் இயற்கையான பாலினக் கவர்ச்சிகளைக் கூட   மிகைப்படுத்தி கொச்சையாகக் காட்டுவதன்மூலம் பெற்றோர் x பிள்ளைகள், சகோதர x சகோதரிகள் போன்ற இன்னும் பல உறவுகளில் தேவையற்ற மனக்குறுக்கத்தை  ஏற்படுத்தி உறவுமுறைகளை சிதைப்பது போன்றவற்றைச் செய்கிறது இன்றைய ஊடகங்கள். அதன்மூலம் குடும்ப ஆளுமைகளைச்  சிதைத்து  சமூக மனநிலையிலிருந்து உதிரிமனநிலைக்கு இட்டுச் செல்லும் பயங்கரவாதச் செயல்களையும்  தொலைக்காட்சிகள் செம்மையாகச் செய்துவருகின்றன. பொறுப்பற்ற எல்லாச் செயல்களையும் செய்வதான ஒரு பிம்பத்தை உருவாக்கி, தான்தோன்றித்தனமான  மனநிலையில் தோய்த்து, கற்பனைகளின் எல்லை தாண்டியும் கொண்டுபோய் ஆண்டுக் கணக்கில் ஆட்டம்போட்டு  மக்களை அலற வைத்துக் கொண்டிருக்கும் தொடர்களுக்கு மாற்றாக, உண்மைத் தன்மையான நிகழ்வுகளை, மாந்தர்களை, வாழ்க்கையினை சொல்லும் வண்ணமாக ஒரு தொடர்களையும் தொலைக்காட்சிகள் வழங்குவதில்லை.
                  பெரும்பாலான வாழ்க்கையின் காலங்களை ஊடகங்களே சூழ்ந்துவிட்ட சூழலில், ஊடக வழியிலேயே பெரும்பான்மையோரின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.  பள்ளி நேரம்போக துள்ளிவிளையாடும் எள்ளளவு காலங்களையும் கொள்ளைகொண்டுவிட்டன தொலைக்காட்சிப் பெட்டிகள்.  தொலைக்காட்சியின் தொல்லையில்லா காலங்களில், நிலவைப் பார்த்துக் கொண்டே பெரியவர்கள் சொல்லும் கதைகளில் உலாவந்த சிறார்கள் , கதைகளில் வரும் பாத்திரங்களையும், சூழல்களையும் உள்ளங்களில் உருவகம் செய்து, கதையாடல் வழியே சென்று, கதைக் களத்திலுள்ள பாத்திரங்களை  தன் மழலைப் போக்கில் வழிநடத்தி, புதியதொரு கதையை உருவாக்கும் கற்பனைவளமும், படைப்பாற்றலும் பெற்றிருந்தார்கள். இப்பொழுதெல்லாம் இத்தகைய திறமைகளின்றி தொலைக்காட்சிகளின் மாயவித்தைகளில் வியந்து, மயங்கி தன் கற்பனை - படைப்பு, சிந்தனை உள்ளிட்ட அத்தனை ஆற்றல்களையும் இழந்து  வெறும் வேடிக்கை மனிதராகவே வளரும் அவலநிலையை இன்றையத் தொலைக்காட்சிகள் ஏற்படுத்திவிட்டன.
                      இங்கே சிந்தனைத் தளம்கட்ட வாய்ப்பில்லாமல் போனதால், தொலைகாட்சி நாயகர்களின் மாயச் செயல்களை தானும் செய்ய முற்பட்டு, எத்தனையோ குழந்தைகள் தங்களின் வாழ்வை அத்தனை சீக்கிரம் முடித்துக்கொண்டன. ஓடித்தாவி, கைகோர்த்து, கட்டிபிடித்து, கண்டுபிடித்து, கூட்டாக மகிழ்ந்து உடலும் உள்ளமும் ஆற ஆடிய விளையாட்டுகள் மறைந்து,  இறுக்கமான மனநிலையுடன் இன்று தனிமைப்பட்டு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் முடங்கிவிட்டனர் குழந்தைகள்.அதிலும் குறிப்பாக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தபின்னர் கிராமக் குழந்தைகளின் நிலை கல்வியிலும், காலத்திற்குத் தகுந்த ஊட்டதிலும்,சமூக சூழலிலும் மிக மோசமாக உள்ளது. ழான் பொத்ரியார் அவர்களின்  மொழியில் , ஓர் உலோக அடைப்பனுக்குள் வான் வெளியில் மிதக்கும் ஒரு நிலையில்தான் இன்றைய சிற்றூர் மக்கள்  இருத்திவைக்கப் படுகிறார்கள். இதை முதலில் வெளிச்சப்படுத்தினால்தான் குழந்தைகளின் வழமையான எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.
                    பல்வேறு நோயூக்கிகள்  சூழ்ந்துள்ள மிகவும் ஆபத்தான உலக நிலைமைகளில்  எதிர்ப்பாற்றல்மிக்க குழந்தைகளை உருவாக்கும், அமுதம் போன்ற தாய்ப்பால் சுரக்கும் மழலைகளுக்கான  மார்பகங்களை, இன்றையப் பெண்கள் எதிர்பாலினத்தவரை சுண்டியிழுக்கும் கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தும் போக்குக்கு ஊடகங்களே முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.  தாலாட்டும் பாட்டுக்களை தாய் வீட்டோடு விட்டுவிட்டு  குறுந்தகடும் ஒலிபெருக்கியும் சீதனமாக் ஏந்திவரும் நவீன காலப் பெண்கள் குழந்தையை உருவாக்கும் இயந்திரங்களாக மட்டுமே ஆகிவிட்ட சூழலில், தாய்ப்பால் கொடுப்பதுகூட தன் இளமைக்குப் பாழ் என்று பால்சுரப்பிகளை ஊசிபோட்டுக் கட்டுப்படுத்தி, பிள்ளைகளை பிராய்லர்  கோழிகளாக வளர்க்கின்ற இன்றைய நிலைமைகள்  குழந்தைகளின் எதிர்காலத்தின் மேல் சொல்லொணா துயரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றன. விளம்பரப்படுத்துகிற செயற்கை உணவுகளை பெட்டிபெட்டியாக  கொட்டிக் கரைத்துப் புகட்டுகின்ற புட்டிகளைக் கூட குழந்தைகளின்  கையில் கொடுத்துவிட்டு அந்தப்புரத்துப் பெண்களாய் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் தொலைந்துவிடுகின்றனர்.  மொழியினைக் கற்றுக்கொடுக்கும் தாயிடமே, தன்னுடைய தாய்மொழியை அறியமுடியாத ஆபத்தான சூழலையும், தூய தமிழின் வங்கி போன்ற சிற்றூர் மக்கள்கூட தொடர்ச்சியாக நான்கு தமிழ்வார்த்தைகளைப்  பேசிவிட்டால் தாழ்வுமனப்பானமை கொள்ளும் மிகமிக ஆபத்தான சூழலையும், இன்றைய  ஊடகங்கள் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்துவிட்டன.
               தன்னைத் தானே உணர முடியாத அயல்வெளியில் மக்கள் தூக்கிஎறியப்பட்டுவிட்டநிலையைப் பயன்படுத்தி , மொழி , இனம், பண்பாட்டு அழித்தொழிப்பு வேலைகளை தீவிரமாக, பயங்கரமாக, மறைமுகமாக செய்துவருகின்றன இன்றைய ஊடகங்கள்.   தமிழைப் பேசாவிட்டாலும் குற்றமில்லை, பலமொழிகளை ஒன்றாகக் கலந்து ஒரே நேரத்தில் கொட்டித் தீர்க்கும் வாயாடிகளைக்(தொகுப்பாளர்கள்) கொண்டு தமிழை தமிழரிடத்திலேயே அறியாவண்ணம் காவுகொள்கின்றன.  பாடப் புத்தகங்களோடு சரி, தமிழ் ஆசிரியர்களும் பிறமொழிக் கலப்பின்றி பேசமறுக்கும் இறுக்கம் நிறைந்துள்ள, தமிழை முற்றிலும் புறக்கணிக்கின்ற வசதிமிக்க பெரும் கல்விக்கூடங்கள் நிறைந்துள்ள சூழல்களுக்கு  ஊடகங்கள் துணையும் நிற்கின்றன. மேலும், அரசுத் தொடர்புகளிலும், வெளியீடுகளிலும் கூட  வேறுமொழி புகுத்தப்பட்டுள்ள அவலநிலையை உருவாக்கிவரும் அரசுகளும் இதற்கு முழுப் பொறுப்பாகின்றன.
                 வெறும் இனக் கவர்ச்சி மட்டுமே தகுதியாகக் கொண்ட தொகுப்பாளர்களையே மூலதனமாக்கி நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சிகள், விடுப்பு நாட்களில் நடிக நடிகையரை வீட்டிற்குள் கூட்டிவந்து அவர்களின் தான்தோன்றித் தனமான நடப்புகளைப் பெருமையாகச் சொல்லவைத்து , அதுவும் தமிழை பேசத் தெரியாமல் உளறுவதே புகழ்சிமிக்க ஒன்றாகக் காட்டி நினைக்கவைத்து, அவர்களையே வாழ்க்கையின் மாதிரிகளாகவும், அவர்கள் சொல்வதே வாழ்வின் இலக்காகவும் கொள்ளுகின்ற நிலையை ஊடகங்கள் செய்து வருகின்ற வேளையில் விடுப்பு நாட்கள் கெடுப்பு நாட்களாக மாறிவிட்டன.
                      'குலுக்கல்' பாடல்களையும், உடலுறுப்புகளை, உடல்மொழிகளை, உடலின் நிறத்தை இழிவாகப் பேசி வெகுமக்களின் ஆளுமையைச் சிதைக்கும் நகைச் சுவையென்ற பெயரிலான நச்சுச்சுவைக் காட்சிகளையும்,   வீட்டுக்குள் திணிக்கின்றன ஊடகங்கள். மேலும், வெறுக்கப்படுகின்ற வில்லன் பாத்திரங்களுக்கு இனிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மோசடி செய்கின்ற, காதலிப்பது மட்டுமே இளைஞர்களுக்கு இலக்காகச் சொல்லிக் கொடுக்கின்ற, சாதிமேலாண்மை செய்கின்ற கதாநாயகர்களையே போற்றி சாதியை நிலைநிறுத்துகின்ற , புனைவான பாத்திரங்களின்வழி மக்களின் மன மாற்றங்களைத் தடுக்கின்ற திரைப்படங்களையே நம்பி பிழைப்பு ஓட்டும் தொலைக்காட்சிகள், மக்களுடைய சிந்தனைத் திறத்தின் மேல் பெரும் வன்முறையே செய்துவருகின்றன.
                     ஒளிபரப்பும்  உரிமையைப் பெற்றுக் கொண்டவர்கள், நிகழ்ச்சியைவிட  விளம்பரத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கின்ற நிலையில் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறார்கள். ஒரு மட்டை விளையாட்டின் போது(கிரிக்கெட்), ஓட்டங்கள் எடுத்து ஓடிவந்துகொண்டிருந்த இந்திய அணித் தலைவரின் கையில் எறியப்பட்ட பந்து அவரை துடிக்க வைத்தது. அப்பொழுது அவரின் நிலையைக் காட்டுவதற்குப் பதிலாக விளம்பரங்களையே காட்டி அவரின் துன்ப நிலையை மறைத்திட்டனர். இவ்வாறு முக்கிய நிகழ்வுகளிலும், செய்திகள்  போன்ற கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய இடங்களிலும் விளம்பர இடைவெளிகளை  உண்டுபண்ணி கவனச்சிதறல்களை ஏற்படுத்துகின்றனர். மேலும், இப்பொழுதெல்லாம் செய்திகளை விளம்பர நிறுவனங்களே வழங்கும் நிலையில் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டும், திரித்துவிடப்பட்டும் உண்மைகள் மக்களிடத்தில் மறைக்கப்படுகின்றன.
                  மேலும், விளம்பரங்கள் பெண்களை மிகவும் இழிவுபடுத்துவதாக அமைகின்றன. வீட்டில் பூசியிருக்கும் வண்ணத்தைக் கண்டு மயங்கிய பெண் அந்த வீட்டுக்கு மருமகளாக விரும்புகிறாள். ஆனால், அந்தவீட்டு பையன் பத்து வயது சிறுவனாக இருந்த போதிலும் அவன் வளரும்வரை காத்திருக்கவும் துணிவதாக ஒரு விளம்பரம் வந்து , பெண்கள் பகட்டுகளுக்கு எளிதில் மயங்கும் தன்மையுடையவர்களாகவும், அதனால் வாழ்க்கையையே ஈகம் செய்யக் கூடியவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.  இதைவிடவும் கேவலமாக, ஒரு மிட்டாயை பல ஆண்கள் ஒரு பெண்ணிடம் கொடுக்க, அதை சுவைத்தவுடன் சுவையில் மயங்கி அத்தனை ஆண்களுடனும் உறவுகொள்ள ஒப்புக் கொல்லுவதைப் போல ஒரு விளம்பரம் வந்து, பெண்கள் சிறு காரணத்தினாலும் எளிதில் தன்வயப்பட்டுவிடக் கூடிய மனநிலையை உருவாக்குகிறது. இன்னொரு விளம்பரத்தில், ஒரு ரொட்டி நிறுவனம் ஐம்பது பைசாதள்ளுபடி தருகிறது என்ற செய்தி காதில் பட்டவுடன் மருத்துவர்களாலேயே கைவிடப்பட்ட ஒரு பெண் காப்பாற்றப்படுகிறாள். இப்படியாக பொருளாசை, சுயநலம், போட்டி போன்றவைதான் பெண்களின் குணம் என்றவாறு விளம்பரங்கள் ஒரு மனநிலையை கட்டமைக்கிறது.
                     விளம்பரங்களின்மூலம் சரக்குகளில் ஏற்றப்படும் கவர்ச்சியானது, பொருளின் பயன்பாட்டு மதிப்பீட்டிற்கும் மேலாகவே தவறான மோகத்தை திணிக்கிறது. சரக்கையும், அதன்மீது உருவாக்கப்படும் கவர்ச்சியும்  இணைவதை காரல்மார்க்ஸ் கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவ சமூகம், ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முன்னரே விளம்பரங்களின்மூலம் அந்தப் பொருளைத் தேடும் மனநிலையை உற்பத்தி செய்கிறது. வாங்கும் ஆவலை மக்களிடத்தில் அவர்களையறியாமலே ஏற்படுத்திவிடுகிறது. ஒரு பொருளை நாம் உணர்வதில்லை; உணர விடுவதுமில்லை. அதிகார ஊடகங்கள் , நாம் எப்படி உணர வேண்டுமென்று விரும்புகிறதோ , அதன்படிதான் நாம் அந்தப் பொருளை உணர்கிறோம். ஆக,  நாம் உணர்வது அந்தப் பொருளையல்ல; அதுகுறித்து ஊடகங்கள் புனைந்துள்ள போலிமைகளைத்தான். விளைவு, நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வே போலியாகிவிடுகிறது. இதனால், நனவிலி மனதில் பேரச்சம் பெருகி , மனிதர்களுக்குரிய படைப்பு மனத்தை இழந்து யாருடைய கையிலோ நம்மை இய்க்கும் பொத்தனை கொடுத்துவிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப நடமாடும் இயந்திரமாகி விடுகிறோம் என்கிற ழான் பொத்ரியாரின் எழுத்துக்களின் வழியே மீண்டும் பயணிக்கும்போது, விளம்பரமே அனைத்தையும் முடிவுசெய்யும் அளவுகோலாக உள்ள சூழலில்தான்  நாம் வாழ்கிறோம் என்பது தெளிவாகிறது.
                         இவ்வாறு நாம் விரும்பாமலே நம்மைச் சூழ்ந்து தாக்கும் தொலைக்காட்சிகள் மிகப் பெரும் தொல்லைக் காட்சிகளாக மாறிவிட்டன.  அவைகளிலிருந்து விடுபட மக்களே தயாரிக்கும் மக்களுக்கான குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் திரைப்படக் கழகம் என்றென்றும் துணை நிற்கும்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

