வியாழன், 29 ஏப்ரல், 2010

திரை ஓட்டம் - ஒரு உளவியல் பார்வை

உடலுழைப்பில் கடுமையாக ஈடுபடக் கூடிய வெகுமக்களை அடுத்தடுத்து காண்பிக்கப்படும் விரைவுக்கட்சிகளால் தொகுக்கப்பட்ட திரைப்படங்கள் ஈர்ப்பதும், உடலுழைப்பற்ற சொகுசு வாழ்க்கை மேற்க்கொண்டிருக்கக் கூடிய மேல்தட்டு மக்களை யதார்த்தமான realtime ல் ஓடக் கூடிய திரைப்படங்கள் ஈர்ப்பதும் ஏன்?

உள்ளக்கிடக்கையை உள்ளபடியே உடல்மொழியில் கொணரும் நேர்மையான வெளிப்பாடுகளையுடைய அடித்தட்டு மக்களை மிகைப்படுத்தப்பட்ட நடிப்புகள் ஈர்ப்பதும், உள்ளத்திற்கும் முகத்திற்குமான இடைவெளியை அதிகப்படுத்திக்கொண்டு எதிர்மறையான உடல்மொழிக் கூறுகளைக் கொண்டு
பொய்மையான வெளிப்பாடுகளில் வாழும் மேல்தட்டு ரசிகர்களை மிகையற்ற, யதார்த்தமான நடிப்புகள் ஈர்ப்பதற்கும் காரணம் என்ன?

இந்தக் கேள்விகளை கடந்த ஆண்டில் அமெரிக்கன் கல்லூரிக்கு வந்திருந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியனிடம் கேட்டேன். அவர்,உங்கள் கேள்விகளே எனக்குப் புரியவில்லை என்று கூற, அதற்கு மேல் அந்தக் காலச் சூழ்நிலையில் எப்படி எளிமைப் படுத்திக் கேட்பதென்று எனக்கும் தெரியவில்லை.இப்படி படைப்பாளிகளும், தொழில் நுட்பத்தினரும் புரிதல் இல்லாமலேயே பார்வையாளர்களை ஈர்க்கும் பலவகையிலமைந்த தொழில் முறையை செய்து வருவது குறிப்பிடத் தக்க ஒன்று.

மேற்கண்ட உளவியல் பரிமாணங்களை பரிசோதித்துப பார்த்தால் பல விவரக் கூறுகள் தென்படுகின்றன. அன்றாட வாழ்க்கைத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத அற்பக் கூலிகளுக்காக கடுமையான உடலுழைப்பில் ஈடுபடக் கூடிய வெகு மக்களின் நிலையானது, உழைப்பில் இழந்த உடலின் ஆற்றலைக் கூட மறுகட்டுமானம் செய்யமுடியாத அளவுக்கு உள்ளது. உழைப்பின் காலங்களில் கிடைக்கும் ஓய்வுகள் கூட குறுகிக் கிடக்க, நீண்ட காலங்களில் உழைப்பவரின் மனவெளிகளில் அயர்வு,களைப்பு,வலி, அடுத்து வரும் குறுகிய ஒய்விற்கான ஏக்கம் ஆகியவைகளே நிரம்பிக்கிடக்கின்றன. குனிந்து நிமிரும் வயல் வெளிகளில் அல்லது உடற் பாகங்கள் இயல்புநிலைக்கு திரும்பும் தொழிற் கூடங்களில் கிடைக்கும்இளைப்பாற்றுதலில்  விடும் பெருமூச்சுகூட வாழ்க்கை நகர்வின் அடுத்தகட்ட தேவைகளை எப்படி நிறைவு செய்வது என்ற நடுக்கத்திலேதான் விடப்படுகிறது.  இவ்வாறு வலிகள்,   வேதனைகளால் இறுக்கப்பட்டு அமையும் காலங்களின் ஒவ்வொரு நொடியின் ஒவ்வொரு   துளியும் ஒரு யுகமாகவே முடியும்; அந்த மெதுவாய் நகரும் சூழ்நிலையை விரைவாய் கடக்கவே உழைப்பாளியின்  மனம் விரும்புகிறது.

இப்படியாக அழுத்தும் சுமைகள் நிறைந்த பெரும்பான்மையான காலங்களின் கைப்பற்றுதலிலிருந்து விடுவித்துக்கொள்ள ஊடக வெளியில் தம்மை நுழைத்துக் கொள்கின்றனர் உழைக்கும் மக்கள்.  இன்பக் கிளர்ச்சிக் கூறுகளால் நிரப்பப் பட்ட ஊடக வெளிகள்  எளிதில் அவர்களை தன்வயப் படுத்துகிறது. தம்மைச் சூழ்ந்துகொண்டு சுமையாய் மெதுவாய் கடந்த உண்மை இருப்புக் காலங்களிலிருந்துவிடுபட்டு வேகமாய் முடியும் திரையின் காட்சிகளில் புகுந்து கொண்டு அடுத்தடுத்த கட்சியின் நிகழ்வுகளை விரைவாய் தேடுகின்றனர். திரைக்  கொடையாளர்களும்  திகட்டத் திகட்டத் தந்து அவர்களையும், அவர்கள் புற உலகில் தேடிவைத்த பொருள் ஆதாரங்களையும்,சமூக ஓட்டத்தில் இணைத்துக் கொள்ளக் கூடிய வாழ்வாதாரங்களையும், வரலாற்றில் இருத்தி வைக்கக் கூடிய,  அடையாள படுத்தக் கூடிய பண்பாட்டு ஆதாரங்களையும் அவர்களையறியாமலேயே திருடிக் கொள்கின்றனர்.

