ஞாயிறு, 4 ஜூலை, 2010

குழந்தைகள் மீதான வன்முறை -தமிழ்முதல்வன்

குழந்தைகள்  மீதான வன்முறை -தமிழ்முதல்வன்  
                         ண்மையில்  கோவையில் சந்தித்த (24-06-2010) அஜயன் பாலா அவர்களும், முக நூலில் (face book) சந்தித்த ஞான பாரதி அவர்களும் 'எப்ப சென்னை வருவீங்க?' எனக் கேட்டனர்.  எனக்குச் சென்னை என்றாலே ஒரு பயம் தொற்றிக் கொள்ளும். மிகவும் அவசியமேற்படும் பொழுது சென்னை செல்லும்போதெல்லாம் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுதான் செல்வேன். ஏனெனில் மதுரையை விடவும் சென்னை அவலம் மிகுந்த நகரமாக எனக்குக் காணப்படுகிறது. சென்னை செல்லும் போதெல்லாம் கட்டிடங்கள், வாகனங்கள், கட்டிளம் நங்கையர்கள், பகுமான மனிதர்கள், பணக்காரத் தோற்றங்கள் இவையெல்லாவற்றையும்  விட  என்கண்ணில் ஏழைகளே தென்படுகின்றனர். அன்றாட உணவுக்கு அல்லாடும் தெருவோர வாசிகள் நிலைமையே தென்படுகிறது. சென்னையில் காலடி எடுத்து வைக்கும் நேரமேல்லாமே அதிகாலை பொழுதாக அமைவதால்,  செல்லும் வழிகளில், சாலையோர நடை பாதைகளில் விரித்த துணிகளும் விலகிக் கிடக்க வெற்றுத் தரையில் படுத்து உறங்கும் அப்பாவிகளின் நிலைமை காலையிலேயே கவலையைத் தந்துவிடும். அதிலும் அந்த அப்பாவிகளின் நடுவில் தூங்கும், ஒருசில இடங்களில் பெற்றோரை விட்டு புரண்டு புரண்டு விலகிப் போய் தனியாக அனாதையாக தூங்கிக் கிடக்கின்ற குழந்தைகளின் காட்சி இதயத்துடிப்பைக் கூட்டிவிடும். அக்குழந்தைகளின்மேல்  படிந்துள்ள சிங்காரச் சென்னையின் தூசிகளும், அழுக்குகளும் அவர்களின் வாழ்வில் படிந்துள்ள துன்பத்தைப் போல சுமையாக அமுக்கிக் கிடக்கும்.  காலை வெயிலில் காய்ந்த சருகுகள் போல, சோர்வாகக் கிடக்கும் அவர்களின் நிலை  சென்னையில் நான் செய்ய வேண்டிய பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கும்.
                                              மலை, காடு, வயல் போன்ற பகுதிகளில் இயற்கை சார்ந்து வாழமட்டுமே பழகிய, அரசாங்கத்தாலும், அதன் துணைகொண்டு தனியார் நிறுவனங்களாலும் விரட்டப் படும் பழங்குடிகள் மற்றும் தொல்குடிகள் (தலித்துகள்) பெரு நகரங்களுக்குத்தான் ஓட வேண்டியிருக்கிறது. அச்சூழலில், அறிவியலின் நவீனத் தன்மையோடும், அதன் அகால ஓட்டத்தோடும் பிணைக்கப் பட்டு சக மனிதரை மயக்கும் அதி தொழில்நுட்பமிகுந்த போலிப் புன்னகைகள் போன்ற இதர உடல் மொழிகள் மற்றும் வெளிப்பாடுகளுடன் அலைகின்ற நகரத்து மக்களோடு போட்டியிட முடியாமல் அவர்களால் துவைக்கும் துணியைப் போன்று அடித்துத் தூக்கி வீசப் படுகின்றனர். ஒரிசாவின் பழங்குடி மக்களின் தலைவர், 'எங்கள் வாழ்க்கைமுறை நகரங்களில் கிடையாதாகையால் நாங்கள் அழிந்து விடுவோம்' என்று அச்சம் பொங்கக் கூறுவதை இங்கு சுட்டிக் காட்டலாம்.   புதைகுழிக்குள் தள்ளப்பட்டதுபோல்  நகரங்களுக்குள் ஒருவேளைச் சோற்றுக்காக அலையும் வேதனைகள் சொல்லித் தீராது கிடக்கின்றன. அவர்களின் குழந்தைகள் பசியின் வேதனையில் அழுகும்போது அந்த மூலதனத்தையே முதலீடாக்கி பிச்சை எடுக்கிறார்கள். அழுதபிள்ளை பால் குடிக்கும் என்ற பழ மொழி அழுத பிள்ளை காசு பெறுகிறது என்றவாறு புது மொழியாகிவிட்டது. இயலாமையால்  நேரும் இந்தச் சூழல், சில வன்மனதுக்காரர்களுக்கு சாதகமாகி விடுகிறது. அதே குழந்தைகளை வாடகைக்கு எடுத்து காசு பொறுக்கும் எந்திரமாக மாற்றி விடுகின்றனர்.