தொடரும் ஏமாற்றங்கள்

தொடரும் ஏமாற்றங்கள் - தமிழ் முதல்வன்.
                            மாற்றங்கள் பலவகையுண்டு. பிறரால் நிகழ்வது, நம்மால் நிகழ்வது, காலத்தால் நிகழ்வது என்றவாறு அவை  அமைகின்றன. அன்பு, ஆறுதல், உதவி, என விரியும் நம் எதிர்பார்ப்புகள்  குழந்தை, பெற்றோர், மனைவி, சகோதரர், நண்பர் என விரியும் பிறரிடம் கிடைக்காதபோதும், பிறரின்பால் நாம் கொண்டுள்ள திட்டங்கள் நிறைவேறாதபோதும் வரும் ஏமாற்றங்கள் ஒரு வகை. வாழ்வில் நம்மையறியாமலேயே கடந்துகொண்டிருக்கிற நமக்கான அறிவு, வாய்ப்புகள் போன்றவை தெரியவரும்போதும் அது காலத்தால் நிகழும் ஏமாற்றங்கள்.  நாம் கொண்டுள்ள திட்டங்களை முடிக்க நம்மாலே இயலாத் நிலைவரும்போது நிகழும் ஏமாற்றங்கள் நம்மால் விளைந்த ஏமாற்றங்கள்  என இதை விரித்துக் கொண்டே போகலாம்.
                                 இவைகளில் நான் நாள்தோறும் ஏமாறுவது காலத்திடம்தான்.ஒருவகையில் அது என் இயலாமையால் நிகழ்வது என்றுகூடச் சொல்லலாம். வீட்டில் என்னைச் சுற்றி எப்பொழுதும்  புத்தகங்கள், இதழ்கள்  என்றவாறுதான்  சூழ்ந்து கிடக்கும். அதில், இன்று படித்து முடித்துவிடவேண்டும் என்று நான் போடுகிற தீர்மானங்கள் நிறைவேறாத போதுதான் ஏமாற்றங்கள் நிகழும். பல வாசிப்பு வீரர்கள் உட்கார்ந்த நிலையிலேயே முன்னூறு  பக்கங்களை முடித்துவிட்டுதான் எழுந்திருக்கிறார்கள். அதை நானும் செய்யமுடியும். ஆனால் கிரகிக்க வேண்டுமே.
                                ஒரு அமர்வில் நூறு பக்கத்தை மட்டுமே என்னால் வாசிக்க முடிகிறது.அதற்கான நேரமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகிறது. இதனால், கடவுள் நம்பிக்கை இல்லையெனினும்  விஜயகுமாரன் சொன்னதுபோல் இயலாமைகள் நம்மை நமக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ஆற்றலை நோக்கி ஈர்க்கிறது. அந்த ஆற்றலே கடவுள் நம்பிக்கையின்பால் இழுத்துச் செல்கிறது. அப்படிதான், புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவையெல்லாவற்றையும் படித்து முடித்துவிட வேண்டுமென்ற ஆர்வம், ஆவல் என்னை, என்னைமீறிய ஆற்றலை நோக்கிச் செலுத்துகிறது.
                                 இது நாள்தோறும் நிகழும் ஏமாற்றம் என்றால் மாதந்தோறும் ஒரு ஏமாற்றம் நிகழ்கிறது. அது இதழ்கள் மூலம் வருபவை. உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, தமிழினி, புதிய ஜனநாயகம்-கலாசாரம், உழைக்கும் மக்கள் தமிழ்தேசம், தென்செய்திகள், புது விசை... என விரியும் இதழ்கள் மாதந்தோறும் முன்னூறு ரூபாயைப்  பிடித்து விடுகின்றன.. ஆனால், அனைத்திலுமுள்ள கட்டுரைகளையும், படைப்புகளையும் படிக்க முடிவதில்லை. இதனால் வரும் ஏமாற்றம் அதிகம்.
                                  இதுபோக புத்தகக் கடைக்குப் போனாலா, புத்தகக் கண்காட்சிக்குப் போனாலோ  ஒரு ஏமாற்றம் வரும். அது இவையெல்லாவற்றையும் விஞ்சிவிடும். ஏராளமான புத்தகங்கள் இருக்கும். பார்ப்பேன். புரட்டுவேன். உடனே வாங்க வேண்டும்போல இருக்கும். விலையைப் பார்ப்பேன். ஏமாற்றம். கையில் காசு வேண்டுமில்லையா. அனைத்துக் கடைகளுக்கும் சென்று வாங்க ஏங்கி, ஏமாந்து அக் கண்காட்சியைவிட்டு வெளியேறும்போது கைகளில் ஓரிரண்டு புத்தகங்கள் மட்டுமே ஆறுதல் தரும். மற்ற அனைத்துப் புத்தகங்களும், எங்களைத் தவிக்கவிட்டுச் செல்கிறாயே என ஏங்கிக் கொண்டிருக்க அவைகளை நான் தவிக்கவிட்டு வந்துவிடுவேன்.
                            ஆனால் அண்மையில் நிறைவு ஏற்படுவதாக ஒரு சூழல் அமைந்தது.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குச் செல்வதற்கு கையில் காசு இல்லாமல் இருந்தேன். தக்க நேரத்தில் அண்ணன்  சிவகுமார் அவர்களின் உதவி தென்னாப்பிரிக்காவிலிருந்து  கிடைத்தது. கோவை மாநாட்டின் எதிர்புறம் நடந்த புத்தகச் சந்தையில் குடும்பத்தோடு சென்று மூவாயிரம் ரூபாயிக்கும் மேலாக புத்தகங்கள் வாங்க முடிந்தது.  எந்தக் கண்காட்சியிலும் ஐநூறு ரூபாய்க்கும் மேலாக புத்தகங்களை வாங்கியதில்லை என்ற நிலையில் இந்த அளவுக்கு வாங்கப் பெற்றதில் மகிழ்ச்சியில் திளைத்தேன். குழந்தைகளைப் போன்று புத்தகங்களை தூக்கி சுமந்துகொண்டு வந்தேன். சந்தையின் வெளிவாயிலின் அருகில் அஜயன் பாலா அவருடைய புத்தகங்களோடு நின்றிருந்தார். அவரிடம் பேசமட்டுமே முடிந்தது. புத்தகம் வாங்கக் காசில்லை. வாங்கிய புத்தகங்களின் வழியே  அண்ணன் சிவகுமார் அவர்கள்  பக்கத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார். ஆனால், அங்கு  என்னுடைய கவிதைகளையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை வாசிக்கும் ஆய்வரங்குக்குள் என்னால் செல்லமுடியாமல் போய்விட்டது. எந்தக் கவிதைப் புத்தகம் உள்ளே வாசிக்கப் பட்டதோ அதே கவிதைப் புத்தகம் என்னை உள்ளே செல்லவிடாமல் செய்து விட்டது. புத்தகத்தின் தலைப்பில் 'ஆயுதம்' இருந்ததால் காவலர்கள் பயந்து விட்டார்கள். அந்தப் புத்தகம்  கையில் இருந்ததால்  என்னை விசாரணையின் பேரில் வருத்தி விட்டார்கள். இதைப் பதிவு செய்த கல்கி இதழுக்கும் திலகபாமாவுக்கும் நன்றிகள். இவ்வாறாக அங்கு ஏமாற்றம்.
                                         இதில் இன்னொரு பெரிய ஏமாற்றம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. வாசிக்கும் எழுத்துக்களின் மூலம் பிறக்கும் புதிய சிந்தனைகளை உடனே எழுதமுடியவில்லை. விட்டு விட்டுப் பிறக்கும் சிந்தனைகளைத் தொகுக்க முடியவில்லை. தோன்றி மறைந்துகொண்டேயிருக்கின்றன. எழுத உட்கார்ந்தால் படிக்கத் தோன்றுகிறது. படித்துக் கொண்டிருக்கும்போது எழுதுவதற்கான சிந்தனை பிறக்கிறது. இப்படியாக, சிந்தனைஎல்லாவற்றையும்  எழுதமுடியவில்லை என்பது ஏமாற்றமாயிருக்கிறது.
                                         இவை எல்லாவற்றையும் விட ஒரு பெரிய ஏமாற்றம் எனக்குள்ளும், என்னால் இந்த சமூகத்திற்கும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அது என் எழுத்துக்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் விளைவிக்கவில்லை என்பதுதான்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

அழிக்கப்படும் உலகங்கள்



ன் எலும்புகள் ஓடிய
நான் சுமக்கும் புத்தக மூட்டையைவிட
என்னை அழுத்தி வருத்தும்
உங்கள் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
என் உலகத்தை தின்றுவிடுகின்றன.
பிறரின் உலகத்தை மகிழ்வித்து
பொம்மையாக்கப்பட்ட நான் இயந்திரமாகிறேன்.
அழிக்கப்பட்ட உலகத்தைத் தேடும் இயந்திரங்கள்
அழிவுக்கானதாயும் மாறலாம்
அப்பொழுது குழந்தை உள்ளங்களைத் தேடாதீர்
அப்பாவே அம்மாவே.