உண்மை நிகழ தளத்தில் எதிர் கொள்ளும் ஒரு சூழலை பெரும் காலம் செலவு செய்து கடந்துசெல்கிற உழைப்பவர்,திரைக்களத்தில் அடுத்தடுத்து பல சூழ்நிலைகளை குறுகிய காலங்களில் கடந்து செல்லும்போது, அவருடைய மனங்களின் இறுக்கம் மாயையாக, தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது.    இன்பமுடையதாகவோ துன்பமுடையதாகவோ நிகழப்போகும் வாழ்கையின் முடிவுக்காக நீண்டகாலம் காத்திருக்கும் பொறுமையிலிருந்து  விடுபட்டு,குறிப்பட்ட நேரத்தில் ஒருமுடிவுக்கு வரும் திரையின் கதைகளில்  இன்பமாக முடிந்தாலும் , துன்பமாக முடிந்தாலும் அதில் தம் வாழ்கையின் முடிவையும் இணைத்துக் கொண்டு தானாகவே ஆற்றுப் படுத்திக் கொள்கின்றனர். இந்தவகையிலேதான், வாழ்வின் நீண்ட கால அல்லது குறுகியகால இலக்கு மற்றும் அவ்வப்போது வாழ்வினூடாக செல்லக் கூடிய வெற்றி உணர்வு அல்லது தோல்வி உணர்வு உள்ளிட்ட அனைத்துவித மனத்தோன்றல்களையும் மாயையாக நிகழ்ந்துமுடிகிற திரைக்களத்தில் பொறுத்திவிட்டுத் தான் எங்கு, எப்பொழுது,எப்படி, எச்சூழலில் வாழுகிறோம் என்ற உண்மைநிலை மறந்து நடைச் சடலகளாய்  திரிய உழைக்கும் மக்கள் பழக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர்.  'பொழுதே போகமாட்டேங்குது' என்பவரின்  மனம்,விரைவுபடுத்தப்பட்ட பொழுதுகளால் கட்டமைக்கப்பட்ட நிகழ்வில் நிறைவு கொள்வது  இப்படித்தான். .வசதிகளையும், அதைக் குறைவுப் படுத்தாத ஆதாரங்களையும் குவித்துக்கொண்ட சொகுசு வாழ்க்கை மேற்கொள்பவர்களின் காலங்கள் யாவும் மென்மையாகவே சுமையற்று சுகமாகவே கழிகின்றன. அடுத்து வரும்  ஒவ்வொரு  நகர்வையும் இன்பம் பயக்கக் கூடியதாக, இலாபகரமாக மாற்றுவது குறித்த அவர்களின் திட்டமிடலும் இது குறித்த அவர்களின் இறுமாப்பும் அடுத்த வேளைகுறித்த நடுக்கத்தினை உண்டாக்குவதில்லை.  அடுத்தகட்ட இன்ப நுகர்வினை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கும் அவர்களுக்கு காலம் போதாமலிருக்கிறது. ஒய்வு அல்லது தூக்கம் என்று அவர்கள் எடுத்துக் கொள்ளும் காலங்களில்கூட ஒருவித இன்பத்தை நுகரவேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்படி எந்தச் சுமையுமற்று மென்மையாக ஒடக்கூடியக் காலங்கள் களிப்புடனே செலவு செய்யப்படுவதால் வேகமாய் காலங்கள் கழிவதாய் உணர்கிறார்கள்.

அதனாலேயே, மெதுவாய் செல்லக்கூடிய சூழ்நிலைகளில்,REALTIME ல் ஓட்க்கூடியக் காட்சிகளில், சொல்லவந்த கருத்தை சுற்றிவளைத்தோ அல்லது மறைமுகமாகவோ சொல்லும் படங்களையே விரும்புகிறார்கள். பாலினக் கவர்ச்சியின் உச்சத்திலிருக்கிற இளவயது ஆண் பெண் சந்திப்புகளின்  காலங்கள் யாவும் இன்பம் நிறைந்ததாய் காலம் போவதே தெரியாமல் இருப்பதைப் போல இன்பமயக் கவர்ச்சியில், அதை அனுபவிக்கும் ஆதாரமும் ஆதரவும் உள்ள மேல்தட்டுமக்கள் அவர்களின் களிப்போடுகூடிய வாழ்க்கையை விரைவாய் கழிவதாய் உணருகிறார்கள். வாழ்நாளை, இன்பம் பயக்கக் கூடிய காலங்களை பலமடங்குகளில் பெருக்க ஓடும் அவர்களின் வன்மம், மாயையான , யதார்தத்த  நிலை திரைப் படங்களில் நிறைவுகொள்கிறது.   உழைப்பிற்கு  ஈடான கூலியைவிட பன்மடங்கு வருவாய் பெரும் உயர்தட்டு உழைப்பாளிகளுக்கு வலியென்றால் என்னவென்றே தெரியாமல்,.தேவைக்கும் அதிகமாய் சேர்த்துக் கொண்ட ஆதாரங்களின்மூலம் இன்பத்தின் பன்மடங்குகளைப் பெருக்க, அதை நுகருவதற்கான உடற்பாகங்கள் அவர்களுக்குப  பற்றாக் குறையாகி, வேறு பயன்பாட்டுக்குரிய உடம்பின் சில பாகங்களையும் இன்பம் நுகரத்தக்கதாக மற்றுவதற்க்கான ஆராய்ச்சிகளையும் ஒளிப்படங்களின் வழியே செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கான காலமும் அவர்களுக்குப் போதவில்லை.