                                                 என் வாழ்க்கையில் என்னைத் தூங்கவிடாமல் செய்யும் சம்பவங்கள் என்றால் ஒன்று விபத்துக் காட்சி. இரத்தமும் பிய்ந்துபோன சதையுமாகக் கிடக்கும் உடல்களைப் பார்த்துவிட்டால் ஒரு மாதம் வரை நிம்மதியான தூக்கம் இராது. அண்மையில் இணையத்தின் வழியாக பார்த்த காட்சி ஒன்று அதைவிடவும் எனை வருத்தியது. தமிழ் இளைஞர்களை வரிசையாக முழங்காலிட்டு வைத்து அவர்களின் தலையில் சிங்களச் சிப்பாய்கள் சுட்டுத் தள்ளும் காட்சியது. இரத்தமும் சதையுமாக  அழுத்தி வருந்தவைக்கும் அக்காட்சிகளுக்கு இணையானதாக மறக்கமுடியாத கொடுமையாக பாதிக்கும் மற்றொன்று குழந்தைகள் மீதான வன்முறை.
                                                   போலித் தாய்மார்கள்  கடைவாயில்களிலும், உணவுவிடுதி வாயில்களிலும், கோயில் வாயில்களிலும் நின்றுகொண்டு பசியால் ஏற்கனவே மயக்கமுற்று தோளிலும், உடல்மீது தொங்கும் தொட்டியிலும் கிடக்கும் வாடகைக் குழந்தைகளை பிஞ்சுச் சதை கிழிய கிள்ளியும் , பிஞ்சுச் சதை வீங்க அடிப்பதுமான காட்சிகள் எனை மயக்கமுறச் செய்திருக்கின்றன. வலி தாங்கமுடியாமல் ஆதரிக்க ஆளில்லாமல் கதறும் குழந்தையைக் கண்ட ஒரு சூழலில் நான் அந்த போலித் தாயை கண்டித்த பொழுது ரவுடிகள் போன்ற கூட்டம் எனைச் சூழ்ந்துகொண்டது. சக மனிதர்கள் வேடிக்கை பார்த்துவிட்டு இது இவனுக்கு வேண்டாத வேலையென்று ஒதுங்கிப் போய்விட்டனர். ஒரு சிலரோ 'அது அப்படிதான் நடக்குது தம்பி, நம்ம என்ன பண்றது' என்று எனக்கு அறிவுரைசொல்லிப் போகிறார்கள். நான் இச்சமூகத்தை நினைத்து அதிர்ச்சியடைந்து, அந்தக் குழந்தைகளின் ஆதரவற்ற மனநிலைகளை, உடல் வலிகளை எண்ணி நானாக அழுதிருக்கிறேன். புலம்பியிருக்கிறேன். இப்பொழுதும்  என்மனநிலை  அக்குழந்தைகளுக்கு  ஆதரவாக, அதுவும் அவர்கள் அறியாவிதத்தில், நேரடியாக உதவாநிலையில் அலைந்துகொண்டிருக்கிறது. இந்த அவலங்களைக் காணும் சக மனிதர்கள் நேரடியாக அப்போலி தாய்மார்களை குற்றம் சாட்டிவிட்டு அவர்களும் உள்ளிட்ட இச்சமூகத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அல்லது அவர்களுக்கு தங்களும் இந்நிலைக்கு ஒரு காரணம் என்பதே தெரியவில்லை.