புதன், 7 ஜூலை, 2010

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்-குறிப்புகள்

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்
-தமிழ் முதல்வன்

                 சாதி எனும் பெயரில் சக மனிதர்களை விலங்குகளாக நடத்திய கேடுகெட்ட சமூகத்தைத் திருத்த, ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் சமூகத்திலிருந்து தோன்றியவர் தத்தா ரெட்டைமலை சீனிவாசன். செங்கல் பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கோழியாளம் எனும் கிராமத்தில் 7.7.1859 ஆம் ஆண்டு பிறந்தார். கோழியாளம் மதுராந்தகத்திற்கு வடமேற்கே சுமார் பதிமூன்று கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. இவர் பெயரிலுள்ள ரெட்டைமலை  எனும் ஒட்டு அவரது தந்தையின் பெயராக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. பின்னர் இவரது குடும்பம் தஞ்சை மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தபோது அங்கு உயர் கல்வியை முடித்தவர், அதன்பின்னர்  கோவையில் அரசினர் கலைக் கல்லூரியில் படிப்பினைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பி.ஏ. பட்டதாரியாக பெருமைகொண்டார். இங்கு கல்வி பயிலும் காலத்தில் அறிஞர் அயோத்திதாச பண்டிதரின் வீட்டில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் அயோத்திதாசப் பண்டிதரின் மைத்துனன் ஆவார்.  1887  ஆம் ஆண்டு ரெங்க நாயகி அம்மையாரை மணந்தவர் ஊட்டியில் ஒரு நிறுவனத்தில் பத்தாண்டுகள் கணக்கராக பணிபுரிந்தார்.
                       தலித் சமூகத்தின் துயரத்தைத் தொடர்ந்து கண்டவர், தம் சமூகத்தின் துயரங்களை நீக்க பணியிலிருந்து விலகி 1890 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். தென்னிந்தியா முழுவதும் சென்று ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிந்த  அவர், சாதியிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான வழியைக் காணும் ஆய்வில் இறங்கினார்.  சமத்துவ சமூகம் அமைப்பதற்கான தரவுகளை கல்வெட்டுகளிலிருந்தும், வரலாற்று நூல்களிலிருந்தும், அரசுக் குறிப்பேடுகளிலிருந்தும்  தேடினார். தானடைந்த அறிவுகளை 1893  ஆம் ஆண்டு தொடங்கிய 'பறையன்' என்ற இதழ் மூலம் வெளிப்படுத்தினார். அவரின் பத்திரிகை அந்நாளில் அச்சிட்ட உடனேயே வெகுவாக விற்றுத் தீர்ந்தது. இந்திய கடந்து அயல் நாடுகளிலும் அதற்கு வாசகர்கள் பெருகியிருந்தனர். பத்திரிகையாளராக மட்டும் இருந்திடாமல் மக்களை திரட்டி அமைப்பாக்கினார். 1891 ஆம் ஆண்டு பத்திரிகை தொடங்கும் முன்னரே 'பறையர்மகாஜன சபை ' என்ற அமைப்பை தொடங்கி சாதிக் கொடுமையை எதிர்த்து மக்களை அணியமாக்கினார்.பல போராட்டங்களை நடத்தினார்.
                          'பறையர் மகாஜன சபை' மூலம் அக்காலத்திலேயே மாநாடு நடத்தி தலித் மக்களின் உரிமைகள் குறித்துப் பேசினார். இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள், கூட்டங்கள் மூலம் 1894 ஆம் ஆண்டு குடியிருக்க வீட்டுப் பட்டாக்களும், விவசாயம் செய்வதற்கு நிலங்களும், குழந்தைகளுக்கு கல்வி வசதியும் பெற்றுத் தந்தார்.மேலும் , ஆங்கில அரசு காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்த முன்னோடியாகவும்  விளங்கினார். மக்களோடு இருந்து பணிசெய்ததன் சாட்சியாக ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டலாம்.1895 ஆம் ஆண்டு சென்னை வந்த ஆங்கில அதிகாரி வைஸ்ராய்  லார்டு எல்சின் என்பவரிடம் மனுக் கொடுப்பதற்காக் மக்களைத் திரட்டியவர், அவர்களோடு ஊர்வலமாகச சென்றார். இன்றைய கால ஊர்வலங்களின் போது தலைவர்கள் மக்களுக்கு அப்பாற்பட்டு வாகனத்தில் வருவதை ஒப்பிட்டுப் பார்த்து அவருடைய மக்கள் நெருக்கத்தை உணரலாம்.
                                 மேலும்,அதே 1895 ஆம் ஆண்டு அக்.5 ஆம் ஆண்டு வெளிவந்த பறையன் இதழில் தலித்துகளுக்கு நிலம் ஒதுக்கவில்லை என்பது குறித்து எழுதினர்.மதுரை மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் புறம்போக்கு நிலங்களை பறையர் சமூகத்திற்கு வழங்கவேண்டுமென்ற அரசாங்க உத்தரவு மதுரை மாவட்டத்திற்கு பொருந்தாது என்று கூறி நிலம் கொடுக்காமல் ஓரவஞ்சனை செய்வதாகவும், நிலம்கேட்டு அளித்த விண்ணப்பங்களை நிராகரித்ததாகவும் கூறினார். மேலும், புதுப்பட்டி கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை ஒரு பிராமணருக்கு ஒதுக்கியதை சுட்டிக் காட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் பிராமணர்களே அதிகாரிகளாக இருப்பதால்தான்  பறையர்களுக்கு ஒரு துண்டு நிலம்கூட ஒதுக்கவில்லை என்றும் எழுதினார்..
                              இந்நிலையில், 1896 ஆம் ஆண்டு அக்.ஏழாம் நாள் சென்னை விக்டோரியா அரங்கில் மக்கள் மாநாட்டைக் கூட்டியவர் ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதாரம்,பண்பாடு குறித்துப் பேசினார். அதுகுறித்து பல செயல் திட்டங்களை வகுத்தார். ஆனால், திட்டங்கள் நிறைவேறத் தேவையான நிதிதேடி லண்டன் நோக்கி கப்பலில் பயணமானார்.செல்லும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதனால் தென்னாப்பிரிக்காவில் இறக்கிவிடப்பட்டார். அங்கேயே நேட்டால் என்ற இடத்தில தங்கி நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றினார். இந்த பணி நாட்களின்போதுதான் காந்தியுடன் நண்பரானார். தென்னாப்பிரிக்காவின் பீனிக்ஸ் என்னுமிடத்தில் காந்தியைக் கண்டதாகக் கூறுகிறார். காந்திக்கு தமிழில் பெயர் எழுதக் கற்றுக் கொடுத்தார். ஆப்பிரிக்காவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி, மீண்டும் பறையன் இதழைத் தொடங்கினார். (எஸ்.கே.அந்தோணி பால் என்பவற்றின் குறிப்பு இப்படிச் சொன்னாலும் ரவிக்குமார் அவர்களின் தொகுப்பில் 1897 ஆம் ஆண்டு வெளிவந்த 'பறையன்' இதழ்ச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆக அவர் வெளி நாட்டில் இருந்தபோதும் பத்திரிகை நடத்தியிருக்க வேண்டும்)
                                    1922 களில் நீதிக் கட்சியில் இணைந்தவர், 1923 முதல் 1938  வரை பதினைந்து ஆண்டுகள் சட்டப் பேரவையில் நியமன உறுப்பினராக இருந்தார். அனைத்து மக்களுடனும் சாலைகளில் சமமாக நடக்கவும், பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கவுமான சுதந்திரம் கொடுக்கும் சட்டத்தை 1925 ஆம் ஆண்டு ஆங்கில அரசிடமிருந்து  ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மேலும், ஒடுக்கப்பட்டவர்கள்  மீட்சிபெற சென்னையில் 'ஐக்கிய மகா சபை' எனும் அமைப்பை 1928 ஆம் ஆண்டு நிறுவி அதன் தலைவராகவும் விளங்கினார்.
                                    லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு புரட்சியாளர் அம்பேத்கருடன்  சென்றவர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை அதிர்ச்சியடையச் செய்தார். இங்கிலாந்து அரசர் கைகுலுக்க வந்தபோது கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டு கைகுலுக்குவதிலிருந்து விலகி 'நான் தீண்டத்தகாதவன்' என்று கத்தினார். அவையிலிருந்த அனைவரும் அதிர்ந்தனர். அரசர் தத்தாவை தழுவி அணைத்துக்கொண்டார். தாத்தா அணிந்திருந்த  'பறையன்' என்ற அடையாள அட்டையை நெஞ்சோடு உரசினார். இந்நிகழ்வு அம்பேத்கருடன் அவர் வைத்த இரட்டை வாக்குரிமை கோரிக்கை ஏற்கப்பட உதவியது. இவ்வரலாற்று நிகழ்வு 1930 ஆம் ஆண்டு நடந்தேறியது.
                                            ஆனால், இரட்டை வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாமல் இருந்தார்.ஒடுக்கப் பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்ததை வீரத் தன்மையற்ற செயல் என்று கூறியதோடு, நேருக்கு நேர் நின்று வாதாடாமல் உண்ணாமல் இருக்கும் கோழை என்று காந்தியைக் குறிப்பிட்டார். அச்சூழ்நிலையில் ஒடுக்கப் பட்ட மக்கள்மீது நடத்தப் பட்ட கொலை,பாலியல் வன்முறை ஆகியவை பெருகியது. அதனால், வேறு வழியில்லாமல் தலித்துகளின் அன்றையப் பாதுகாப்புக் கருதி அம்பேத்கருடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது ஒரு வரலாற்றின் கருப்பு நிகழ்வாக அமைந்தது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு காந்தி செய்த துரோகம் மன்னிக்கமுடியாததாக அமைந்தது.
                                          அவருடைய மைத்துனன் அயோத்திதாசர் ' தமிழன்' என்று சாதியை ஒழிப்பதற்காக மொழியின்வழி அடையாள படுத்தப் பட்ட பத்திரிகை துவங்கியதற்கு மாறாக, சாதியின் பெயரிலேயே 'பறையன்' என்று பத்திரிகை துவங்கினார். எனை எந்தப் பெயரைச்  சொல்லித் தாழ்த்துகிறாயோ அந்தப் பெயர்கொண்டே மீண்டேழுவேன் என்றவாறு அவரது போர்க்குணம் அமைந்தது. அயோத்திதாசர் 'திராவிட மகாஜன சபை' என்று துவங்கியபோது இவர் 'பறையர் மகாஜன சபையை' நிறுவினார். விடுதலையின் செயல் வடிவத்தில் இவ்வாறு தனித்த போக்குகளைக் கொண்டிருந்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கரின் கண்ட வழிமுறையிலும்  முரண்பட்டு நின்றார். புத்த மதம் மாறினால்  சாதிக் கொடுமைகளுக்கு முடிவுகட்டலாம் என அம்பேத்கர் உரைத்த பொழுது, அதில் தீர்வுகிடைக்கது என்று ஆணித்தரமாகக் கூறினார் தாத்தா. அவர் கூறியது போலவே இன்றும் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளின் நிலையில் மாற்றமில்லை.
                                      இவ்வாறான தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த தாத்தா 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -27 ஆம் நாள்  உருவாக்கப்பட்ட  செட்யூல்டு இன புரோவின்சியல் அட்வைசரிப் போர்டுக்கு  ஆலோசகராக விளங்கினார். இவ்வாறு தொடர்ந்து மக்கள் பணி செய்த அவருக்கு ஆங்கில அரசு 1926  ஆம் ஆண்டு ராவ் சாகிப், 1930  ஆம் ஆண்டு ராவ் பகதூர், 1936 ஆம் ஆண்டு திவான் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கியது.  1940 ஆம் ஆண்டு திராவிட மணி என்ற பட்டம் தமிழ் தென்றல் திரு.வி.க. முன்னிலையில் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுக்கு இராஜாஜி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
                                         ஓயாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை தேடி ஒடிய மாவீரன் இரெட்டைமலை சீனிவாசன் 1945  ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் (இயற்கை எய்தினார்). அவரின் பிறந்த நாள் இன்று. சாதியை ஒழிக்க சபதமேற்போம்.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

குழந்தைகள் மீதான வன்முறை -தமிழ்முதல்வன்

குழந்தைகள்  மீதான வன்முறை -தமிழ்முதல்வன்  
                         ண்மையில்  கோவையில் சந்தித்த (24-06-2010) அஜயன் பாலா அவர்களும், முக நூலில் (face book) சந்தித்த ஞான பாரதி அவர்களும் 'எப்ப சென்னை வருவீங்க?' எனக் கேட்டனர்.  எனக்குச் சென்னை என்றாலே ஒரு பயம் தொற்றிக் கொள்ளும். மிகவும் அவசியமேற்படும் பொழுது சென்னை செல்லும்போதெல்லாம் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுதான் செல்வேன். ஏனெனில் மதுரையை விடவும் சென்னை அவலம் மிகுந்த நகரமாக எனக்குக் காணப்படுகிறது. சென்னை செல்லும் போதெல்லாம் கட்டிடங்கள், வாகனங்கள், கட்டிளம் நங்கையர்கள், பகுமான மனிதர்கள், பணக்காரத் தோற்றங்கள் இவையெல்லாவற்றையும்  விட  என்கண்ணில் ஏழைகளே தென்படுகின்றனர். அன்றாட உணவுக்கு அல்லாடும் தெருவோர வாசிகள் நிலைமையே தென்படுகிறது. சென்னையில் காலடி எடுத்து வைக்கும் நேரமேல்லாமே அதிகாலை பொழுதாக அமைவதால்,  செல்லும் வழிகளில், சாலையோர நடை பாதைகளில் விரித்த துணிகளும் விலகிக் கிடக்க வெற்றுத் தரையில் படுத்து உறங்கும் அப்பாவிகளின் நிலைமை காலையிலேயே கவலையைத் தந்துவிடும். அதிலும் அந்த அப்பாவிகளின் நடுவில் தூங்கும், ஒருசில இடங்களில் பெற்றோரை விட்டு புரண்டு புரண்டு விலகிப் போய் தனியாக அனாதையாக தூங்கிக் கிடக்கின்ற குழந்தைகளின் காட்சி இதயத்துடிப்பைக் கூட்டிவிடும். அக்குழந்தைகளின்மேல்  படிந்துள்ள சிங்காரச் சென்னையின் தூசிகளும், அழுக்குகளும் அவர்களின் வாழ்வில் படிந்துள்ள துன்பத்தைப் போல சுமையாக அமுக்கிக் கிடக்கும்.  காலை வெயிலில் காய்ந்த சருகுகள் போல, சோர்வாகக் கிடக்கும் அவர்களின் நிலை  சென்னையில் நான் செய்ய வேண்டிய பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கும்.
                                              மலை, காடு, வயல் போன்ற பகுதிகளில் இயற்கை சார்ந்து வாழமட்டுமே பழகிய, அரசாங்கத்தாலும், அதன் துணைகொண்டு தனியார் நிறுவனங்களாலும் விரட்டப் படும் பழங்குடிகள் மற்றும் தொல்குடிகள் (தலித்துகள்) பெரு நகரங்களுக்குத்தான் ஓட வேண்டியிருக்கிறது. அச்சூழலில், அறிவியலின் நவீனத் தன்மையோடும், அதன் அகால ஓட்டத்தோடும் பிணைக்கப் பட்டு சக மனிதரை மயக்கும் அதி தொழில்நுட்பமிகுந்த போலிப் புன்னகைகள் போன்ற இதர உடல் மொழிகள் மற்றும் வெளிப்பாடுகளுடன் அலைகின்ற நகரத்து மக்களோடு போட்டியிட முடியாமல் அவர்களால் துவைக்கும் துணியைப் போன்று அடித்துத் தூக்கி வீசப் படுகின்றனர். ஒரிசாவின் பழங்குடி மக்களின் தலைவர், 'எங்கள் வாழ்க்கைமுறை நகரங்களில் கிடையாதாகையால் நாங்கள் அழிந்து விடுவோம்' என்று அச்சம் பொங்கக் கூறுவதை இங்கு சுட்டிக் காட்டலாம்.   புதைகுழிக்குள் தள்ளப்பட்டதுபோல்  நகரங்களுக்குள் ஒருவேளைச் சோற்றுக்காக அலையும் வேதனைகள் சொல்லித் தீராது கிடக்கின்றன. அவர்களின் குழந்தைகள் பசியின் வேதனையில் அழுகும்போது அந்த மூலதனத்தையே முதலீடாக்கி பிச்சை எடுக்கிறார்கள். அழுதபிள்ளை பால் குடிக்கும் என்ற பழ மொழி அழுத பிள்ளை காசு பெறுகிறது என்றவாறு புது மொழியாகிவிட்டது. இயலாமையால்  நேரும் இந்தச் சூழல், சில வன்மனதுக்காரர்களுக்கு சாதகமாகி விடுகிறது. அதே குழந்தைகளை வாடகைக்கு எடுத்து காசு பொறுக்கும் எந்திரமாக மாற்றி விடுகின்றனர்.
                                                 என் வாழ்க்கையில் என்னைத் தூங்கவிடாமல் செய்யும் சம்பவங்கள் என்றால் ஒன்று விபத்துக் காட்சி. இரத்தமும் பிய்ந்துபோன சதையுமாகக் கிடக்கும் உடல்களைப் பார்த்துவிட்டால் ஒரு மாதம் வரை நிம்மதியான தூக்கம் இராது. அண்மையில் இணையத்தின் வழியாக பார்த்த காட்சி ஒன்று அதைவிடவும் எனை வருத்தியது. தமிழ் இளைஞர்களை வரிசையாக முழங்காலிட்டு வைத்து அவர்களின் தலையில் சிங்களச் சிப்பாய்கள் சுட்டுத் தள்ளும் காட்சியது. இரத்தமும் சதையுமாக  அழுத்தி வருந்தவைக்கும் அக்காட்சிகளுக்கு இணையானதாக மறக்கமுடியாத கொடுமையாக பாதிக்கும் மற்றொன்று குழந்தைகள் மீதான வன்முறை.
                                                   போலித் தாய்மார்கள்  கடைவாயில்களிலும், உணவுவிடுதி வாயில்களிலும், கோயில் வாயில்களிலும் நின்றுகொண்டு பசியால் ஏற்கனவே மயக்கமுற்று தோளிலும், உடல்மீது தொங்கும் தொட்டியிலும் கிடக்கும் வாடகைக் குழந்தைகளை பிஞ்சுச் சதை கிழிய கிள்ளியும் , பிஞ்சுச் சதை வீங்க அடிப்பதுமான காட்சிகள் எனை மயக்கமுறச் செய்திருக்கின்றன. வலி தாங்கமுடியாமல் ஆதரிக்க ஆளில்லாமல் கதறும் குழந்தையைக் கண்ட ஒரு சூழலில் நான் அந்த போலித் தாயை கண்டித்த பொழுது ரவுடிகள் போன்ற கூட்டம் எனைச் சூழ்ந்துகொண்டது. சக மனிதர்கள் வேடிக்கை பார்த்துவிட்டு இது இவனுக்கு வேண்டாத வேலையென்று ஒதுங்கிப் போய்விட்டனர். ஒரு சிலரோ 'அது அப்படிதான் நடக்குது தம்பி, நம்ம என்ன பண்றது' என்று எனக்கு அறிவுரைசொல்லிப் போகிறார்கள். நான் இச்சமூகத்தை நினைத்து அதிர்ச்சியடைந்து, அந்தக் குழந்தைகளின் ஆதரவற்ற மனநிலைகளை, உடல் வலிகளை எண்ணி நானாக அழுதிருக்கிறேன். புலம்பியிருக்கிறேன். இப்பொழுதும்  என்மனநிலை  அக்குழந்தைகளுக்கு  ஆதரவாக, அதுவும் அவர்கள் அறியாவிதத்தில், நேரடியாக உதவாநிலையில் அலைந்துகொண்டிருக்கிறது. இந்த அவலங்களைக் காணும் சக மனிதர்கள் நேரடியாக அப்போலி தாய்மார்களை குற்றம் சாட்டிவிட்டு அவர்களும் உள்ளிட்ட இச்சமூகத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அல்லது அவர்களுக்கு தங்களும் இந்நிலைக்கு ஒரு காரணம் என்பதே தெரியவில்லை.
                                                வன்மையான சமூகம் ஈன்று போட்ட பாமர ஏழைப் போலித் தாய்களின் இக்கொடுமைகளுக்கு  சற்றும் குறைவில்லாமல் படித்த நாகரிக பெற்றோரே ஒரு குழந்தையை அடிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். வறுமை எனை திருப்பூருக்குத் தள்ளிய போது, அங்கு நான் குடியேறிய  வளாகத்திற்குள் குடியிருந்த ஒருவன் , நாகரிக நடை உடை கொண்டவன். கல்லூரிப் படிப்புகளை முடித்தவன்.மனைவிமீது கோபம் கொண்டாலும்கூட குழந்தையை அடித்துத் துவைப்பான்.அதுவும் அவனது அடித்தல் முறை காவல் நிலையங்களில் கயிற்றில் கட்டி அடிப்பதைப் போன்று இருக்கும்.ஒருகையில் குழந்தையின் கைகளிரண்டையும் பிடித்துத் தூக்கிக் கொண்டு அந்தரத்தில் தொங்கவிட்டு மற்றொரு கையால் கோபம் தீரும் வரை அடிப்பான். எண்பது கிலோ எடை கொண்ட உடம்பின் வலு வன்மையாக எட்டு கிலோஎடைகொண்ட   உடல்மீது தாக்கும்போது  அந்த வலியைநினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.. அதுபோல் அவனுடைய மனைவியும் கையில் கிடைத்த கரண்டி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு அடிப்பாள். இப்படி  அடிவாங்கியே நான்கு வயதுக் குழந்தை இரண்டு வயதே ஆனது போன்று வளர்ச்சியற்று சோர்வாகவே காணப்பட்டது. நான் உள்ளிட்ட வளாகத்தில் குடியிருந்த அதனை பேரின் கண்டிப்புகளைத் தாங்க முடியாமல் வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டான். அந்தக் குழந்தையை அடிக்கும் காட்சிகள் மட்டும் இன்றும் நினைவில் தொடருகின்றன.
                                                          மேலும் திருப்பூரின் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் அநாதை போலவே வாழ்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களெல்லாம் வேலை செய்தால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்பதால் குழந்தைகள் தனியாகவே விடப்படுகின்றனர். அங்கு குழந்தைகளைப் பாதுகாக்கும் எந்த ஒரு சூழலும் இல்லை. அங்குள்ள நிறுவனங்களில் வேலை நேரம் காலை எட்டரை மணிக்கே தொடங்கி விடுவதால் ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு பெற்றோர் கிளம்பி விடுகின்றனர்.பள்ளிசெல்லா குழந்தைகள் அடைபட்ட வீட்டினுள் முடங்கிக் கிடப்பதும், பள்ளி செல்லும் குழந்தைகளை அதற்குத் தயார்ப்படுத்த ஆளின்றி ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்வதாயும் இருக்கின்றனர்.. இப்படியே படிப்பில் ஆர்வம் குறைந்து இடை நிற்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர். பணியிடங்களில் வேலைப் பளு இருண்ட உலகத்தில் அவர்களைத் தள்ளுகிறது. மேலும், அங்கு ஆண் பெண் என்று  பாராமல் குழந்தைகள் அனைவரும் பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர்.இவைகளில் பெரும்பாலானவை தலித் குழந்தைகளே என்பது குறிப்பிடத் தக்கது.  இப்படியான வன்முறைகளால் கருவுற்றுப் பிறக்கும் சிசுக்கள் குப்பைத் தொட்டிகளிலும் கழிவுநீர் வாய்க்கால்களிலும்  பிணமாகி விடுகின்றன.மேலும் பல சிசுக்கள் பிறக்கும் முன்பே கருவறைக்குள்ளிருந்து வெளியே வீசப் படுகின்றன.உலக அளவில் பார்த்தால் யூனிசெபின் கணக்குப்படி ஒன்றரைக் கோடிக் குழந்தைகள் முதலாவது பிறந்த நாளுக்கு முன்பு இறந்து விடுகின்றன. ஆனால் இந்தக் கணக்கில் திருப்பூர் போன்ற தொழில் பெருத்த நகரங்களில் நசுங்கிய குழந்தைகளின் எண்ணிக்கை விடுபட்டிருக்கலாம்.
                                       திருப்பூரில் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வரை நான்கு சுவர்களுக்குள்ளேயே குழந்தைகள் முடக்கப்படும்போழுது மன பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  இறுகிய அழுத்தமான மனநிலையிலிருந்து விடுபட சிறு வயதிலேயே புகை, மது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.பனியன் நிறுவனங்களில் துணி வெட்டும் பொழுது வரும் தூசிகள், துணிகளில் கரை நீக்கப் பயன் படும் வேதி அமிலங்கள் போன்ற  இன்னபிற உடலை கேடு செய்யும்  சூழல்களில்தான் அவர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் குட்டிஜப்பான் என்றழைக்கப்படும்  சிவகாசியிலும் குழந்தைகள் அபாயகரமான  இரசாயன கலவைகளோடு பணிபுரிகின்றனர். இப்படியாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகையில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில இருக்கிறது. ஆந்திரம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த அறிக்கை 2005 எடுக்கப்பட்டது.
                                           தொழில் நகரங்களைக் காட்டிலும் சொற்பக் கடனுக்காக செங்கல் சூளைகளிலும் கட்டிட வேலைகளிலும் மிகவும் கடினமான பணியை குழந்தைகள் செய்துவருவது மிகவும் கவலைக்குரியது.  மேலும், பெரும் பண்ணைகளிலும், அரிசி அரவை நிலையங்களிலும் தூசுகளை  சுவாசித்துக்கொண்டே பணிபுரிகின்றனர். குழந்தைகள் கடினமான அபாயகரமான வேலைகளை இந்தியா  முழுவதிலும் செய்து வருவதற்கு பெரும் சாட்சியாக விளங்குவது உ.பி.யிலுள்ள பிரோசாபாத் கண்ணாடித் தொழிற்சாலை. ' ல பியாஸ்' எனப்படும் கைப்பிடி இல்லாத  , நான்கடி நீளமுள்ள இரும்புக் கம்பிகளின் முனையில் அடைக்கப் பட்டுள்ள எரியும் கண்ணாடிக் கூழ் கொண்ட களிமண் கலவையை குழந்தைத் தொழிலாளர்கள் சுமப்பதாக பேரா. சந்திரா கூறுகிறார். அங்குள்ள எரியுலைகள்  1800 டிகிரி வரை வெப்பம் உள்ளதாக அவர் கூறுகிறார். அங்கு பணிபுரியும் எழுபதாயிரம் தொழிலாளர்களில் பதிமூன்று சதவீதம் பேர் குழந்தைகள் என்று அம்மாநில அரசே ஒப்புக் கொள்கிறது.மேலும் கல்குவாரிகளில் கல் உடைக்கவும் , சுமக்கவுமான வேலைகளை செய்யும் குழந்தைகள்  எலும்புகள் ஒடிய பாடுபடுகின்றனர்.
                               திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளில் வேலை செய்ய பெண்குழந்தைகளே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  அதிகாரிகளிடம் காட்டுவதற்காக குழந்தைகளுக்கு சேலைகட்டிவிட்டு பெரியவளாக போலியான அடையாளம் காட்டுகின்றனர். திருமணத்திட்டம் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கிவிட்டு இறுதியில் சொற்பத் தொகையைக் கொடுத்ததும் , சில நேரங்களில் அதையும் தராமல் தவிக்க விடுகின்றனர். இவ்வாறு ஏமாறும், சுரண்டப்படும் பெண்குழந்தைகள் பெரும்பாலும் தலித்துகளாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு நிகழும் பாலியல் கொடுமைகள் வெளிதெரியாமல் மறைக்கபடுகின்றன. இப்படியாக , இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ஏழு லட்சம் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
                                   கிராமப் புறங்களில் சாதி ஆதிக்கவாதிகளிடம் , மிக எளிதில்  தலித் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.  சாதியாதிக்கவாதிகளையே சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெற்றோரும் எதிர்க்கத் திராணியற்று விடுவதால், கொடுமைப்படும் குழந்தைகள் மன பாதிப்புக்குள்ளாகி பின்னாளில்  வயதுக்கு வருமுன்பே பாலியல் தொழிலுக்கு வந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் புரியும் பெண்களில் பதினைந்து சதவீதம் பேர் இப்படியான பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர். குறிப்பாக , துளிர் எனும் அமைப்பு 2006 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள 2211 குழந்தைகளிடம் ஆய்வுசெய்தபோது 42 சதவீதம் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கண்டுபிடித்துள்ளது.
                    ஊடகத்தின் தாக்கத்தினாலும், விரைந்து தாக்கும் வரன்முறையற்ற பன்னாட்டு பழக்கவழக்கங்களாலும்  காமவெறி கொண்டு தம் குடும்பக் குழந்தைகளிடமே பாலியல் வன்முறை செய்யும் மிருகங்களும் மனிதன் என்ற உருவத்தில் அலைகின்றன. சாக்சி எனும் நிறுவனம் டெல்லியிலுள்ள 350  குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் 63 சதவீதம் பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.
                                                   மேலும் குழந்தைகளை பெரியவளாக்கிப் பார்க்கத் துடிக்கும் பெற்றோர்கள் அதன் மழலைத் தன்மையை தடுத்து, ஒருவித அழுத்தத்தை திணித்து விரக்தியை உண்டாக்குகின்றனர். விஜய் தொலைக் காட்சியில் சிறுவர்களுக்கான நடனப் போட்டியில் ஆடும் குழந்தைகள், சினிமாப் படங்களில் காதலர் இருவர் தன்னுடைய பாலுணர்வை வெளிப்படுத்த மேற்கொள்ளும் அசைவு நளினங்கள் (அந்த உணர்வு குறித்து ஏதும் அறியாமல் இருக்கும் வயதில், பாலின உந்துநீர்கள் சுரக்கும் முன்னரே ) ஆகியவற்றை செய்திட நிர்பந்திக்கப் படுகின்றனர். குழந்தைகளிடத்தில் இவ்வாறு தெரியாமல் வெள்ளிப்படும் பால்வேட்கை உந்து அசைவுகள் காமுகர்களை ஈர்த்து, குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. இவ்வாறான நிலையில் ஊடகங்களும் குழந்தைகளின் கொடுமைகளுக்கு துணைபுரிகின்றன. இவ்வாறு நடக்கும் கொடுமைகள் நகரங்களில் வெளியே தெரிகின்றன. கிராமங்களில் நடக்கும் குழந்தைகள் மீதான கொடுமைகள் அங்குள்ள கட்டப் பஞ்சாயத்துக்குக் கூட வருவதில்லையாதலால் மறைக்கப் படுகின்றன.
                                     செல்பேசியில் மணிக்கொருமுறை பார்த்து மகிழும்படியான பாலுறவுப் படங்களுடன் அலையும் இளைஞர்கள் , தான்கொண்ட வக்கிரத்தை எளிதில் தீர்த்துக் கொள்ள , எதிர்ப்பும் வலுவும் குறைவான குழந்தைகளையே நாடுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளுக்குச் சாட்சியாக அக்குழந்தைகளின் உடலமைப்பே இருந்துவிடுகின்றன. ஆனால், ஆண்குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு சாட்சியங்கள் உடலில்  தென்படுவதில்லை. இப்படியான நிலையில் சம்வாதா எனும் அமைப்பு பெங்களூரில் 1996 ஆம் ஆண்டு மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் 47 சதவீதம் பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாயினர் என்று வசந்தி தேவி (காலச்சுவடு-90)கூறுகிறார். மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறை, குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து பதிமூன்று மாநிலங்களில் 12 ,447  குழந்தைகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 53 சதவீதம் பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக , அதிலும் 21 .9  சதவீதம் பேர் மோசமான பாலியல் கொடுமைக்கு உள்ளானதாகவும் தெரியவந்தது.இதில் இருபால் குழந்தைகளும் சரிசமமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இவ்வாறான பாலியல் கொடுமை புரிவதற்கு கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் குழந்தைகளைத் தேடி வெள்ளையர்கள் வருவதாக பத்திரிகைகள் (புதிய கலாசாரம்-அக்-2008 ) சொல்கின்றன. இதற்காக குழந்தைக் கடத்தல்களும் நடக்கின்றன.கடத்தப்படும் குழந்தைகள் விற்கப்படுகின்றன. வங்காள தேசத்தில் பத்து முதல் பனிரெண்டு வயது வரையிலான சிறுவர்களை இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிவிடலாம் என்று ராஜூ சக்பால் என்ற தரகன் சொன்னதாக யோ.திருவள்ளுவர் கூறுகிறார்.
                          மேலும், மழலைகளும் விற்பனை செய்யப்பட்டு அரபு நாடுகளில் ஒட்டகப் பந்தய ஓட்டிகளாக பயன்படுத்தப் படுவதாகவும் கூறுகிறார். ஐக்கிய அரபு எமிரேட்டின் துணை அதிபர் சேக் முகமது பின் ரசீத் அல்மக்தோம்  அவரது சகோதரருடன் சேர்ந்து 30,000  குழந்தைகளை ஒட்டக ஓட்டும் அடிமைகளாக வைத்திருததாக அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  இப்படி விற்கப்படும் குழந்தைகள்  சூடான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என அறியப்படுகிறது. தமிழக அளவில் பெரும்பாலான தலித் குழந்தைகள் பிற மாநிலங்களுக்கு முறுக்குப் போடுதல் போன்ற பணிகளுக்காக  விற்கப்படுவதுபோல் கொத்தடிமைகளாக பெற்றோர்களாலேயே அனுப்பப்படுகின்றனர். அக்குழந்தைகளை வாங்கும் ஏஜெண்டுகள் ஊர்ஊராக அலைந்து வறுமையின் பிடியிலுள்ள குடும்பங்களைத் தேடி கடன் வழங்கி குழந்தைகளைக் கடத்துகின்றனர்.
                                இவ்வாறாக குழந்தைகள் மீது உடல்ரீதியாக வன்முறைகள் திணிக்கப் படுகின்றன.மேலும், புறக்கணிப்பு, அவமதிப்பு போன்ற செயல்களால் உணர்வு ரீதியாக குழந்தைகள்  வன்கொடுமைகளுக்கு உள்ளாவதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அந்தச் செய்திகளைத்  தாங்கவும் நெஞ்சத்தை தயாராய் வைத்திருப்போம்.