இப்படியான விரைவுப் போக்குகளில் சிக்கியுள்ள அவர்களின் மனம், அதே விரைவுக்கட்சிகளை வெறுத்து பொறுமையாய் காட்டப்படும் காட்சிகளில் மூழ்குகிறது. வேகப்படுத்தப்பட்ட,விரைவாய் முடிந்துகொண்டிருக்கிற அந்த உண்மை வாழ்க்கை வெளிகளில் சலித்துப்போய் யதார்த்த கட்சிகள் நிறைந்த பொய் உலகில் நிறைவுகொள்ளும் இவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்களே மிகச் சிறந்த படங்களாகப் பரப்பப் படுகிறது. பாராட்டப் படுகிறது.

சிறு  காரணங்களுக்காகக் கூட சண்டையிட்டு முட்டிக்கொள்ளும் சிற்றூர் பாமரமக்களின் பகட்டும் பகுமானமுமற்ற பச்சையான அவர்களின் வாழ்க்கையில் உள்ளத்திற்கும் முகத்திற்குமான  இடைவெளிக்கு இடமில்லாமல் இருக்கிறது. உள்ளே பகையுணர்வை வைத்துக்கொண்டு வெளியே போலியாக புன்னகையுதிர்க்கத் தெரியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளுவதும், உள்ளே மகிழ்வுற வெளியே பலர் முன்னிலையிலும் தான் மட்டும் சிரித்துக்கொள்ளுவதுமாக கபடமற்ற வெளிப்பாடுகளைக் கொண்ட அவர்களின் முகவெளிகள் உள்ளத்தோடு நேரடித் தொடர்புகொண்டவையாகவே எப்பொழுதும் இருந்து வருகிறது.

சிறிய வருத்தம் உண்டானாலும் முறைத்துக்கொண்டு குடும்ப உறவுகளுக்குள்ளேகூட அடித்துக் கொள்ளும் சிற்றூர் வாழ்வில் அடுத்த திருவிழா, குடும்பவிழா அல்லது இறப்பு நிகழ்வு போன்றவற்றில் அந்த வருத்தத்தைத் துடைத்துக் கொண்டு சண்டைகளை மறந்து ஒன்றாகிவிடுவது இயல்பு. அவர்களின் அகப்புற வெளிப்பாட்டுக்  கூறுகள் யாவும்  தொலைதூரம் அவர்களோடு செல்லாமல் அவ்வப்போது தோன்றி மறையும் இயற்கையை ஒத்த விதிகளையுடையனவாய் இருக்கின்றன.தோன்றும் உணர்வுகளின் அளவீட்டின் அடிப்படையிலேயே  அவர்களுடைய உடல்மொழிகளின் வெளிப்பட்டுக் கூறுகள் மிகையும் குறைவுமற்று வெளிப்படுகின்ற பொழுது, அவைகள் அவர்களின் சிந்தனைத் தளத்தில் அல்லது வாழ்க்கைத் தளத்தில் பதிவுகளின்றி விளைவுகளின்றி வாழ்க்கை இயல் கூறுகளில் ஒன்றாகக் கலந்துவிட்டிருகின்றன.

ஒளிவு மறைவற்றதாய் இறுக்கும் அடித்தட்டு வாழ்க்கை ஓட்டத்தில் அவர்களின் கள்ளமற்ற சிந்தனைத் தளத்தை பிறரையே சார்ந்திருக்கும்  பொருளாதார  சூழ்நிலை, பலவகை சிக்கல்களினால், சித்தாந்தங்களினால் பின்னிவைக்கப்பட்டுள்ள சமூகச் சூழ்நிலை, தன்முடிவில் பயனற்றுக் கிடக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் மேற்குறிப்பிட்டவாறு அவ்வப்போது தோன்றிமறையும் குடும்ப உறவுச் சிக்கல்கள் ஆகியவைகளே கைப்பற்றியிருப்பதனால் வருத்தங்கள், ஏக்கங்கள், கவலைகள்,ஆகியவைகளே அவர்களைச் சூழ்ந்துள்ளன. உடல்மொழிகளைவிட வாய்மொழிகளே பெரும்பங்கு வகிக்கும் அவர்களின் அன்றாடத் தொடபியல் வேளைகளிலும் அனிச்சையாகவே நெற்றி , கன்னம், புருவம்,தாடை ஆகியவைகளில் சோகங்களும், கவலைகளுமே தோய்ந்து உடல்மொழியாக அவர்களின் வாழ்வியலைத் தெளிவுபடுத்துகிறது.