                                                வன்மையான சமூகம் ஈன்று போட்ட பாமர ஏழைப் போலித் தாய்களின் இக்கொடுமைகளுக்கு  சற்றும் குறைவில்லாமல் படித்த நாகரிக பெற்றோரே ஒரு குழந்தையை அடிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். வறுமை எனை திருப்பூருக்குத் தள்ளிய போது, அங்கு நான் குடியேறிய  வளாகத்திற்குள் குடியிருந்த ஒருவன் , நாகரிக நடை உடை கொண்டவன். கல்லூரிப் படிப்புகளை முடித்தவன்.மனைவிமீது கோபம் கொண்டாலும்கூட குழந்தையை அடித்துத் துவைப்பான்.அதுவும் அவனது அடித்தல் முறை காவல் நிலையங்களில் கயிற்றில் கட்டி அடிப்பதைப் போன்று இருக்கும்.ஒருகையில் குழந்தையின் கைகளிரண்டையும் பிடித்துத் தூக்கிக் கொண்டு அந்தரத்தில் தொங்கவிட்டு மற்றொரு கையால் கோபம் தீரும் வரை அடிப்பான். எண்பது கிலோ எடை கொண்ட உடம்பின் வலு வன்மையாக எட்டு கிலோஎடைகொண்ட   உடல்மீது தாக்கும்போது  அந்த வலியைநினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.. அதுபோல் அவனுடைய மனைவியும் கையில் கிடைத்த கரண்டி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு அடிப்பாள். இப்படி  அடிவாங்கியே நான்கு வயதுக் குழந்தை இரண்டு வயதே ஆனது போன்று வளர்ச்சியற்று சோர்வாகவே காணப்பட்டது. நான் உள்ளிட்ட வளாகத்தில் குடியிருந்த அதனை பேரின் கண்டிப்புகளைத் தாங்க முடியாமல் வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டான். அந்தக் குழந்தையை அடிக்கும் காட்சிகள் மட்டும் இன்றும் நினைவில் தொடருகின்றன.
                                                          மேலும் திருப்பூரின் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் அநாதை போலவே வாழ்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களெல்லாம் வேலை செய்தால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்பதால் குழந்தைகள் தனியாகவே விடப்படுகின்றனர். அங்கு குழந்தைகளைப் பாதுகாக்கும் எந்த ஒரு சூழலும் இல்லை. அங்குள்ள நிறுவனங்களில் வேலை நேரம் காலை எட்டரை மணிக்கே தொடங்கி விடுவதால் ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு பெற்றோர் கிளம்பி விடுகின்றனர்.பள்ளிசெல்லா குழந்தைகள் அடைபட்ட வீட்டினுள் முடங்கிக் கிடப்பதும், பள்ளி செல்லும் குழந்தைகளை அதற்குத் தயார்ப்படுத்த ஆளின்றி ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்வதாயும் இருக்கின்றனர்.. இப்படியே படிப்பில் ஆர்வம் குறைந்து இடை நிற்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர். பணியிடங்களில் வேலைப் பளு இருண்ட உலகத்தில் அவர்களைத் தள்ளுகிறது. மேலும், அங்கு ஆண் பெண் என்று  பாராமல் குழந்தைகள் அனைவரும் பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர்.இவைகளில் பெரும்பாலானவை தலித் குழந்தைகளே என்பது குறிப்பிடத் தக்கது.  இப்படியான வன்முறைகளால் கருவுற்றுப் பிறக்கும் சிசுக்கள் குப்பைத் தொட்டிகளிலும் கழிவுநீர் வாய்க்கால்களிலும்  பிணமாகி விடுகின்றன.மேலும் பல சிசுக்கள் பிறக்கும் முன்பே கருவறைக்குள்ளிருந்து வெளியே வீசப் படுகின்றன.உலக அளவில் பார்த்தால் யூனிசெபின் கணக்குப்படி ஒன்றரைக் கோடிக் குழந்தைகள் முதலாவது பிறந்த நாளுக்கு முன்பு இறந்து விடுகின்றன. ஆனால் இந்தக் கணக்கில் திருப்பூர் போன்ற தொழில் பெருத்த நகரங்களில் நசுங்கிய குழந்தைகளின் எண்ணிக்கை விடுபட்டிருக்கலாம்.