புதன், 23 ஜூன், 2010

தமிழ் முதல்வன்

அம்மா விலிருந்து பேசப்பழகிய
முதல் சொல்லைக் கடந்து

அ விலிருந்து எழுதத் தொடங்கிய
முதல் எழுத்தைக் கடந்து

தாய்மொழியிலிருந்து  கற்கத் தொடங்கிய
முதல் மொழியை கடந்து

எழுதமறுத்த தூவலேந்தி வருகிறது இரு கைகள்
பூகோளத்தைக் கட்டியணைக்க

வெள்ளி, 18 ஜூன், 2010

தாய் மொழியே அடையாளம்

         தமிழ் " செம்மொழி " என உறுதி படுத்தப்பட்ட  நிலையில், அதைக் கொண்டாடும்  தமிழக அரசு சில வேலைகளைச செய்தால் மட்டுமே, கொண்டாட்டம் முழுமையும் செழுமையும் அடையும்.    இல்லையெனில் விளம்பரமாக மட்டுமே  முடிந்து போகும்.
                                                       னக்குள் பொதிந்துள்ள ஆற்றலை வெளிப்படுத்தி மானுடக் கூடத்தின் பார்வையை ஈர்க்கும் வெற்றியின் அடையாளமே ஒவ்வொருவரும் அடையத் துடிப்பது. உடல் வலிமையின் மூலமே ஆதிகாலத்தில் தன்னை அடையாள படுத்திய மனிதர் , பிறகு எண்ணத்தையும் எழுத்தையும்  கொண்டு அடையாளம் பெற்று வருகின்றனர். இதையே புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவ இயலாளர் டெகாத், 'நான் சிந்திக்கிறேன். எனவே நான் இருக்கிறேன்' என்றார்.
                                                     சிந்தனை என்பது ஆய்வு . ஆய்வு என்பது மொழி+அறிவு புரியும் வினை. வினையின் விளைவு படைப்பு. அது இலக்கியமாகலாம்; தலைமையாகலாம்; இயந்திரமாகலாம்;தொழில் நுட்பமாகலாம். ஆக, படைப்பாற்றலே அடையாளம் பெற உதவுகிறது. கற்பதையும் கேட்பதையும் அதுபோல வெளிப்படுத்துவது  நகல்.  ஆனால், அதைக் கொண்டு எண்ணத்தின் வழியே புதியதொன்றை உருவாக்குவது படைப்பு. ஆக, படைப்புக்குத் தேவை சிந்தனை. சிந்தனைக்குத் தேவை மொழி. மேலும் தேடல், தொகுத்தல், ஒப்பிடுதல், வரையறுத்தல் போன்ற நேர்த்தியான நெறிகளுக்கு மொழிதான் வழி. இப்படியான இயங்கியலுக்கு பிறமொழியைக் காட்டிலும் தாய்மொழியே சிறப்பாக உதவ முடியும். ஆகவே தாய்மொழிதான் அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது.
                                      தமிழர் தொன்மையில்  மிகச் சிறந்த அடையாளத்தைப் பெற்று விளங்கினர். உலகப் பொதுமறை திருக்குறள் அதற்குச் சான்று. ஆனால், அண்மைக் காலமாக தமிழர் அடையாளமிழந்து வருகின்றனர். தன்னையே மறந்து வேறு ஒன்றாய்க் கிடக்கின்றனர். தாய்மொழியைத் தாழ்த்தி பிறமொழியை உயர்த்துகின்றனர். தனித் தமிழ் வழியில், தமிழர் தனித்து நின்றபோது கொண்டிருந்த பண்புகளிலிருந்து பிறமொழிக் கலப்பால் வழுக்கி விழுந்தனர். தமிழும் சிதைந்தது.
                                        இதைப் பெரியார் அவர்கள் ' மதத்திற்கு ஆதாரமாய் இருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களேயொழிய ,, தமிழ்மொழி நூல்களால் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது. தமிழிலிருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலேயே நமக்கு பழந்தமிழ் கிடைத்து விடும்'   என்று ஆய்ந்து கூறுகிறார்.அதன்படியே, அவரின் வழியே திராவிட இயக்கங்களும் வடமொழியை எதிர்த்து நின்றன. அப்படியே பழந்தமிழ்ப் பண்புகளைப் பாதுகாத்து, மேலும் செறிவூட்டி, அரிய பெரிய  கருத்துக்களையும், ஆய்வுகளையும் நுட்பங்களையும் தமிழில் படைத்து நிற்கவும், அதற்கு துணை நிற்கவும் , தூண்டுவதற்கும் மாறாக வடமொழிக்குப் பதிலாக ஆங்கிலத்தை நுழைக்கச்  செய்தன.
                                      ஆங்கிலமொழி நூல்களில் முன்னேற்றக் கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சி நூல்கள் ஏராளமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன எனக் கூறும் பெரியார் அவர்கள் அதற்கிணையாக தமிழிலும் நூல்கள் படைக்கப் பட வேண்டும் எனக் கூறுவதற்கு மாறாக, குழந்தைகளுக்கு தாய்ப் பாலில் ஆங்கிலத்தைக் கலந்து கொடுங்கள் என்று ஆங்கில வழிக் கல்விக்கு வழி வகுத்தார். ஏற்கனவே, வெள்ளைத் தோளில் உயர்வுப் பார்வை வீசியவர்களுக்கு ஆங்கிலமோகம் தலைக்கேற  இதுவும் ஒரு காரணமாயிற்று. ஆங்கிலத்தின் மூலமும் மூடநம்பிக்கைகள் மூச்சைப் பிடிக்குமென்று அவர் கருதவில்லை. அல்லது தமிழ் வழிக் கல்வியை அவர் வெறுத்தார்.
                                        விடுபட்ட விவரங்களை, செய்திகளை பிறமொழி வழியே அறிந்து கொண்டு தமிழராக தன்மொழி வழியே சிந்திப்பதை மறுத்து ஆங்கிலத்தில் படித்து அதிலேயே சிந்தித்து மேலை நாட்டுக்காரர்களாகவே தங்களை  வயப்படுத்தித தாழ்த்திக் கொண்டனர். மேற்கே எந்த ஒரு விளைவும் இங்கு வியப்பைத் தூண்டியதற்கும்,  நாற்றம் வீசும் சில மேலைப் பண்பாடு நறுமணமாய் இங்கு நுகரப் படுவதற்கும் ஆங்கில மொழியே முழு முதற் காரணமாகும். ஒருவரது மூளை முழுவதும் பரவியிருக்கும் பிரதிபலிப்பு நியூரான்கள் எதிரில் இருப்பவரின் உணர்வுகள், அசைவுகள் ஆகியவைகளை  தமது மூளையிலும் தூண்டி விட்டு எதிரிலிருப்பவரின் நகலாகவே அவரை ஆக்கும் என்பது சமூகம் சார்ந்த அறிவியல் துறையின் கண்டுபிடிப்பு.
                                          இதனூடாகக் கவனித்தால், ஆங்கிலமும் அது சார்ந்த அனைத்து ஆதிக்கமும் தீவிரமாக வெளிப்படும்போது அப்படியே ஏற்றுக் கொள்ளும் நரம்பியல் ஒத்திசைவு ஏற்படுகிறது. அனிச்சையாகவே அடிமைத்தனம் ஆட்கொள்ளப்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அமெரிக்க வல்லாதிக்கம் சீரழிக்கும்போது அதை அறிந்தும் அறியாமலும் கிடப்பதற்கு இதுவே காரணி
                                          அடிமை வாழ்வே ஆனந்தம் என்று நினைத்திருந்த இவ்விந்திய நாட்டு மக்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியதே ஆங்கிலமொழியறிவுதான் என்று கூறிய பெரியாரின் கருத்துக்கு மாறாக இன்று, ஆங்கில மொழியறிவே இவர்களை அடிமைகளாகவும் ஆகிவிட்டது.
                                         பகுத்தறிவாய்ந்த  பண்புத்துவம், தொன்றுதொட்டு விளங்கும் தொன்மைத்துவம், இதர மொழிகளின் தாய்மைத்துவம் குறித்து தமிழை உயர்த்திப் பிடித்த பெரியார் அவர்கள் தாய் மொழிக் கருத்தில் வேறுபட்டு நிற்கிறார்.   தாய் மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்  என்றார். ' நம் தாய் நம்மைப் பெற்றெடுத்ததும் நம்மை தெலுங்கன் வீட்டிலோ, துருக்கியன் வீட்டிலோ விட்டிருந்தால் நாம் தெலுங்கோ அல்லது உருது மொழிதான் பேசுவோமே தவிர , நம் தாய் தமிழ்ப் பேசியதன் காரணமாக பீறிட்டுக் கொண்டு நம் நாவிலிருந்து தமிழ் தானாக  வெளிவருமா? '  என மேலும் அவர் தாய் மொழிக்கான பொருளுருவையே அறியவில்லை. தாய் மொழியை கருத்தாக மட்டுமே நினைத்தவர் பொருளாக நினைக்கவில்லை. அவரின் கருத்தின் வழியே திராவிட அரசுகள் ஆங்கில வழிப் பள்ளிகளை வளர்த்து விட்டன. இன்று அந்தப் பள்ளிகளின் ஆதிக்கம் தமிழைச் சிதைப்பதோடு அல்லாமல் தமிழ்க் குழந்தைகளின் எண்ணத்தையும் சிதைத்து வருகிறது. வெளிக்காட்ட முடியாத மன அழுத்தங்களுக்கு ஆங்கிலப் பள்ளிகளின் குழந்தைகள் இரையாகின்றனர். இந்த இடத்திலதான் தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த  வேண்டியிருக்கிறது. காதால் கேட்டு, வாயால் பேசி, உள்ளதால் வாங்கிய பாடமே தாய் மொழி என்று புரிய வைக்க வேண்டியிருக்கிறது.
                                             கருக் குழந்தையின் மூளை அமைப்பு ஏழாவது மாதத்தில் முழுமையடைந்து அறிவைப் பெறும் ஆற்றலையும் பெறுகின்றது. தாயின் பேச்சொலி மூளையில் அதிர்வுகளாகப் பதிவாகின்றது. அதனால்தான் கருவுற்றவர்களை நல்லதைப் பேசவும், கேட்கவும் சொல்கிறது தமிழர் பண்பாடு. இவ்வாறு ஏழு முதல் பத்தாவது மாதம் வரை தாயின் மூலம், ஒலிகளைப் பதிவு செய்த குழந்தையின் மூளை, பிறந்த பின்பு வெளியில் கேட்கும் ஒலிகளை பதிவு செய்கிறது. பிறப்பிற்கு முன்னும் பின்னும் பதிவான, பதிவாகும் ஒலிகள் ஒன்றோடொன்று ஒன்றிப் போவதால் குழந்தையின் புரிந்துணர்வு திறன் வெகுவாக அதிகரிக்கின்றது. ஒலியும் ,( சைகை )  அசைவுகளும் தொடர்ந்து ஒன்றிணைவதால் குழந்தையின் புரிந்துணர்வும்  , அதனை வெளிப்படுத்தும் வேகமும் அதிகரித்து குழந்தை மழலை மொழி பேசுகிறது .  பள்ளியில் ஆசிரியரின் மொழி, பயிற்றுவிக்கும்  பாடம் ஆகியவை அதுவரை பழகிய தாய்மொழியாக இருந்தால், கருவறை முதற்கொண்டு உள்வாங்கிய ஒலி, அது உணர்த்தும் பொருள் ஆகியவை ஒத்துப் போகும் நிலை ஏற்பட்டு  எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மாறாக, பதின்மப்  (மெட்ரிக்) பள்ளிகளைப் போல வேற்று மொழியில் கற்பிக்கப்படும் பொழுது அந்த வேற்றுமொழியின் ஒலியும் பொருளும் முன்னதாக மூளையில் பதிவான தாய்மொழியோடு ஒத்துப் போகாததால்  புரிதலின்றி திகைக்கின்றது. பொருள் அறியாமல் குழம்புகிறது. அதன் மூளையும் சோர்வடைகின்றது.. இது குழந்தையின் நினைவாற்றல் திறன்மீது ஏற்றப்படும் தேவையற்ற  சுமையாக அமைகிறது. இதனால், பாடத்தை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, உணர்ந்து உள்வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக வேற்று மொழியினை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நகல் இயந்திரமாக குழந்தை மாறுகிறது.
                                       இந்த இடத்தில்தான்  தானாகச் சிந்திக்கும் ஆற்றலுக்கான அடித்தளம் மூளையில் தகர்க்கப்படுகிறது. இதன் மூலம் தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும் வரை தற்சிந்தனையில்லாமல் பிறர் சிந்தனையின் வழியே அடிமையாகி, எதிலும் சிறந்து விளங்க முடியாத நிலை ஏற்படுவதாக சொல்கிறார்  மணவை முஸ்தபா. மூளையிலுள்ள உணர்ச்சி  இயக்க அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது தாய்மொழி மட்டுமே.ஒவ்வொரு  மொழியினரும் தனிப்பண்பாடும் மனப்பான்மையும் கொண்டு விளங்குவதற்கு அவர்களுடைய தாய்மொழியே காரணம் என்கிறார் ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் சுனோடா.
                                         இதனால்தான், உலகமுழுக்க தாய்மொழிக் கல்வி வலியுறுத்தப்பட்டு  நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தாய்மொழியே சிறந்தது என்பதினால்தான் இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு,ஜப்பான்,ரஷ்யா, சீனா முதலிய நாடுகள் உயரத்தில் நிற்கின்றன.அதனால்தான் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்த பள்ளிகளை கர்நாடகம் தடையும் செய்தது.
                                          தமிழ் நாட்டில் கலைஞரின் அரசு இப்பொழுதான் தாய்மொழிக் கல்வியை முதல் வகுப்பிலிருந்து தொடங்கியுள்ளது. இந்தத் தொடக்கம் அனைத்து வகுப்புக்களிலும் நிறைவதற்குள் பல தலைமுறைகள் தாய்மொழி அறியாமலேயே வெளியேறிவிடும். அப்படித் தமிழேயறியாமல்  வெளியேறிய தலைமுறைகளின் குழந்தைகள் மேற்கண்ட ஆய்வுகளின்படி மீண்டும் தமிழ்வழியில் பயிலும்போது பல சோதனைகளைச் சந்திக்கலாம்.அதன்மூலம் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியே வலியுறுத்தும் சூழல் உருவாகும். தமிழ்வழிக் கல்வி புறக்கணிப்புக்கு உள்ளாகும். தொலைவில் நோக்கினால் , இவ்வாறு தமிழ் முற்றிலும் அழிவதற்கு இதுவே வழியாகலாம்.
                                          தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு, உடனடியாக தமிழ் வழிக் கல்வியை அனைத்து வகுப்புகளிலும் நடைமுறைப்படுத்தி தமிழை நிலைபெறச் செய்யவேண்டும்.பாடமொழியாக மட்டுமே இல்லாமல் பயிற்று மொழியாகவும் பயன்படுத்தும் பொழுதுதான் அது நிலைபெறும். ஒருமொழி எந்த அளவுக்கு பயிற்றுவிக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அம்மொழியின் வாழ்நிலை நீடித்திருக்கும் என்று ஆய்வுகள் சுட்டுகிறது. அடிப்படை முதல் ஆய்வுக் கல்வி வரையிலும்; அறிவியல், தொலைத்தொடர்பு, நிர்வாகம் போன்ற முன்னிலை வகிக்கும் துறைகளிலும் உடனடியாக தாய்மொழிக் கல்வி பயிற்றுவிக்கத் தேவையான சொற்களும் நூல்களும் உருவாக்கப்பட  வேண்டும். ஒவ்வொரு இயலிலும் உள்ள புதிய பரிமாணத்தையும் நுட்பத்தையும்  தொடுகின்ற தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும்.அப்பொழுதுதான்   பயிற்றுமொழி நோக்கம் வெற்றியடையும்.
                                             உயர்நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை நடைமுறை படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணாநிலை மேற்கொள்ளும் இந்த சமயத்திலாவது  அரசுதுரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் செம்மொழி மாநாடு வெற்று விளம்பரமாகவே முடிந்து போகும்