வாழ்வின் நடைமுறைகளில் வழக்கமாக வெளிப்படுத்தும் வாய்மொழி, உடல்மொழிக் கூறுகளை எண்ணப் புலப்படுத்தலைத் தாண்டி  மிகையாக,தனியாக அவர்கள் ஒரு பாவனையாக உணருவதில்லை. அவ்வாறு,தான் பாவனை செய்ததை உணரும் நிலைகளை அல்லது அதற்கு உந்தப்படும் சூழ்நிலைகளை எண்ணி வெட்கமும் வேதனையும் படுவதுண்டு. ஆனால், அதே பாவனைகள் புறநிலைகளிலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் வெளிப்படுகின்றபோது அது  அவர்களுக்கு வியப்பாகவும், புதுமையாகவும்,ஈர்ப்பாகவும் அமைகிறது.

ஒலியையோ,சொற்களையோ ஊடுபாவு செய்யாமல், மிகைப்படுத்தப்பட்ட மெய்ப்பாட்டு அசைவுகள், இயக்கங்கள் ஆகியவற்றின்  மூலமாக மிகவும் சாதாரணமான அன்றாட நடவடிக்கைகளை உருவகித்து காட்டும் ஒரு நாடகவடிவம்தான் பவனை என A .P .Royee  விளக்குகிறார்.சொற்களோடு கூடிய உடல் அசைவு, ஆடை அலங்காரம் மற்றும் மிகவும் நுணுக்கமான உடல்வழியிலான உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றைக்  கொண்டதே பாவனை என  Judith Lynne Hanna  விளக்குகிறார். இப்படி பல்வேறு வகைமைகளில் விளக்கப்படும் நாடக வடிவமான பாவனையை, தன்னிடம் இல்லாத ஒன்றை பிறரிடம் காணும்போது அது இயல்பாகவே ஈர்ப்புக்குள்ளாகின்றது.  ஒரு நிலையில்  அது அவர்களின் அடக்கிவைத்த உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது. இந்த வகையிலேதான் யதார்த்த மனிதர்களை மிகையான நடிப்புகள் ஈர்க்கின்றன. யதார்த்தமற்ற பகட்டு வாழ்க்கை மேற்கொள்பவர்களை மிகையற்ற நடைமுறையிலமைந்த அசைவுகள் ஈர்க்கின்றது.

எந்த ஒன்றிலும் இலாபமீட்டும் உயர்தட்டு மக்கள்,    உள்ளக் கிடையிலிருந்து வரும் சொற்களை அது கொணரும் உணர்வுகளை மிகைப்படுத்தும் அல்லது அழுத்தம் கொடுக்கும்பொருட்டு நெற்றியைச் சுருக்கியோ, கண்களை அகல விரித்தோ, விழிகளை பலகோணங்களில் உருட்டியோ, புருவங்களை வளைத்தோ தலையை அசைத்தோ, கைகளை அசைத்தோ பல்வேறு வகைப்பட்ட வாய்மொழி சாராத மொழிக் கூறுகளை பயன்படுத்தப் பழக்கப் பட்டிருக்கின்றனர். அதுவே அவர்களது தொழில் உத்தியாகவும் புகட்டப்படுகிறது. இலாபமூட்டும் வேட்கையால் பிணைக்கப்பட்ட அவர்களின் தொழில்முறை வாழ்க்கையில்  கணவன் மனைவி, தாய் சேய் ஆகியோருக்கிடையிலான பாசப் பரிமாற்றங்களில்கூட செயற்கை வெளிப்பாடுகளான பாவனைகளே நிரம்பிக் கிடக்கையில், இயற்கையாய் தோன்றும் புலப்பட்டுப் பரிமாற்றங்களின் மேல் அவர்களையறியாமலே அவர்கள் ஏக்கம் கொள்கின்றனர்.  நாய், பூனை, குருவிகள்,கிளிகள், மீன்கள் போன்றவைகளின் இயற்கையான வெளிப்பாடுகளில் வியப்படைந்து நிறைவு கொள்கின்றனர். இன்றும் பலர் தாங்கள் குழந்தைகளைவிட நாய்களின்மேல் அன்பைப் பொழிவதும் இந்த உளவியல் தன்மை கொண்டதுதான்.  இயல்பு நிறைந்த இயற்கைத் தாவரங்களையும்,சூழ்நிலைகளையும், கட்சிகளையும் அவர்கள், மெய்சிலிர்க்க வைக்கும் ஈர்ப்புமிகு எழில் வடிவங்களாகக் கண்டு வியக்கிறார்கள். அழுத்தங்களற்ற, சுமைகளற்ற வாழ்க்கை மேற்கொள்ளும் அவர்களின் பார்வைக்கு, அடித்தளமக்களின் அவலமிகு வாழ்வியல் கூறுகளும் உண்மையான அவர்களுடைய நடைமுறைப் போக்குகளும், பழக்கவழக்கங்களும் பொழுது போக்குவகையில் அவர்களுக்கு வியப்பூட்டுகின்றன. இந்த வகையிலேதான் மேல்தட்டுப் பார்வையாளர்களை யதார்த்தவாதத் திரைப்படங்கள் கவருகின்றன.

இப்படிப்பட்ட  இன்னும் பல வகையான  உளவியல் கூறுகளை திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறியும் நிலையில், நடிகர்களோடு இவர்களும் அரசியல் கனவுகாணும் வாய்ப்புண்டு.

நிழற்படங்கள்

          கன்னியாகுமரி


இருளும் ஒளியும் கலந்து
உருவாக்கிய
திருவள்ளுவர்  சிலை
பகலில்
இரவு காட்டும் காட்சி









இயற்கை வெளிச்சத்திற்கு முன் முந்திக் கொண்டு நிற்கும் செயற்கை ஒளியில் விவேகானந்தர் பாறை




புத்தர் சிலையா?- (கேள்வி)

அண்மையில் ஆவணப்பட இயக்குனர் பாரி செழியனோடு வேலூர் மாவட்டத்திலுள்ள
திருப்பதூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இங்கு காணப்படும் சிலைபோன்று அப்பகுதியில்
பல இடங்களில் காணப்படுகின்றன.

புத்தர் சிலை என்றே அங்குள்ள மக்கள் கருதும் நிலையில், எமக்கு சில ஐயங்கள் தோன்றுகின்றன.
அரச மரபிலிருந்து விலகிய புத்தருக்கு அரச தோரணைகளோடு சிலை  வைக்க முடியுமா?
மேலும், மகாவீரரின் சிலைபோன்றும் காணப்படுவதாக
சிலர் கூறினர்.

இந்நிலையில், உங்களின் கருத்தை பகிர்க.

சித்திரைத் திருவிழா கொடுமைகள் - (நிகழ்வுகள்)

மதுரையில் சித்திரை திருவிழாவை எப்பொழுதும் பார்ப்பதில்லை.
வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அழகர் ஆற்றில் எழுந்தருள்கிறார் என செய்தித் தாள்கள் சொல்ல
மக்களோ ஆற்றில் அவர் இறங்கத்தானே செய்வார் என்றார்கள்.
இந்த குழப்பத்திற்கு நடுவே ஆற்றில்  நானும் இறங்கிப் பார்த்தால்
குழந்தைகள் மீது வன்கொடுமை பெற்றோர்களாலேயே நடந்துகொண்டிருந்தது.

மொட்டை எடுப்பதற்காக குழந்தைகளின் தலையை மடியில் கவிழ்த்து
மூச்சு முட்டுமாறு பிடித்துக கொண்டு அசையக்கூட விடவில்லை.மொட்டை எடுக்கும்
நபர்களோ ரத்தம் வர கத்தியால் கீறி பிராண்டுகிறார்கள்.கோடைகாலம் குழந்தைகளின்
தலைகளில் பொக்குலங்களை ஏற்படுத்தியிருந்தன. அதைக்கூட கண்டுகொள்ளாத
முடிஎடுப்பவர்கள் பிஞ்சு மண்டையை ரத்தக் களமாக்கி காசு பார்த்துகொண்டிருந்தனர்.

காயம்  பட்ட தலையில் ஆற்றில் ஆங்காங்கே தேங்கியிருந்த  கழிவு நீரை அள்ளி ஊற்றியது இன்னொரு கொடுமையாக இருந்தது. அவ்வளவு மக்கள் கூடுமிடம்
எனத் தெரிந்தும் மாநகராட்சி, ஆற்றில் கழிக்கப்பட்ட மலங்களை அப்புறப்படுத்தாமல்
அசிங்கப்படுத்திக்கொண்டிருந்தது. இன்னொரு கொடுமையும் நடந்தது. ஊடகங்களின்
கேமராக்கள் எல்லாம் மக்களை விட்டுவிட்டு அழகர் சிலையை விழுந்து விழுந்து
படமெடுத்துக் கொண்டிருந்தன.

 இணைப்பு:              
குழந்தைகளை கொடுமைப்படுத்தும் மற்றொரு செயலாக
கிராமங்கள் தோறும்
காதணி விழாக்கள் நடந்துகொண்டிருக்கின்றன. காது குத்தும் ஆசாரிகள் முனை
மழுங்கிய ஊசிகளை  கொண்டு குத்தும் வலி தாங்காமல் அலறும் குழந்தைகளுக்கு
ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதால் வாயைப் பிளந்து அழுகும் நிலையில் ,
வாயை அடைக்கும் விதமாக வாழைப் பழத்தைத்திணித்து மூச்சடைக்க வைக்கின்றனர். நூலிலையில் உயிர்பிழைக்கும் மழலைகள் துன்பங்களை சொல்ல
வழியின்றி அழும்போது பெற்றோரின் முரட்டுக் கைகளால் அடிவேறு வாங்குகிறார்கள். இவ்வாறான குழந்தைகள் மீதான கொடுமைகளுக்கு முடிவு கட்டவேண்டும்.

