வியாழன், 29 ஏப்ரல், 2010

சித்திரைத் திருவிழா கொடுமைகள் - (நிகழ்வுகள்)

மதுரையில் சித்திரை திருவிழாவை எப்பொழுதும் பார்ப்பதில்லை.
வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அழகர் ஆற்றில் எழுந்தருள்கிறார் என செய்தித் தாள்கள் சொல்ல
மக்களோ ஆற்றில் அவர் இறங்கத்தானே செய்வார் என்றார்கள்.
இந்த குழப்பத்திற்கு நடுவே ஆற்றில்  நானும் இறங்கிப் பார்த்தால்
குழந்தைகள் மீது வன்கொடுமை பெற்றோர்களாலேயே நடந்துகொண்டிருந்தது.

மொட்டை எடுப்பதற்காக குழந்தைகளின் தலையை மடியில் கவிழ்த்து
மூச்சு முட்டுமாறு பிடித்துக கொண்டு அசையக்கூட விடவில்லை.மொட்டை எடுக்கும்
நபர்களோ ரத்தம் வர கத்தியால் கீறி பிராண்டுகிறார்கள்.கோடைகாலம் குழந்தைகளின்
தலைகளில் பொக்குலங்களை ஏற்படுத்தியிருந்தன. அதைக்கூட கண்டுகொள்ளாத
முடிஎடுப்பவர்கள் பிஞ்சு மண்டையை ரத்தக் களமாக்கி காசு பார்த்துகொண்டிருந்தனர்.

காயம்  பட்ட தலையில் ஆற்றில் ஆங்காங்கே தேங்கியிருந்த  கழிவு நீரை அள்ளி ஊற்றியது இன்னொரு கொடுமையாக இருந்தது. அவ்வளவு மக்கள் கூடுமிடம்
எனத் தெரிந்தும் மாநகராட்சி, ஆற்றில் கழிக்கப்பட்ட மலங்களை அப்புறப்படுத்தாமல்
அசிங்கப்படுத்திக்கொண்டிருந்தது. இன்னொரு கொடுமையும் நடந்தது. ஊடகங்களின்
கேமராக்கள் எல்லாம் மக்களை விட்டுவிட்டு அழகர் சிலையை விழுந்து விழுந்து
படமெடுத்துக் கொண்டிருந்தன.

 இணைப்பு:              
குழந்தைகளை கொடுமைப்படுத்தும் மற்றொரு செயலாக
கிராமங்கள் தோறும்
காதணி விழாக்கள் நடந்துகொண்டிருக்கின்றன. காது குத்தும் ஆசாரிகள் முனை
மழுங்கிய ஊசிகளை  கொண்டு குத்தும் வலி தாங்காமல் அலறும் குழந்தைகளுக்கு
ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதால் வாயைப் பிளந்து அழுகும் நிலையில் ,
வாயை அடைக்கும் விதமாக வாழைப் பழத்தைத்திணித்து மூச்சடைக்க வைக்கின்றனர். நூலிலையில் உயிர்பிழைக்கும் மழலைகள் துன்பங்களை சொல்ல
வழியின்றி அழும்போது பெற்றோரின் முரட்டுக் கைகளால் அடிவேறு வாங்குகிறார்கள். இவ்வாறான குழந்தைகள் மீதான கொடுமைகளுக்கு முடிவு கட்டவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக