செவ்வாய், 13 ஜூலை, 2010

தொடரும் ஏமாற்றங்கள்

தொடரும் ஏமாற்றங்கள் - தமிழ் முதல்வன்.
                            மாற்றங்கள் பலவகையுண்டு. பிறரால் நிகழ்வது, நம்மால் நிகழ்வது, காலத்தால் நிகழ்வது என்றவாறு அவை  அமைகின்றன. அன்பு, ஆறுதல், உதவி, என விரியும் நம் எதிர்பார்ப்புகள்  குழந்தை, பெற்றோர், மனைவி, சகோதரர், நண்பர் என விரியும் பிறரிடம் கிடைக்காதபோதும், பிறரின்பால் நாம் கொண்டுள்ள திட்டங்கள் நிறைவேறாதபோதும் வரும் ஏமாற்றங்கள் ஒரு வகை. வாழ்வில் நம்மையறியாமலேயே கடந்துகொண்டிருக்கிற நமக்கான அறிவு, வாய்ப்புகள் போன்றவை தெரியவரும்போதும் அது காலத்தால் நிகழும் ஏமாற்றங்கள்.  நாம் கொண்டுள்ள திட்டங்களை முடிக்க நம்மாலே இயலாத் நிலைவரும்போது நிகழும் ஏமாற்றங்கள் நம்மால் விளைந்த ஏமாற்றங்கள்  என இதை விரித்துக் கொண்டே போகலாம்.
                                 இவைகளில் நான் நாள்தோறும் ஏமாறுவது காலத்திடம்தான்.ஒருவகையில் அது என் இயலாமையால் நிகழ்வது என்றுகூடச் சொல்லலாம். வீட்டில் என்னைச் சுற்றி எப்பொழுதும்  புத்தகங்கள், இதழ்கள்  என்றவாறுதான்  சூழ்ந்து கிடக்கும். அதில், இன்று படித்து முடித்துவிடவேண்டும் என்று நான் போடுகிற தீர்மானங்கள் நிறைவேறாத போதுதான் ஏமாற்றங்கள் நிகழும். பல வாசிப்பு வீரர்கள் உட்கார்ந்த நிலையிலேயே முன்னூறு  பக்கங்களை முடித்துவிட்டுதான் எழுந்திருக்கிறார்கள். அதை நானும் செய்யமுடியும். ஆனால் கிரகிக்க வேண்டுமே.
                                ஒரு அமர்வில் நூறு பக்கத்தை மட்டுமே என்னால் வாசிக்க முடிகிறது.அதற்கான நேரமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகிறது. இதனால், கடவுள் நம்பிக்கை இல்லையெனினும்  விஜயகுமாரன் சொன்னதுபோல் இயலாமைகள் நம்மை நமக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ஆற்றலை நோக்கி ஈர்க்கிறது. அந்த ஆற்றலே கடவுள் நம்பிக்கையின்பால் இழுத்துச் செல்கிறது. அப்படிதான், புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவையெல்லாவற்றையும் படித்து முடித்துவிட வேண்டுமென்ற ஆர்வம், ஆவல் என்னை, என்னைமீறிய ஆற்றலை நோக்கிச் செலுத்துகிறது.
                                 இது நாள்தோறும் நிகழும் ஏமாற்றம் என்றால் மாதந்தோறும் ஒரு ஏமாற்றம் நிகழ்கிறது. அது இதழ்கள் மூலம் வருபவை. உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, தமிழினி, புதிய ஜனநாயகம்-கலாசாரம், உழைக்கும் மக்கள் தமிழ்தேசம், தென்செய்திகள், புது விசை... என விரியும் இதழ்கள் மாதந்தோறும் முன்னூறு ரூபாயைப்  பிடித்து விடுகின்றன.. ஆனால், அனைத்திலுமுள்ள கட்டுரைகளையும், படைப்புகளையும் படிக்க முடிவதில்லை. இதனால் வரும் ஏமாற்றம் அதிகம்.
                                  இதுபோக புத்தகக் கடைக்குப் போனாலா, புத்தகக் கண்காட்சிக்குப் போனாலோ  ஒரு ஏமாற்றம் வரும். அது இவையெல்லாவற்றையும் விஞ்சிவிடும். ஏராளமான புத்தகங்கள் இருக்கும். பார்ப்பேன். புரட்டுவேன். உடனே வாங்க வேண்டும்போல இருக்கும். விலையைப் பார்ப்பேன். ஏமாற்றம். கையில் காசு வேண்டுமில்லையா. அனைத்துக் கடைகளுக்கும் சென்று வாங்க ஏங்கி, ஏமாந்து அக் கண்காட்சியைவிட்டு வெளியேறும்போது கைகளில் ஓரிரண்டு புத்தகங்கள் மட்டுமே ஆறுதல் தரும். மற்ற அனைத்துப் புத்தகங்களும், எங்களைத் தவிக்கவிட்டுச் செல்கிறாயே என ஏங்கிக் கொண்டிருக்க அவைகளை நான் தவிக்கவிட்டு வந்துவிடுவேன்.