புதன், 28 ஏப்ரல், 2010

வெளிச்சமற்ற ஒளிகள்-(கவிதை)



கண்கள் மேயும் கட்டாந்தரைப் பக்கங்களில்
முளைத்துக்கிடக்கின்றன பார்த்தீனியச் சொற்கள்
காலங்களை உறிஞ்சிப் பெருத்து
வேண்டிய இடங்கள்தோரும் ஈனப்பட்ட
சருகுச் சிந்தனை திணிக்கப்பட்ட
சலனமற்ற உறுப்புகளுடன் பொம்மெய்கள்
விளைநிலத்தின் பிளவுகள் தோறும் நின்றுகொண்டு
நிழல் வேடிக்கை செய்கின்றன

மூடிய இமைகளுக்குள் உருளும் விழிகளில்
தெரியும் திறந்தவெளிக் காட்சிகளில்
பிறரறியா சாகசங்களின் உண் மெய்கள்
அலங்கரிக்கப்படுகின்றன கவர்ச்சிச் சொற்களால்
அதை நோக்கி முடுக்குவதர்க்குத் தோதாய்
நடைமுறைகளை விழுங்கிவிட்டு
விருதுமலம் கழிக்கும் நிறுவனங்கள்

அசைவற்ற பரப்பில் அலைவரைந்து செல்கின்றன
தவளைவீச்சில் தாவிஎளும் கற்களை யறியா
எங்குமெதிலும் வளைந்து கொடுத்து நெளியும்
கண்களற்ற நச்சுப் பாம்புகள்
விளுங்கியதச் செரிக்க முடியாமல் வீராப்புச் செய்கின்றன
மண்ணோடுமண் ஆவதற்கு அணியமாய்

நகைச்சுவையா? நச்சுச்சுவையா? - (கட்டுரை)

நகைச்சுவையா? நச்சுச்சுவையா?

கை+சுவை=நகைச்சுவை.நகை என்பது சிரிப்பு. நகைப்பு என்பது வினையாலணையும் பெயர்.நகை எனும் சிரிப்பு உள்ளத்தில் தோன்றும் மகிழ்வுணர்வின் உடல் வெளிப்பாடு.உணர்வின் வினையால் உடலில் விளையும் நகைப்பு    வினைச்சொல்லாகஉணரப்பட்டாலும் பிறிதொரு இடத்தில்நகைஎன்பதுபெயர்சொல்லாகவும்வருகிறது.விலை உயர்ந்த உலோகமான தங்கம் போன்ற தாதுக்களில் வடிக்கப்படும் அணிகலன்களுக்கும் நகை எனப்பெயருண்டு.ஆனாலும் ,நகை என்ற சொல்லுக்கு அணிகலன்களை மட்டுமே புரிந்துகொள்ளும் சமூகம் அதனுடன் சுவை எனும் சொல்லை சேர்த்து விட்டாலே சிரித்து விடுகிறது. இங்கு சிரிப்பு வெளிப்பாட்டிற்கு அடிப்படை அப்பழுக்கற்ற மகிழ்வு அல்லாமல்,வன்மம் கலந்த செருக்கல் அமையும் போதுதான் நகை எனும் சொல் நச்சாகி ,நகைச்சுவை நச்சுச்சுவை ஆகி மனித ஆளுமையை சிதைக்கின்றது.