                                       திருப்பூரில் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வரை நான்கு சுவர்களுக்குள்ளேயே குழந்தைகள் முடக்கப்படும்போழுது மன பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  இறுகிய அழுத்தமான மனநிலையிலிருந்து விடுபட சிறு வயதிலேயே புகை, மது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.பனியன் நிறுவனங்களில் துணி வெட்டும் பொழுது வரும் தூசிகள், துணிகளில் கரை நீக்கப் பயன் படும் வேதி அமிலங்கள் போன்ற  இன்னபிற உடலை கேடு செய்யும்  சூழல்களில்தான் அவர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் குட்டிஜப்பான் என்றழைக்கப்படும்  சிவகாசியிலும் குழந்தைகள் அபாயகரமான  இரசாயன கலவைகளோடு பணிபுரிகின்றனர். இப்படியாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகையில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில இருக்கிறது. ஆந்திரம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த அறிக்கை 2005 எடுக்கப்பட்டது.
                                           தொழில் நகரங்களைக் காட்டிலும் சொற்பக் கடனுக்காக செங்கல் சூளைகளிலும் கட்டிட வேலைகளிலும் மிகவும் கடினமான பணியை குழந்தைகள் செய்துவருவது மிகவும் கவலைக்குரியது.  மேலும், பெரும் பண்ணைகளிலும், அரிசி அரவை நிலையங்களிலும் தூசுகளை  சுவாசித்துக்கொண்டே பணிபுரிகின்றனர். குழந்தைகள் கடினமான அபாயகரமான வேலைகளை இந்தியா  முழுவதிலும் செய்து வருவதற்கு பெரும் சாட்சியாக விளங்குவது உ.பி.யிலுள்ள பிரோசாபாத் கண்ணாடித் தொழிற்சாலை. ' ல பியாஸ்' எனப்படும் கைப்பிடி இல்லாத  , நான்கடி நீளமுள்ள இரும்புக் கம்பிகளின் முனையில் அடைக்கப் பட்டுள்ள எரியும் கண்ணாடிக் கூழ் கொண்ட களிமண் கலவையை குழந்தைத் தொழிலாளர்கள் சுமப்பதாக பேரா. சந்திரா கூறுகிறார். அங்குள்ள எரியுலைகள்  1800 டிகிரி வரை வெப்பம் உள்ளதாக அவர் கூறுகிறார். அங்கு பணிபுரியும் எழுபதாயிரம் தொழிலாளர்களில் பதிமூன்று சதவீதம் பேர் குழந்தைகள் என்று அம்மாநில அரசே ஒப்புக் கொள்கிறது.மேலும் கல்குவாரிகளில் கல் உடைக்கவும் , சுமக்கவுமான வேலைகளை செய்யும் குழந்தைகள்  எலும்புகள் ஒடிய பாடுபடுகின்றனர்.
                               திண்டுக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளில் வேலை செய்ய பெண்குழந்தைகளே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  அதிகாரிகளிடம் காட்டுவதற்காக குழந்தைகளுக்கு சேலைகட்டிவிட்டு பெரியவளாக போலியான அடையாளம் காட்டுகின்றனர். திருமணத்திட்டம் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கிவிட்டு இறுதியில் சொற்பத் தொகையைக் கொடுத்ததும் , சில நேரங்களில் அதையும் தராமல் தவிக்க விடுகின்றனர். இவ்வாறு ஏமாறும், சுரண்டப்படும் பெண்குழந்தைகள் பெரும்பாலும் தலித்துகளாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு நிகழும் பாலியல் கொடுமைகள் வெளிதெரியாமல் மறைக்கபடுகின்றன. இப்படியாக , இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ஏழு லட்சம் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
                                   கிராமப் புறங்களில் சாதி ஆதிக்கவாதிகளிடம் , மிக எளிதில்  தலித் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.  சாதியாதிக்கவாதிகளையே சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெற்றோரும் எதிர்க்கத் திராணியற்று விடுவதால், கொடுமைப்படும் குழந்தைகள் மன பாதிப்புக்குள்ளாகி பின்னாளில்  வயதுக்கு வருமுன்பே பாலியல் தொழிலுக்கு வந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் புரியும் பெண்களில் பதினைந்து சதவீதம் பேர் இப்படியான பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர். குறிப்பாக , துளிர் எனும் அமைப்பு 2006 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள 2211 குழந்தைகளிடம் ஆய்வுசெய்தபோது 42 சதவீதம் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கண்டுபிடித்துள்ளது.
                    ஊடகத்தின் தாக்கத்தினாலும், விரைந்து தாக்கும் வரன்முறையற்ற பன்னாட்டு பழக்கவழக்கங்களாலும்  காமவெறி கொண்டு தம் குடும்பக் குழந்தைகளிடமே பாலியல் வன்முறை செய்யும் மிருகங்களும் மனிதன் என்ற உருவத்தில் அலைகின்றன. சாக்சி எனும் நிறுவனம் டெல்லியிலுள்ள 350  குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் 63 சதவீதம் பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.
                                                   மேலும் குழந்தைகளை பெரியவளாக்கிப் பார்க்கத் துடிக்கும் பெற்றோர்கள் அதன் மழலைத் தன்மையை தடுத்து, ஒருவித அழுத்தத்தை திணித்து விரக்தியை உண்டாக்குகின்றனர். விஜய் தொலைக் காட்சியில் சிறுவர்களுக்கான நடனப் போட்டியில் ஆடும் குழந்தைகள், சினிமாப் படங்களில் காதலர் இருவர் தன்னுடைய பாலுணர்வை வெளிப்படுத்த மேற்கொள்ளும் அசைவு நளினங்கள் (அந்த உணர்வு குறித்து ஏதும் அறியாமல் இருக்கும் வயதில், பாலின உந்துநீர்கள் சுரக்கும் முன்னரே ) ஆகியவற்றை செய்திட நிர்பந்திக்கப் படுகின்றனர். குழந்தைகளிடத்தில் இவ்வாறு தெரியாமல் வெள்ளிப்படும் பால்வேட்கை உந்து அசைவுகள் காமுகர்களை ஈர்த்து, குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. இவ்வாறான நிலையில் ஊடகங்களும் குழந்தைகளின் கொடுமைகளுக்கு துணைபுரிகின்றன. இவ்வாறு நடக்கும் கொடுமைகள் நகரங்களில் வெளியே தெரிகின்றன. கிராமங்களில் நடக்கும் குழந்தைகள் மீதான கொடுமைகள் அங்குள்ள கட்டப் பஞ்சாயத்துக்குக் கூட வருவதில்லையாதலால் மறைக்கப் படுகின்றன.
                                     செல்பேசியில் மணிக்கொருமுறை பார்த்து மகிழும்படியான பாலுறவுப் படங்களுடன் அலையும் இளைஞர்கள் , தான்கொண்ட வக்கிரத்தை எளிதில் தீர்த்துக் கொள்ள , எதிர்ப்பும் வலுவும் குறைவான குழந்தைகளையே நாடுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளுக்குச் சாட்சியாக அக்குழந்தைகளின் உடலமைப்பே இருந்துவிடுகின்றன. ஆனால், ஆண்குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு சாட்சியங்கள் உடலில்  தென்படுவதில்லை. இப்படியான நிலையில் சம்வாதா எனும் அமைப்பு பெங்களூரில் 1996 ஆம் ஆண்டு மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் 47 சதவீதம் பேர் பாலியல் கொடுமைக்கு உள்ளாயினர் என்று வசந்தி தேவி (காலச்சுவடு-90)கூறுகிறார். மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறை, குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து பதிமூன்று மாநிலங்களில் 12 ,447  குழந்தைகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 53 சதவீதம் பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக , அதிலும் 21 .9  சதவீதம் பேர் மோசமான பாலியல் கொடுமைக்கு உள்ளானதாகவும் தெரியவந்தது.இதில் இருபால் குழந்தைகளும் சரிசமமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இவ்வாறான பாலியல் கொடுமை புரிவதற்கு கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் குழந்தைகளைத் தேடி வெள்ளையர்கள் வருவதாக பத்திரிகைகள் (புதிய கலாசாரம்-அக்-2008 ) சொல்கின்றன. இதற்காக குழந்தைக் கடத்தல்களும் நடக்கின்றன.கடத்தப்படும் குழந்தைகள் விற்கப்படுகின்றன. வங்காள தேசத்தில் பத்து முதல் பனிரெண்டு வயது வரையிலான சிறுவர்களை இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிவிடலாம் என்று ராஜூ சக்பால் என்ற தரகன் சொன்னதாக யோ.திருவள்ளுவர் கூறுகிறார்.