                            ஆனால் அண்மையில் நிறைவு ஏற்படுவதாக ஒரு சூழல் அமைந்தது.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குச் செல்வதற்கு கையில் காசு இல்லாமல் இருந்தேன். தக்க நேரத்தில் அண்ணன்  சிவகுமார் அவர்களின் உதவி தென்னாப்பிரிக்காவிலிருந்து  கிடைத்தது. கோவை மாநாட்டின் எதிர்புறம் நடந்த புத்தகச் சந்தையில் குடும்பத்தோடு சென்று மூவாயிரம் ரூபாயிக்கும் மேலாக புத்தகங்கள் வாங்க முடிந்தது.  எந்தக் கண்காட்சியிலும் ஐநூறு ரூபாய்க்கும் மேலாக புத்தகங்களை வாங்கியதில்லை என்ற நிலையில் இந்த அளவுக்கு வாங்கப் பெற்றதில் மகிழ்ச்சியில் திளைத்தேன். குழந்தைகளைப் போன்று புத்தகங்களை தூக்கி சுமந்துகொண்டு வந்தேன். சந்தையின் வெளிவாயிலின் அருகில் அஜயன் பாலா அவருடைய புத்தகங்களோடு நின்றிருந்தார். அவரிடம் பேசமட்டுமே முடிந்தது. புத்தகம் வாங்கக் காசில்லை. வாங்கிய புத்தகங்களின் வழியே  அண்ணன் சிவகுமார் அவர்கள்  பக்கத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார். ஆனால், அங்கு  என்னுடைய கவிதைகளையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை வாசிக்கும் ஆய்வரங்குக்குள் என்னால் செல்லமுடியாமல் போய்விட்டது. எந்தக் கவிதைப் புத்தகம் உள்ளே வாசிக்கப் பட்டதோ அதே கவிதைப் புத்தகம் என்னை உள்ளே செல்லவிடாமல் செய்து விட்டது. புத்தகத்தின் தலைப்பில் 'ஆயுதம்' இருந்ததால் காவலர்கள் பயந்து விட்டார்கள். அந்தப் புத்தகம்  கையில் இருந்ததால்  என்னை விசாரணையின் பேரில் வருத்தி விட்டார்கள். இதைப் பதிவு செய்த கல்கி இதழுக்கும் திலகபாமாவுக்கும் நன்றிகள். இவ்வாறாக அங்கு ஏமாற்றம்.
                                         இதில் இன்னொரு பெரிய ஏமாற்றம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. வாசிக்கும் எழுத்துக்களின் மூலம் பிறக்கும் புதிய சிந்தனைகளை உடனே எழுதமுடியவில்லை. விட்டு விட்டுப் பிறக்கும் சிந்தனைகளைத் தொகுக்க முடியவில்லை. தோன்றி மறைந்துகொண்டேயிருக்கின்றன. எழுத உட்கார்ந்தால் படிக்கத் தோன்றுகிறது. படித்துக் கொண்டிருக்கும்போது எழுதுவதற்கான சிந்தனை பிறக்கிறது. இப்படியாக, சிந்தனைஎல்லாவற்றையும்  எழுதமுடியவில்லை என்பது ஏமாற்றமாயிருக்கிறது.
                                         இவை எல்லாவற்றையும் விட ஒரு பெரிய ஏமாற்றம் எனக்குள்ளும், என்னால் இந்த சமூகத்திற்கும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அது என் எழுத்துக்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தையும் விளைவிக்கவில்லை என்பதுதான்.

1 கருத்து:

  1. அருமையான கட்டுரை நண்பரே , வாழ்வில் ஏமாற்றங்கள் இல்லை என்றால் வாழ்க்கை ஒரு சுவை இல்லாமல் போகிவிடும்

    பதிலளிநீக்கு