நகைச்சுவையில் பிற்பாதியில் வரும் சுவை என்ற சொல் இன்பத்தின் குறியீடு. மகிழ்வான உணர்வில் விளையும் உடலின் இன்பம் சுவையாகி நகை என்ற முகக் குறியால் வெளிப்படுகிறது.இன்பத்தின் வெளிப்பாடான சிரிப்பு இனிமை மிக்க உணர்வாய் ,வினையாய்உடலின் செயல்களை கிளர்ச்சியூட்டி மேலும் புதிய செல்களை உடலின் இயங்கு தன்மையை அதன் இயற்கைத் தன்மையிலேயே நிலைத்திருக்க செய்யும் பயிற்சியாய், அனிச்சையாய் விளையும் செயலாய் வெளிப்படுகிறது.பரிணாமத்தின் பெருமைமிகு வடிவமான மானுடத்தின் ஆறாவது தளமான சிந்தனையில் தோன்றும் இறுக்கம் ,அதனால் விளையும் அழுத்தம் போன்றவற்றிலிருந்து இலகு தன்மைக்கும் இயற்கை நிலைக்கும் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் சிறந்த வாய்ப்பு மனிதனில் மட்டுமே தோன்றும் சிரிப்பில் உண்டாகிறது. இவ்வாறான பயன்பாட்டு வினைபுரியும் இன்ப உணர்வு பிற உயிரினங்களில் தோன்றினாலும் அதை வெளிப்படுத்தும் குறியாகிய சிரிப்பு மனிதரில் மட்டுமே உண்டு.விலங்கையும் ,மனிதரையும் வேறுபடுத்தும் கூறுகளில் சிறப்பாய் மிளிரும் சிரிப்பில் மனிதன் தன பண்பையும் வெளிப்படுத்துகிறான். சிரிப்புக் குறியானது உள்ளம் கொள்ளும் மகிழ்வின் அளவீட்டைப் பொறுத்து அதுவும் வேறுபட்டு நிற்கிறது . மேல் கீழ் உதடுகள் இணைந்த நிலையில் நீளவாக்கில்தசைகளை இழுத்து சப்தமற்று நகைப்பது புன்னகை அல்லது குறுநகை. இந்தக் குறியானது பெரும்பாலும் வியாபார உத்தியாகவும் ,தந்திரமாகவும் பயன்பட்டுக்கொண்டிருக்க்றது.வியாபார நிறுவனங்ககளும் ,வியாபாரிகளைதயாரிக்கும் நிறுவனங்களும் ,அவர்களை உற்பத்தி செய்யும் கல்வி நிறுவனங்களும் நுகர்வோரை ,மக்களை ஈர்க்கும் மிகப்பெரும் தொழில் உத்தியோக பொய்மையில் புன்னகை உதிர்க்கக் கற்றுக்கொடுக்கின்றன.ஆனால்,அடித்தட்டு மக்களிடத்தில் தான் ,அதிகமான மகிழ்வை தனக்குத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் உண்மையான செயலாக புன்னகை மிளிர்கிறது. தனக்குள் உருவான அதிக மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் சூழல்கள்ஒடுக்கப்பட்டவர்களிடத்தில் இல்லை என்பதும் அவர்கள் புன்னகையோடு நிறுத்திக் கொள்வதற்கு காரணமாக அமைகின்றது. அதிக மகிழ்வை வாய்விட்டுசிரித்து வெளிக்காட்டினால் ஆதிக்க சாதியினர் கோபம் கொள்ளும் நிலையிலும், எப்பொழுதும்விரக்தியில் வாழும் சக ஒடுக்கப்பட்ட மக்களின் எரிச்சலுக்கும் ஆளாக வேண்டியிருப்பதாலும்  எவ்வளவு மகிழ்வான உணர்வைக் கொண்டிருந்தாலும் ஒடுக்கப்பட்டவர் புன்னகையோடு நின்று விடுவது உண்டு.பற்கள் தெரிய குரலின் இசையோடு முகத்தின் தசைகள் பலவும் இயங்க மகிழ்வை வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்து கொள்ளும் பெருநகை ஒடுக்கப்பட்டவர்களிடத்தில் எப்போதேனும் ,ஆதிக்க சாதியினரிடம் அடிக்கடி நிகழ்வது கவனிக்கத்தக்கது. மாறாக, நடுத்தர ,மேல்தட்டு மக்கள் அல்லது ஆதிக்க சாதியினர் குறைவான மகிழ்வை வெளிப்படுத்தும்போது இயல்பான புன்னகை வெளிப்படுகின்றது.

மகிழ்வை வெளிப்படுத்த அல்லது பகிர்ந்து கொள்ள வெளிப்பட்ட நகை என்ற  உடலின் குறி, அடித்தட்டு மக்களிடம் இயல்பான ஒன்றாகவும், முதலாளிகளிடம் உடைமைகளைத் தக்கவைக்கவும்,உற்பத்தி செய்யவுமான கருவியாகவும், சாதியவாதிகளிடம் தங்களின் ஆதிக்கத்தக்கவைக்கும், உற்பத்தி செய்யும் கருவியாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. உடைமைச் சமூகத்தில் உற்பத்திக் கருவியாக நின்றுய் அதனுடைய இயற்கையான பண்பு நிலைகெட்டு செயற்கை நிலைகளில் துன்பத்தின் தூண்டுகோலாய்,நகை நச்சாகி விட்டது. சிரிப்பு என்பது உயர்த்தப் பட்டவர்களிடத்தில் ஆளுமையையும், ஒடுக்கப் பட்டவர்களிடத்தில் ஆளுமைச் சிதைவையும் உண்டாக்குகிறது.

ஒரு மனிதருக்கு, குற்ற மனப்பான்மையும் ,இழிவு மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் தோன்றுகிறபோது ஆளுமை சிதைகிறது. இவ்வாறான மனிதர்களைக் கொண்ட சமூகம் ஒற்றுமையை இழக்கிறது. இப்படியாக ஒற்றுமையைக் குலைக்கும், வண்ணம் சமூகத்தின் பெரும்பான்மை நிறத்தையோ, உடல்மொழியையோ,எடுத்துக் கொண்டு தாழ்வு மனங்களை உற்பத்தி செய்யும் வேலைகளையே இன்றைய நகைச்சுவைகள் செய்து கொண்டிருக்கின்றன.
படி நிலையிலுள்ள  இரண்டாம் சாதி தனக்கு மேல் ஒன்று உண்டு என்ற மதிப்பீட்டின் கீழ் உருவாகும் தாழ்வு மனப் பான்மையை, தனக்குக் கீழும் ஒன்று உண்டு என்ற மதிப்பீடின்கீழ் போக்கிக் கொள்கிறது. அவ்வாறு, தனக்குக் கீழே ஒன்று இல்லை என்ற நிலையில், கீழிருக்கும் படியான ஒன்றை உருவாக்க  முயல்கிறது. இதன்படியே தனக்குக் கீழே ஒரு சாதி இருக்க வேண்டும் என்று அனைத்து சாதிகளும் விரும்புகிறபோது, தாம் உருவாகிக் கொள்ளும் நகைச் சுவையில் தனக்குக் கீழே உள்ள சாதியின்மேல் இழிவைப் பொருத்தி மகிழ்கிறது. சிரிக்கிறது.