                          மேலும், மழலைகளும் விற்பனை செய்யப்பட்டு அரபு நாடுகளில் ஒட்டகப் பந்தய ஓட்டிகளாக பயன்படுத்தப் படுவதாகவும் கூறுகிறார். ஐக்கிய அரபு எமிரேட்டின் துணை அதிபர் சேக் முகமது பின் ரசீத் அல்மக்தோம்  அவரது சகோதரருடன் சேர்ந்து 30,000  குழந்தைகளை ஒட்டக ஓட்டும் அடிமைகளாக வைத்திருததாக அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  இப்படி விற்கப்படும் குழந்தைகள்  சூடான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என அறியப்படுகிறது. தமிழக அளவில் பெரும்பாலான தலித் குழந்தைகள் பிற மாநிலங்களுக்கு முறுக்குப் போடுதல் போன்ற பணிகளுக்காக  விற்கப்படுவதுபோல் கொத்தடிமைகளாக பெற்றோர்களாலேயே அனுப்பப்படுகின்றனர். அக்குழந்தைகளை வாங்கும் ஏஜெண்டுகள் ஊர்ஊராக அலைந்து வறுமையின் பிடியிலுள்ள குடும்பங்களைத் தேடி கடன் வழங்கி குழந்தைகளைக் கடத்துகின்றனர்.
                                இவ்வாறாக குழந்தைகள் மீது உடல்ரீதியாக வன்முறைகள் திணிக்கப் படுகின்றன.மேலும், புறக்கணிப்பு, அவமதிப்பு போன்ற செயல்களால் உணர்வு ரீதியாக குழந்தைகள்  வன்கொடுமைகளுக்கு உள்ளாவதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். அந்தச் செய்திகளைத்  தாங்கவும் நெஞ்சத்தை தயாராய் வைத்திருப்போம்.

2 கருத்துகள்:

  1. மனிதனுக்கு இயற்கையாக இருக்கவேண்டிய அன்பு, கருணை, இரக்கம், உள்ளிட்ட மெல்லியல் நுண் உணர்வுகளைப் பொருளியல் வாழ்வுமுறையினால் தொலைத்துவிட்டோம் என்றே நீங்கள் குறிப்பிட்டுள்ள புள்ளிவிபரங்கள் சொல்கின்றன... யாருக்கு என்ன நடந்தால் என்ன, நமக்கு நேராதவரை சரிதான் என்ற குறுகிய மனப்போக்கும் இத்தகைய பிரச்சினைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருப்பது கண்கூடு... தகவல் மற்றும் உணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும், நன்றியும்...