செவ்விலக்கியப் பாதையில் ஒடுக்கப் பட்ட குரல் - திலக பாமா

ஆயுதக் கோடுகள் விமர்சனம்


           -திலக பாமா
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விலிருந்து கிளம்பிய எழுத்துகள் வலியைமட்டும் கொட்டுவதாக இருந்த  காலங்கள் போன பின்பு இன்று மொழிக்கான பிரயத்தனங்களும் ,தங்களுக்கான செவ்விலக்கியப் பாதையை உருவாக்கிக் கொள்ளும் எத்தனங்களும் ஆயுதக் கோடுகளின் தொகுப்பில் பலமான முன்னகர்தல்கள்
                                                        வ்வொரு கவிதைத் தொகுப்பு வாசிப்பின் போதும் கவிதை என்பது என்ன என்ற கேள்வி முன்னால் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் படைப்பாளி ஏற்கனவே இருக்கின்ற இலக்கணங்களின் வழிச் செல்பவன் அல்ல. பழைய வழித் தடங்களில் இடர்களை கண்டபோது புதிய தடங்களை தேடுபவன். தேடியதை தேடியதன் வலியை அனுபவத்தை கண்டடைந்த மகிழ்வை எழுத்தின் வழி பகிர்ந்து தருபவன்.எழுதப் படுகின்ற கலங்களும் கேட்கின்ற மனிதர்களும் கூட எதை கவிதை பேச வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். கருத்தியலைத் தாண்டி அவற்றை எழுதி பார்கின்ற பிரயத்தனத்திலிருந்தும்   கூட கவிதை எது என்பது தீர்மானமாகின்றது. என்னைப் பொறுத்த வரையில் வாழ்வின் சரடுகளை நடப்பியல் யதார்த்தமோடு சொல்லிச் செல்கின்ற தருணம் எழுத்து இலக்கியமாகின்றது. அதிலும் சொல்லின் பொருளில் புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்கி போகின்ற இடம்தான் கவிதைக்கான இடம். அனுபவத் திரட்சியாக வந்து விழுகின்ற சொற்கள் ஒவ்வொரு சொல்லையும் நிகழும் கணமாக்கிக் காட்சியாகிப் போகும். ஆயுதக் கோடுகள் தொகுப்பைப் பொறுத்த வரையில் வாசகனாக அது எனக்குத் தந்த அனுபவத்தையும் விமரிசனாக நான் ஆய்ந்து பார்த்த விடயத்தையும் இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
                                              நான்கு வருடங்களுக்கு முன்னால் மதுரையின் ஒரு மேடையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொற்களை அர்த்தமிழக்கச் செய்ய வேண்டும் என்று சொல்லி ஆங்கில வசைச் சொல் எப்படி அர்த்தமிழந்து பல்வேறு தளத்திலேயும் உபயோகப்படுத்தப் படுகின்றதோ அதுபோல் தமிழ் மொழியின் சொற்களையும்  அர்த்தமிழக்கச் செய்யவேண்டும் என்று சொன்ன போது அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அப்படியான வருத்தம் இப்பொழுது வாசிக்கக் கிடைன்ற இத்தொகுப்பில் கடந்து போயிருப்பதையும் சொற்களுக்கான மொழிக்கான தேடல் நிறைந்து கிடப்பதுவும் நம்பிக்கை தருகின்றது அல்லது எதிர்பார்ப்பைத் தருகின்றது. இது இத்தொகுப்பின் முதல் பலம்.
                                              வார்த்தைகளை அர்த்தமிழக்கச் செய்வதைவிட அதன் அர்த்தங்களை இன்றைக்கானதாய்  நமக்கானதாய் மாற்றிக் கொள்வது அவசியம். அந்த அவசியம் உணர்ந்த தொகுப்பாக இத்தொகுப்பில் கவிதைகள் இருக்கின்றன. மயக்கப் படும் வார்த்தைகள் கவிதையில் மிதியடிப் பதிவுகள் போன்ற வார்த்தைகளும் தூவலியல் கவிதையும் மொழியின் வாசிப்பை மாற்றிப் போடும் பலம். இக்கவிதைகளில் சமூகப் பொறுப்புணர்வும் , படைப்பாளியின் சமூக அக்கறையும் கோபமும் முதல் வாசிப்பிலேயே எல்லோருக்கும் தெரிந்து விடுகின்ற விஷயம். அதையடுத்து அக்கோபம் எவ்விடத்தில் கவிதையாகின்றது என்பதில் இருக்கின்ற வாசகத் தேடலுக்கு "அநாதை மனம்" கவிதை நல்ல பதிலாகப் போயிருக்கின்றது.
                                           " வன்னழுத்தங்களால் பிளக்கப்பட்ட அணுதொகுப்பின்
                                            வலியுணர் வொலியதிர்வுகள் அடுக்கப் பட்டு 
                                            பீறிட்டு வெளியேறும் உயிரிணைப்பின்
                                            ............. "
                                           