 உடைமைச் சமூகத்தில் தன உடைமைகளை பெருக்கவும், அதைப் பாதுகாக்கவும், பிறரை அழிக்கும், துன்புறுத்தும் வகையில், இழிவுபடுத்தி தாழ்த்தும் வேலைகளில் ஈடுபடுகிறான். அது வெற்றியடையும்போது மகிழ்கிறான். மகிழ்வின் வெளிப்பாடாக பல ஒலி வடிவங்களில் சிரிக்கிறான். அந்த மனநிலையின் தொடர்சியாகவே தனதாய் உணருகிற வலிமை நிறைந்த கதா நாயகனின் எதிரியை, கதா நாயகனுக்குத் தூணாக நிற்கிற இயலாதவனை துன்புறுத்தும்போது, இழிவுபடுத்தும்போது, அங்கு வெளிப்படும் வேதனைகளில் மகிழ்ந்து சிரிக்கிறான்.

வெற்றி என்ற பிம்பத்தை உணர்ந்த மனிதன் வெற்றியின் அடிப்படையாகக் கருதும் வலிமையின் எதிர் பரிமாணமான இயலாமையை தன்னைச் சுற்றிலும் இருத்தி வைக்கும் வேலைகளை தன்னையறியாமலே செய்கிறான். அத்தகைய அனிச்சையான செயல்பாட்டின் உளவியல் விளைவுதான் இயலாமையைக் கண்டு மகிழ்ந்து சிரிப்பது. அப்படி விளையும் சிரிப்பை எங்கும் விதைக்கும் வேலைகளைத்தான் சினிமா உள்ளிட்ட நகைச் சுவைத் தொழிற்சாலைகள் செய்து கொண்டு இருக்கின்றன.

தன் திறனுக்கும் மேலான பலனை அடைந்துவிடத் துடிக்கும் மனிதன், அறிவிலிகளாகவும், வெகுளிகளாகவும், இயலாதவர்களாகவும், ஊனமுற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும், பயப்படுகிறவர்களாகவும் பிறர் இருக்க வேண்டுமென விரும்புகிறான். ஆகவே, அந்தப் பண்புப் பொருந்திய காட்சிகளை சினிமாவில்   காணும்போதும், பேச்சுக்களில் கேட்கும்போதும் மகிழ்ந்து சிரிக்கிறான்.

சினிமாவில்  நகைச் சுவை நடிகர்களின் நடிப்பு அவ்வாறாகவே அமைக்கப் படுகிறது. உதாரணமாக, இயலாமைகளின் அடையாளமாக நாகேஷ், கோமாளித்தனத்தின் அடையாளமாக சந்திரபாபு, தந்திரத்திற்குச் சார்லி சாப்ளின், ஆதிக்க வாதியின் பிரதிநிதியாய்,இழிவு வார்த்தைகளைக் கொண்டவனாய் கவுண்டமணி, வெகுளி,இயலாமை, வன்முறை ஆகியவைகளுக்கு வடிவேலு, அறியாமைக்கும் அடிவாங்குவதற்குமானவனாய் செந்தில் ஆகியோரைக் காட்டலாம்.

மேலும், கட்டமைக்கப் பட்ட அழகு வடிவத்திலிருந்து மாறுபட்ட உடலமைப்பைக் கொண்டவர்களை இழிவு செய்யும்போதும் மகிழ்ந்து சிரிப்புவருகிறது. உதாரணமாக, நகைச் சுவை நடிகர்கள் உசிலைமணி, குண்டு கல்யாணம், பிந்துகோஷ், தயிர் வடை தேசிகன், ஓமக்குச்சி நரசிம்மன், குள்ளமணி, தவக்களை, செந்தில் ஆகியோரின் உடலமைப்பை இழிவுபடுத்தும், தாழ்வுபடுத்தும், கேலிசெய்யும்,எள்ளல்செய்யும்போதும் சிரிப்பு வருகிறது.

குறிப்பாக, ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கவுண்டமணியின் உடல் மொழியும் வசனங்களும் ஆதிக்க சாதியினரின் உளவியலோடு போருந்திப்போவதால் மகிழ்ச்சி உண்டாகி சிரிப்பு வெளிப்பட்டு சாதியச் சமூகம் ஆதிக்கம் செய்ய்வதர்க்குத் தோதாய் அமைவதைக் காணலாம்.

மேலும், காட்டப்படும் நகைச் சுவை நடிகர்கள் யாவும், ஒடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியாய் காட்டப்படுவதால், அவர்களின் இயலாமை, கோமாளித்தனம், அறியாமை, பேதைமை போன்ற செயல்பாடுகள் ஆதிக்க சமூகத்திற்கு ஆறுதலாகவும் வெளிப்பட்டு நகைச் சுவையாகின்றது.

ஆகவே, இன்றைய நிலையில் சிரிப்புகள்  யாவும் வன்மத்தின் வெளிப்பாடாக அமைவதால் சிரிப்பின்மீது அனைவரும் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.