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் நேரம் உங்கள் எழுத்தின் கனமான நினைவுகளிலே சென்றேன். இப்போது எனக்கு நீங்க கூறிய கொடூர அப்பன் அந்த குழந்தையை அடித்ததுதான் எண்ண தோன்றுகிறது....அந்த பிஞ்சு நிலை நினைத்து ஐயோ பதறுது என் நெஞ்சு...என் வாழ்விலும் கசப்பான சம்பவம் நிகழ்ந்தது என் தாய் எனக்கு 4 வயது இருக்கும் போது எனக்கு முழு தாய்மை பாசம் கிடைக்காமலே என்னைவிட்டு நோயவாய்ப்பட்டு இறந்துவிட்டார். ரொம்ப வருடம் குழந்தை இல்லாத என் அம்மாவின் தங்கை என்னை தத்து எடுத்து வளர்த்தார். தாயாகவே நினைத்து ரொம்ப சந்தோச நினைவுடன் சென்றேன். ஆனால் அங்கு நடந்ததோ வேற என் சித்தப்பா குடிகாரர் தினமும் குடித்துவிட்டு என்னை ஏதோ சில காரணங்கள் சொல்லி அடிப்பார். மிதிப்பார் நான் எனன செய்ய முடியும் சிறுவனாக இருந்தேன். என் சித்தியுடன் சண்டை என்றால் நான் தான் அதில் அதிகமா அடிவாங்குவேன். என் தந்தை என்னை பார்க்க வரும் போதெல்லாம் அவரிடம் சொல்லி அழுவேன் ஆனால் அவர் என்னை சமாதனம் செய்து அவர்களிடமே விட்டு செல்வார். கனத்த இதயத்துடன் இருந்தேன். மூன்று வருடம் அவர்களுடன் இருந்தேன். அடி, திட்டு தாங்கமுடியல ஓடிவந்துவிட்டேன். மறுபடியும் அவர்கள் வந்து கூட்டி செல்லவந்தனர். நான் செல்லவில்லை. நான் அவர்களுடன் சென்றால் செத்துபோயவிடுவேன் என்று சொன்னேன், கதறி அழுதேன் என் அப்பா பயந்துவிட்டார். பின் அவர்கள் அடிக்க ஆள் இல்லாமல் வேதனையுடன் சென்றனர். அந்த நாட்கள் எனக்கு ரொம்ப ஆனந்தமான நாட்கள். அந்த ஆனந்தம் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. என் அப்பா இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார். பேய் போய் பூதம் வந்த கதையா ஆகிவிட்டது. இதில் ஒன்னு சந்தோசபடவேண்டி விசயம் எனன வென்றால் என் சித்தி என்னை அடிக்கமாட்டார் ஆனால் திட்டு ரொம்ப அதிகமாகவே இருக்கும். அடிவாங்கரதவிட, திட்ரதே பராவில்லை என்று சமாதானம் ஆகிவிடுவேன் ஆனால் நீண்ட நாட்கள் என் இறந்த தாயை நினைத்து அழுத நாட்கள் அதிகம். எனக்கு கல்யாணம் ஆகும்வரை என் சித்தி என்னை புரிந்துகொள்ளாமலே என்னை திட்டினார். அவங்க மேல் எனக்கு கோவம் இல்லை ஏனென்றால் எல்லா பெண்களையும் என் இறந்த அம்மாவாய் பார்த்தேன். அதனால் பெண்கள் மேல் எனக்கு அன்புதான் அதிகமானது. இப்போது எனக்கு கள்ளயானம் ஆகி இரண்டு குழந்தை இருக்கின்றன. மிகவும் சந்தோசமான வாழ்வை வாழ்கிறேன். உங்கள் கட்டுரை நினைவுகள் என் நினைவுகளை ஒத்தே வருகிறது. அந்த குழந்தைகள் ஏங்கும் ஏக்கங்கள், கனவுகள் என் உணர்வுகளுடன் கலந்தது....என் வாழ்வின் நிகழ்ந்த நினைவுகளையே கருத்தாய் அளிக்கின்றேன். உங்கள் சமுக உணர்வும், அதன் மேல் வரும் ஈடுபாடும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. நீங்கள் கூறிய அவலங்களை பார்த்தும், கேட்டும் என் நெஞ்சமும் துடிக்கின்றது ஏனென்றால் நானும் பாதிக்கபட்டவன். இந்த சமுக அவலங்கள் நீங்க எனன செய்யலாம் சொல்லுங்கள். ஏதோ விதத்தில் முயற்சி செய்து மாற்றவேண்டியத்தை மாற்றுவோம். தோழமையுடன்....

    என்றும் நட்புடன்:
    Rk.குரு

    பதிலளிநீக்கு