                                            அடுத்து  ஒரு விமரிசனாக தொடர்ந்து இங்கு நடக்கின்ற அரசியல் எழுத்தரசியல் , சமூக அரசியல் எல்லாம் ஒரு படைப்பாளியை எங்கெங்கு அசைத்துக் கொண்டிருக்கிறது என்று அவதானிக்கின்ற ஓர் ஆளாக அடுத்த கருத்தோட்டத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
                                             இன்றைக்கு படைப்பாளியின் வாழ்வு  வந்து தளத்தை தீர்மானிப்பதை விடுத்து எழுத்தின், இலக்கிய வாதிகளின், பத்திரிக்கைகளின் வியாபார அரசியல் பலநேரம் எழுத்தின் தளத்தை ஆக்கிரமித்து விடுகிறதுமுண்டு அப்படியான பாதிப்பை சமீப கால் தொகுப்புகளில் நிறையவே காண முடிகிறது. பெண்மொழி பின் நவீனத்துவம் என்று பத்திரிக்கையின் வியாபார உத்திகளின் பின்னால் நகலும் எழுத்தாளனின் மனமும் நிதர்சன மாயிருக்கிறது. வாழ்வு வழியாக எழுத்தை கொண்டு செலுத்தப் பழகிவிட்ட படைப்பாளி ஒன்று நேர்மையாக அந்த அரசியலுக்குள்ளும் அல்லது எதிர்க்கும் போதும் இவ்வரசியலுக்குள்ளுமாக செயல்படத் துவங்கி வ்டுவது தவிர்க்க முடியாததாகிப் போகின்றது.
                                              ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்வில் மலமள்ளுதலும் கழிவறைகளோடும் வாழ்வாக இருந்திருந்த மக்களின் எழுத்துகளில் தவிர்க்க முடியாமல் வார்த்தைகள் வந்து விழுந்த காலம் போய் அந்த வாழ்வை விட்டு நகன்று விட்ட மனிதர்களும் அதே வார்த்தைகளை தங்கள் உவமான உவமேயங்களுக்கு  தங்களையறியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாமலிருப்பதை இக்கவிதைகளிலும் அடையாளம் காண முடிகிறது.
                                              ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்விலிருந்து கிளம்பிய எழுத்துகள் வலியை மட்டும் கொட்டுவதாக இருந்த ஆரம்ப காலங்கள் போன பின்பு இன்று மொழிக்கான பிரயத்தனங்களும் தங்களுக்கான செவ்விலக்கிய பாதையை உருவாக்கிக் கொள்ளும் எத்தனங்கள்  எல்லாம் ஆயுதக் கோடுகளின் தொகுப்பில் பலமான முன்னகர்தல்கள். அதே நேரம் ஒடுக்கப் பட்டவர்களின் மொழி என்று இயற்கையியலாக பேசிக் கொண்டிருந்த எழுத்தின் சாயலை விட்டு விட்டால் ஒடுக்கப் பட்டவர்களின் மொழி என்பதிலிருந்து விலகி விடுவோமோ என்ற அச்சம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
                                           மக்களரசின் மகன்மாக்கள் போன்ற கவிதைகள் அந்த அச்சத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. அறிவாளிகளின் அரசியல்  போன்ற கவிதைகள் மக்களின்  வாழ்விலிருந்து என்றில்லாது நான் ஏற்கனவே சொன்னது போல் இலக்கியவாதிகளின் அரசியலை எதிர்த்து எழுதிப் போகின்றது.
                                           உதாரணமாக, ஒரு இலக்கிய நிகழ்வு நடக்கின்றது. அதில் நடக்கின்ற தனி மனித செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை. அதை ஒரு கவிஞர் தனது கவிதையில் பதிவாகுகிறார். என்னைப் பொறுத்த வரை அவற்றை ஒரு படைப்பாளி கடந்து விடலாம் என்று நினைக்கிறேன்.ஆயுதக் கோடுகளில்  ஆங்காங்கே அந்த எதிர்ப்பரசியல் தெரிகிறது. அது அவ்வெழுத்தின் பலவீனமாக நான் பார்க்கிறேன்.
                                           ஏற்கனவே இருக்கின்ற செவ்வியல் தன்மையை அப்படியே படி எடுப்பதுவும் பலவீனமாகவே அமையும். புதிய படைப்பாளிகள் புதிய செவ்வியல் கோட்பாடுகளை உருவாகுவது அவர்கள் எழுத்துக்கும் , எழுத்து கொண்டிருக்கும் அரசியலுக்கும் மிக பெரும் வலு சேர்க்கின்ற விசயமாகவே இருக்கும்.
                                           இன்னுமொன்று, அதிகார வர்க்கமோ ஒடுக்கப் பட்ட இனமோ எல்லோருக்கும் வாழ்வைப் பற்றிப் பேசும்போது அவர்களே அறியாமல் பெண் குறித்த அவர்களது எண்ணங்கள் வந்து விழுந்து விடும்.கவிதையில் பொய் பேச முடியாது. அது படைப்பாளியின் பலம் பலவீனம் இரண்டையுமே காண்பித்து விடும். அவ்வகையில் பெண் குறித்த பார்வைகள் படைப்பாளிகளிடத்தில் அவசியம் மாற வேண்டும். ஆண் வதைபட்டால் தியாகமேன்பதும் , பெண் வதைபட்டால்  கற்பிழப்பு என்பதும் ஆண் தலைப் பட்ட சமூகம். என்று வாசித்த வரிகள் நினைவில் வந்து போகின்றது.அப்படியான பெண்எதிர்நிலை பார்வைகளை தொகுப்பு நெடுகிலும் பார்க்க முடிகிறது. வழி மொழிதல் , சேயற்ற தமிழகம்  போன்ற கவிதைகளில் "கட்டுக் கதைகள் கலவி செய்யும் அந்தப் புறமாக இருக்கிறாள்" எனும் வரிகள் அதற்கு உதாரணம்.அந்தப் புறம் , சிவப்பு விளக்கு ஆகிய பிரதேசங்கள் அவச் சொல்லாக மாறி போனது பெண்ணால்தான் என்ற தோரணை கவிதைகளில் வழிகிறது.முற்போக்கு சிந்தனை தமிழ் முதல்வனுக்கும் இல்லை என்பது தெரிகிறது. சொல்லிப் பழகிய சொல்லின் மயக்கத்தில் அர்த்தம் மாறிப் போனதை அறியாமல் உச்சரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
                                   நான் உறங்கிய போது என்னோடு புணர்ந்தவள் 
                                   தவித்த வாய்க்கு தண்ணீர் கூட மறுக்கும் 
                                   எதிரிகளையும் பெற்று விட்டிருக்கிறாள்  (வழி மொழிதல் )
                                  
                             
                                   தன்னலத் தண்டன்களால் 
                                   கற்பழிக்கப் படுவதற்கு    (சேயற்ற தமிழகம் )
                                    இந்த வரிகள் பிள்ளைகள் பெருமை தேடித் தருகின்ற போது என் மகன் என்பதுவும் , அசந்தர்ப்பவசமாக சிக்கலுக்குள்ளாகும்போதும்  நீ பேத பிள்ளையின் லட்சணத்தைப் பாரு என தாயை நோக்கி சூழும் ஆணாதிக்க மனோநிலை சாமான்யனிடம்  இருக்கலாம். கவிஞரிடம் இருக்கக் கூடாது..தொடரும் ரவிக் குமார் போன்ற கவிதைகள் ஆதிக்க சாதி மேலான எதிர்ப்பைச் சொல்ல பெண்ணுடல் தன் வன்மத்தை நிகழ்த்திக் காட்டுகின்றது. இந்த வன்மம் காலம் காலமாக நம்மிடையே புரையோடிப் போன கிராமத்து ஆணாதிக்க மனோபாவம், வார்த்தைகள் இன்னமும் கவிதைகளில் இடம் பெறத்தான் வேண்டுமா?
                                   சிலுவை மீதேறிய சுமை எனும் கவிதையில் சண்டையிடும் காலத்துக்காய் காத்திருக்கும் குரங்கின் மேல் கோபம் வருவது இருக்கட்டும். அதற்காக நான் பரிதாபப் படவேண்டியது குருதி குடிக்க பதுங்கியிருக்கும் பூனைகள் மேலா? அடைக்கலம் புகுந்து அப்பங்கள் திங்கும் எலியின் மேலா? இல்லை குருதி வழிய சிலுவை சுமந்த இயேசுவின் உழைப்பின்மேல் அந்தத் தன்னலமற்ற தியாகத்தின் மேலா? குரங்கு பிடுங்கித் தின்கிறது என்பதற்காய் பூனை எலிமேல் பரிதாபப் படத் துவங்கச் சொல்லுகிறது சிலுவை மீதேறிய சுமை எனும் கவிதையின்  பொருள் மயக்கம், தவிர்க்க வேண்டியது என நினைக்கிறேன்.
                                   எவருக்கும் அறிவில்லை 
                                   எல்லாவற்றையும் உடைத்துவிட்டு 
                                   எனைப் பேசும் 
                                   ஏதாவதொரு பொருள் படைக்க 
                                   பேசுவதற்காக பொருள் படைக்க யாரையோ நம்பியிருத்தலை  தவிர்த்தர்க்குரிய உழைப்பும், நம்முடைய செயல்களே நமை பற்றிப் பேசும் எனும் அறிவு கொண்டிருத்தலும் இன்றைய நம் தேவை.
                                   தவிர்க்க முடியாதபடி உமை எல்லாப் பொருளும் பேச உண்மையும் திறமையுமாய் செயல் செய்க.உழைப்பே எல்லோருக்குமான விடுதலை. வாழ்த்துகள்.

                  -திலக பாமா 
                   mathibama@yahoo.com
                   94431 24688
(மதுரை அமெரிக்கன் கல்லூரி காட்சி ஊடகத் துறை 15.12.2009 அன்று  நடத்திய "ஆயுதக் கோடுகள் " நூல் திறனாய்வுக் கூட்டத்தில் கவிஞரும் நாவலாசிரியருமான திலக் பாமா வாசித்த கட்டுரை )

புதன், 16 ஜூன், 2010

ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளி! -எஸ். அர்ஷியா

Friday September 4, 2009

தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து...

எஸ். அர்ஷியா




ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட
வார்த்தைகளைக் கொண்டு
கட்டப்பட்ட அழகிய வெளி!

மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்டக் கிளையில் சிறுகதை வாசித்துவிட்டு, பார்வையாளர் பகுதிக்கு வந்து உட்கார்ந்தபோது, நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம், 'அர்ஷியா, இது தமிழ் முதல்வன். கவிஞர்!' என்று ஒரு இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்டாலினுடன் எனக்கு நல்ல பழக்கம். இருந்தாலும், யாரையும் அவர் அறிமுகம் செய்து வைத்ததில்லை. அவர் மூலம், இதுதான் முதல் அறிமுகம். அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நபர், தனது ஜோல்னாவிலிருந்து தடவி யெடுத்து, ஒரு கவிதைப் பிரதியை என்னிடம் நீட்டினார். வறுமையில் முக்கியெடுத்த சிறுவன், பரிதாபமாக விழித்துக்கொண்டிருக்கும் அட்டைப் படத்துடன் அக்கவிதைப் பிரதி இருந்தது.

எனக்கு வரும் தபால்களில் நாலில் மூன்று, கவிதைப் பிரதிகளாக இருப்பதில் கொஞ்சம் வருத்தம் இருப்பதுண்டு. அதற்காக, 'நான் இணையத்தில் எதையும் வாசிப்பதே இல்லை. எழுத மட்டுமே செய்கிறேன்' என்று சாரு நிவேதிதா பீற்றிக் கொள்வதுபோல, பீலாவெல்லாம் விட மாட்டேன். அதற்கு இயக்குநர் அமீர் கூட, 'புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்' என்று, அதே சாருவைப்போல யாரையும் துணைக்கு அழைக்கவும் மாட்டேன். கவிதைகள் வாசிக்கும் பழக்கம் எனக்கு அவ்வப்போது உண்டு.

மதுரை இலக்கிய வட்டத்தில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை எழுதுபவர்களைவிட துணுக்கு எழுத்துதான், ஒரு காலத்தில் நிறைந்து கிடந்தது. எங்கு திரும்பினும் துணுக்கு மயம். இப்போது அந்த இடத்தில், கவிதை!

ஒரு மதுரைக் கவிஞர், ஓராண்டில் ஆறு கவிதைப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒன்று என்று. ஒரு கவிஞர், தனது கவிதைத் தொகுதிக்கு, டுபாக் கூர் பதிப்பாளாரிடம் கவிதையையும் காசையும் கொடுத்துவிட்டு, இரண்டையும் எப்படி மீட்பது என்று, மூன்று வருடங்களாக அலைபாய்ந்து கொண்டிருப்பதும் எனக்குத் திரியும். இதையும்தாண்டி, நல்ல கவிதைகள் எப்போதாவது வெளிவந்து விடுவதுண்டு.

நல்ல கவிதைகள் என்பது என்ன? காதல். கத்தரிக்காய். காத்திருத்தல். அவள் தந்த முதல் முத்தம். மூடி தொலைந்துவிட்ட பேனா. அவள் நோட்டுப் புத்தகத்திலிருந்து திருடிய மயிலிறகு. முத்தம் கிடைத்த புறங்கையை கழுவாமல், அழுக்கேறப் பாதுகாப்பது போன்ற இத்தியாதி, இத்தியாதிகளைத் தாண்டி, சமூகத்தின் அவலங்களைத் தோலுரிப்பது. சமூகத்தின் இருப்பிடத்தைத் தக்க வைப்பது. சமூகத்தில் தனக்கான இடம் எது என்பதைக் கண்டுணர்வது. இன்னபிற என்றே நான் கருதுகிறேன். தமிழ் முதல்வன் அப்படியான ஒரு இடத்தைத் தேடித் திரிபவராகத்தான், 'ஆயுதக் கோடுகள்' நூல்வெளி முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்.

சின்னதாய் கையடக்க நூல்தான். நாற்பத்தெட்டு பக்கங்கள். சிறிதும் பேரிதுமான ஐம்பத்தேழு கவிதைகள். பத்தாம் வகுப்பு மாணவராயிருந்தபோது துவங்கி, இன்று வரையிலான உழைப்பின் தொகுதியாக அது வெளிப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தனக்கான இருப்பைத் தேடும் 'மொழியற்ற சொல்' மூலம்,
'ஒலியொறியறியா எங்கும் பரவின
தூல உடம்புச் சொல்லொன்றே
எனக்கும் பிறருக்குமான தொடர்பு மொழியாயிருக்கிறது'
எனக் கண்டறிகிறார்.

அதேவேளையில் தனது சமூகம் அழுக்குக்குள் மூழ்குவதை 'அசுத்தகரிப்பு' மூலம் வேதனைப் படர வெளிப்படுத்துகிறார். அதனிலிருந்து சமூகம் மீள ... சமூகத்தார் மனிதனாராய் பா¢ணமிக்க... விடுதலை மண் பிறக்க... தமது 'பந்து நிறை தொல்குடி வாழ்வை' மீள்பணி செய்யத் தலைப்பட்டவராகவும் முன்னிற்கிறார். என்றபோதும் ஒதுக் கீட்டில் பயன்பெற்று உயர்ந்தவர்கள், என்ன நிலையில் தன் சமூகத்திலிருந்து விலகிய வராக இருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டத் தயங்கவும் இல்லை. தவறவும் இல்லை என்பது, அவரது சமூக நேர்மையைக் காட்டுகிறது.

தொப்பூள்கொடி உறவு கொண்ட ஈழச் சகோதரனின் உடல், பொருள், வாழ்க்கை யின்மேல் சிங்கள வேர்கள் ஆழப் படர்வதையும், இங்கே தமிழினத் தலைவர்கள் நாய் மேய்த்துக் கொண்டிருப்பதையும், வெற்று விவாதங்களில் ஈடுபட்டு வெறுமனே காலத் தைத் தள்ளுவதையும் 'பொறுப்பு'டன் சுட்டிக் காட்டுகிறார்,
'உள்ளுறுப்புகள்கூட பயன்படா நிலையில்
அப்படியே புதைப்பதா அல்லது எரிப்பதா
ஞானவெட்டியான்களிடம் மையம் கொண்டிருக்கிறது
விவாதங்கள் மட்டுமே'
என்று.

இதுபோலவே நூல் முழுவதும் தொடரும் ரவிக்குமார், கடவுகளின் இனிமைகள், நிரம்பிய வெற்றிடம், நுந்நோக்கம், பெண்ணியம், உச்சியிலாடும் மயிர்கள், மீளாய்வு, மயக்கப்படும் வார்த்தைகள், போலிகள், சிலுவை மீதேறிய சுமை என தனலாய் நூல் முழுவதும் 'நேர்பட பேசு'கிறார், தமிழ் முதல்வன்.

கவிதைகள் ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளியில் நகர்கிறது.

வாசித்து முடித்த பின்பு, எனக்குள் ஏதோ வெற்றிடம் பரவுவதை என்னால் உணர முடிந் தது. சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம் எனும் கேள்வியை 'ஆயுதக் கோடுகள்' வரி  வரியாய் கிழித்துப்போட்டது.
·

மதுரையின் நான்காவது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாளில், நண்பர்களுடன் சுற்றிவந்த என்னை தமிழ் முதல்வன் 'ஐயா!' என்று விளித்துக் கொண்டு, கைநீட்டி வந்து சந்தித்தார். சந்தோஷமாக இருந்தது.

என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் அவரை அறிமுகப் படுத்தினேன், ஸ்டாலின் ராஜாங்கம் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது போலவே!

arshiyaas@rediffmail.com
-நன்றி:திண்ணை.காம்
Copyright:thinnai.com 

செவ்வாய், 15 ஜூன், 2010

தனித்தன்மை மிக்க எழுத்துக்கள் -யாழன் ஆதி



பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் 
உறவுகள் வலுவடைந்தால் உரிமைப் போர் தொடங்கும் 
யுத்தப் பாதை ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும் ''
-என்ற தலித் சுப்பையாவின் பாடல், பெயர்களை மாற்றுவதால் நிகழும் சமூக மாற்றத்தை தமிழகத்தின் மேடைகள் தோறும் ஒலிக்கிறது.இக்கருத்துக்கு வலு சேர்க்கிறது தமிழ் முதல்வனின் பெயர் மாற்றம்.கண்ணன் என்ற பெயர் தனித் தமிழ் சார்ந்த பெயராக இருப்பினும் ,அதில் அடிக்கும் இந்துக் கவுச்சி யால் அதை நிராகரித்து தொல்குடிகளே தமிழர்களில் முதலானவர் என்பதை அறிவிக்கும் பொருட்டு , தமிழ் முதல்வன் என்று பெயர் சூடிக் கொண்டிருக்கிறார்.
                       உலகப் புகழ் பெற்ற கீரிபட்டியினை பூர்வீகமாக கொண்டவர் தமிழ் முதல்வன்.நாட்டுப்  புற  கலைகள் மிகுந்திருக்கும் ஆ.கொக்குளத்தில் பிறந்தவர்.பவுத்த நெறியில் வாழ்ந்த தம் முன்னோர் கீரிபட்டியிலிருக்கும் தங்களின் நிலங்களை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு கொடுத்துவிட்டு இங்கு குடியேறிய பொழுது ,அழகன்-கருப்பாயம்மாள் ஆகிய இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
                        அவருடைய முதல் கவிதை நூலான "ஆயுதக் கோடுகள் "-புதிய கண்ணோட்டத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
                        தங்கள் முன்னோர்கள் நிலங்களை எல்லாம் இழந்து ஆ.கொக்குளத்தில் விவசாயக் கூலியாக வேலை செய்ய நேர்ந்து விட்ட இடங்களில், ஆதிக்க சாதியினரின் உணவையோ,நீரையோ வாங்க மறுத்து , அவர்களின் பாத்திரங்களைத் தொடமறுத்து,சாதி ஆதிக்கத்தை எதிர்த்ததை தன் எழுத்தில் கொண்டுவருகிற ஆற்றல்,தமிழ் முதல்வனுக்கு இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படித்த இவருக்கு, படிக்கும் காலத்தில் சாதி இந்துக்களின் தடைகள் ஏராளமாக இருந்ததாக தெரிவிக்கிறார். அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து, இன்றைக்கு ஓர் ஆககவாளியாக மிளிர்கிறார்.
                         தன்னுடைய அனுபவங்களின் மேல் நின்று கொண்டு தான் அநீதிக்கு எதிராக, 'மனிதம்' எனும் இதழை அவரால் கொண்டுவர முடிந்தது. அந்த இதழை கொண்டுவருவதில் பெரும் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் அவர் சந்தித் திருக்கிறார்.பக்தி இலக்கியங்களைச் சுமந்து , தமிழும் தலித்துகளுக்கு துரோகம் செய்து விட்டதாகக் கருதும் தமிழ் முதல்வன், ஊடகங்களை தலித்துகள் கைப்பற்றவேண்டும்; தலித் விடுதலைக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
                         தமிழ் முதல்வனின் கவிதைகள் மிக நிட்பமானவை.பூடகமான மொழியில் எழுதி , ஒளிவு மறைவின்றி வரக்கூடிய எழுத்துக்களை ,குறிப்பாக தலித் ஆக்கங்களை 'வெற்று முழக்கம்'என்று புறந்தள்ளுபவர்களுக்கு எதிராக அவர் ஒரு கவிதையை எழுதியுள்ளார்:
                          " எனக்குப் புரியாமல் எழுதியதால் 
                                     அறிவாளியானாய் 
                                     உனக்குப் புரியாமல் எழுதியதால் 
                                      அறிவாளியானேன்..."
                                                                   என்று தொடங்கி, இத்தகைய எழுத்துக்களால் ஒன்றும் நிகழப் போவதில்லை என்பதை -'இடையில் அப்படியே இருக்கிறது சமூகம்'  என்று எழுதுவதன்மூலம் நிலை நிறுத்துகிறார்.
                           உடல் மீதான தீண்டாமை பருப் பொருளானது,சொற்கள் அரூபமான அதே நேரத்தில், ஆற்றல் கொண்டவையாக மாறி தீண்டாமையை மிகவும் எளிதில் நிலை நிறுத்திவிடும். இதை தமிழ் முதல்வன் எல்லோருக்கும் பிடித்த சொல்லில் - அவர் இல்லை என்றும், அவருக்குப் பிடித்த சொல்லில் பிறர் இல்லை என்றும் , உடலே ஒரு சொல்லாகி, பிறருக்கும் அவருக்குமான தொடர்பினை அல்லது பிரிவினை ஏற்படுத்துகின்றது என்பதை கூறுகிறபோது, தன்னை ஒரு நவீனக் கவிஞராக்கிக் கொள்கிறார்.
                             தமிழகச் சூழலில் சாதிக்கு எதிராகவும்,ஈழச் சூழலில் தமிழர்களை மீட்டெடுக்கும் அன்பின் எழுத்தாகவும் அமைகிறது தமிழ் முதல்வனின் கவிதைகள். ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆக்க மனநிலையை தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு, விளிம்பு நிலைச் சமூகத்தின் ஆக்கவாளிக்கும் தேவையாயிருக்கிறது. தமிழ் முதல்வனிடம் அத்தகைய பொறுப்புடன் இயங்க வேண்டும் என்னும் ஆதங்கம் இருக்கிறது.
                             உலகத்தின் எந்த மூலையில் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் போராடினாலும் அவர்களோடு தன்னை இணைத்துக் கொள்வது இன்றியமையாதது..
                           "....மூடிய என்னிமை துளைத்து 
                           விழுந்த ஈழச் சதைகளின் குருதிகள் 
                           விழிகள் நிரம்ப எழுந்த பொழுது 
                           என்னைச் சுற்றியும் 
                           உறங்கிக் கொண்டேயிருக்கின்றன பிணங்கள் "
என்று எழுதுகின்டற வரிகளில், சகமனிதனின் மீது கொள்ளுகின்டற நேயம் வெளிப் படுகின்றது.
                             "உள்ளுறுப்புகள் கூடப் பயன்படா நிலையில் 
                              அப்படியே புதைப்பதா அல்லது எரிப்பதா
                              ஞான வெட்டியான்களிடம் மையம் கொண்டிருக்கிறது 
                               விவாதம் மட்டுமே "
                                                        ஈழச் சிக்கல்  இன்றைய தமிழக அரசியலில்  பகடைக் காயாக வெட்டி விளையாடும் கொடுமையை விவரிக்கும் கவிதையில், தமிழ் முதல்வனின் பேனாவிலிருந்து விழும் சொற்கள் வீரியம் மிகுந்திருக்கின்றன.வெட்டியான்கள் எனப் படும் தொழிலை இழி தொழில் என்று ஒதுக்கியவர்கள், ஞான வெட்டியாங்களாக மாறி விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்கின்றனர்.ஆனால், அவர்களின் விவாதங்கள் விண்ணைப் பிளப்பதாக இருக்கின்றன.
                         இந்நிலையில், சாதிச் சவுக்கடியில் வதைபட்டு கொண்டிருக்கும் தலித்துகள் மட்டுமே ஈழ மக்களின் வேதனையை உண்மையாக உணர முடியும் என்பதையும்; உலக  அளவில் கறுப்பின மக்களோடு தலித்துகளே அடையாள படுத்திக் கொள்ள முடியும் எனும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது , அவருடைய "தொலைவழி" எனும் கவிதை.
                         சாதியைத் தகர்ப்பதற்கு குடும்ப அமைப்பில் மாற்றத்தையும், குடும்பங்கள் அமைவதற்கு சாதி-மத மறுப்பையும் நம் முன்னோர்கள் கோரியிருக்கின்றனர்.'கலப்புத் திருமணம்' என்ற சொல்லாடலையே எதிர்த்து, அதை சாதி மறுப்புத் திருமணம் என்று கூறியவர் பெரியார். ஆனால், காலங்கள்  கடந்த பின்னும்  எத்தனையோ அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்த பின்னும்-இன்னும் திருமண விளம்பரங்களில் வரும் சாதியின் ஆதிக்கத்தை தன் கவிதையில் பகடியாக்குகிறார்:
                            "பெயருக்குப் பதில் சாதி 
                             பண்புக்குப் பதில் மதம் 
                             மணமக்கள் தேவை விளம்பரங்கள் 
                             இணைத்துக் கொண்டிருக்கின்றன விலங்குகளை 
                             பிரித்துக் கொண்டிருக்கின்றன மனிதர்களை"
                        
                             கவிதையில் சொற்களைச் சேர்ப்பதும், அவற்றைத் தன் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரிப்பதும் ஒரு கவிஞனுக்குரிய உரிமை. அதைச் சிறப்பாகக் கையாளுகிறார் தமிழ் முதல்வன். வாழ்வின் மீது சுமத்தப்பட்ட பாரங்கள் ஆகியவை அவருடைய கவிதைகளில் வெளிப்படுவதைக் காட்டிலும் சமூகம் சார்ந்து அவர் கொண்ட சிந்தனைகளே அவருடைய கவிதைகளாக வெளிப்படுகின்றன.
                             மயக்கும்  மாயச் சொற்களைக் கொண்டு படித்தவர்களை எல்லாம் படுத்துறங்க வைக்கும் முனை  மழுங்கிய தட்டையான எழுத்துகள் , தன்னுடைய எழுத்துகள் அன்று என்பதையும் மனித உறுப்புகளைச் சொல்லி அதிர்ச்சியூட்டி, அதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும் குறுக்கு எண்ணம் தனக்கில்லை என்பதையும் தன் கவிதைகள் மூலம் சொல்லாமல் சொல்லி விடுகிறார் தமிழ் முதல்வன்.
                               ஆதிக்கத்தைத் தகர்க்கும் காலத்தைக் காட்ட மறுக்கும் கடிகாரத்தையும், கணக்குத் தீர்க்காமல் கிழிந்திடும்  நாட்காட்டியையும் புறக்கணித்து, தலித்துகள் அவர்களுக்கான காலத்தை உருவாக்க மீளாய்வு செய்து , அதை எப்படி நிலைநாட்ட முடியும் என்பதைக் கூறும்போது,அவருக்குத் தேவைப் படும் பொருட்கள்-சாதி இந்துக்களால் மறுக்கப் பட்ட தோளில் அணியும் துண்டு, உரக்கச் சொல்லப்படும் புரட்சியாளர் அம்பேத்கர் பெயர், போடக் கூடாது என தடுக்கப் பட்ட மிதியடிகள், அவர்களால் பிடுங்கப்பட்ட  நிலம் முதலியவை.
                                 இவற்றைச் சுட்டிக்காட்டி,வாழ்வில் அடைந்திருக்கும் சமூக முன்னேற்றத்தைக் குறிப்பிடும் போது, ஒருவேளை ஆதிக்கசாதிக்காரன் தற்கொலை புரியவும் கூடும் என்னும் அவரின் உளப்பாங்கு நோக்கத் தக்கது.கணினி சமூகமாக மாறியிருந்தாலும் , அறிவியல் கருவிகள் எப்படி சாதிக்கு சாதகமானவையாக இருக்கின்றன என்பதையும் அவற்றை எல்லாம் தூர எறிந்துவிட்டு, மனிதனைப் பேசும் ஏதாவதொரு பொருளைச் செய்யவேண்டும் என்னும் ஏக்கம் கவிதையாகி இருக்கிறது.இது, இவருடைய தனித் தன்மை.
                                ஒடுக்கப் பட்ட மக்களின் மனநிலையில் நின்று வெளிப்படும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ் முதல்வன்.எந்நிலை கண்டாலும் மறுப்பு ஒன்று மட்டுமே மானத்தைக் காத்துக் கொண்டிருகிறது என்னும் அவர், ஊடகத்தை தலித்துகளுக்கானதாக மாற்ற வேண்டும் என்னும் அவாவின் வெளிப்பாடாகவே, "மக்கள் திரைப்படக் கழகம் " ஒன்றை நிறுவி செயல் பட்டு வருகிறார்.தற்பொழுது மதுரையில் வசிக்கும் தமிழ் முதல்வன், இருள் தீண்டும் இடமெங்கும் ஓய்வற்று வெளிச்ச வரிகளை எழுத முனையும் பேனாக்காரர்.
-யாழன் ஆதி(நன்றி -தலித் முரசு -செப் -2009)