புதன், 28 ஏப்ரல், 2010

நகைச்சுவையா? நச்சுச்சுவையா? - (கட்டுரை)

நகைச்சுவையா? நச்சுச்சுவையா?

கை+சுவை=நகைச்சுவை.நகை என்பது சிரிப்பு. நகைப்பு என்பது வினையாலணையும் பெயர்.நகை எனும் சிரிப்பு உள்ளத்தில் தோன்றும் மகிழ்வுணர்வின் உடல் வெளிப்பாடு.உணர்வின் வினையால் உடலில் விளையும் நகைப்பு    வினைச்சொல்லாகஉணரப்பட்டாலும் பிறிதொரு இடத்தில்நகைஎன்பதுபெயர்சொல்லாகவும்வருகிறது.விலை உயர்ந்த உலோகமான தங்கம் போன்ற தாதுக்களில் வடிக்கப்படும் அணிகலன்களுக்கும் நகை எனப்பெயருண்டு.ஆனாலும் ,நகை என்ற சொல்லுக்கு அணிகலன்களை மட்டுமே புரிந்துகொள்ளும் சமூகம் அதனுடன் சுவை எனும் சொல்லை சேர்த்து விட்டாலே சிரித்து விடுகிறது. இங்கு சிரிப்பு வெளிப்பாட்டிற்கு அடிப்படை அப்பழுக்கற்ற மகிழ்வு அல்லாமல்,வன்மம் கலந்த செருக்கல் அமையும் போதுதான் நகை எனும் சொல் நச்சாகி ,நகைச்சுவை நச்சுச்சுவை ஆகி மனித ஆளுமையை சிதைக்கின்றது.

நகைச்சுவையில் பிற்பாதியில் வரும் சுவை என்ற சொல் இன்பத்தின் குறியீடு. மகிழ்வான உணர்வில் விளையும் உடலின் இன்பம் சுவையாகி நகை என்ற முகக் குறியால் வெளிப்படுகிறது.இன்பத்தின் வெளிப்பாடான சிரிப்பு இனிமை மிக்க உணர்வாய் ,வினையாய்உடலின் செயல்களை கிளர்ச்சியூட்டி மேலும் புதிய செல்களை உடலின் இயங்கு தன்மையை அதன் இயற்கைத் தன்மையிலேயே நிலைத்திருக்க செய்யும் பயிற்சியாய், அனிச்சையாய் விளையும் செயலாய் வெளிப்படுகிறது.பரிணாமத்தின் பெருமைமிகு வடிவமான மானுடத்தின் ஆறாவது தளமான சிந்தனையில் தோன்றும் இறுக்கம் ,அதனால் விளையும் அழுத்தம் போன்றவற்றிலிருந்து இலகு தன்மைக்கும் இயற்கை நிலைக்கும் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் சிறந்த வாய்ப்பு மனிதனில் மட்டுமே தோன்றும் சிரிப்பில் உண்டாகிறது. இவ்வாறான பயன்பாட்டு வினைபுரியும் இன்ப உணர்வு பிற உயிரினங்களில் தோன்றினாலும் அதை வெளிப்படுத்தும் குறியாகிய சிரிப்பு மனிதரில் மட்டுமே உண்டு.விலங்கையும் ,மனிதரையும் வேறுபடுத்தும் கூறுகளில் சிறப்பாய் மிளிரும் சிரிப்பில் மனிதன் தன பண்பையும் வெளிப்படுத்துகிறான். சிரிப்புக் குறியானது உள்ளம் கொள்ளும் மகிழ்வின் அளவீட்டைப் பொறுத்து அதுவும் வேறுபட்டு நிற்கிறது . மேல் கீழ் உதடுகள் இணைந்த நிலையில் நீளவாக்கில்தசைகளை இழுத்து சப்தமற்று நகைப்பது புன்னகை அல்லது குறுநகை. இந்தக் குறியானது பெரும்பாலும் வியாபார உத்தியாகவும் ,தந்திரமாகவும் பயன்பட்டுக்கொண்டிருக்க்றது.வியாபார நிறுவனங்ககளும் ,வியாபாரிகளைதயாரிக்கும் நிறுவனங்களும் ,அவர்களை உற்பத்தி செய்யும் கல்வி நிறுவனங்களும் நுகர்வோரை ,மக்களை ஈர்க்கும் மிகப்பெரும் தொழில் உத்தியோக பொய்மையில் புன்னகை உதிர்க்கக் கற்றுக்கொடுக்கின்றன.ஆனால்,அடித்தட்டு மக்களிடத்தில் தான் ,அதிகமான மகிழ்வை தனக்குத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் உண்மையான செயலாக புன்னகை மிளிர்கிறது. தனக்குள் உருவான அதிக மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் சூழல்கள்ஒடுக்கப்பட்டவர்களிடத்தில் இல்லை என்பதும் அவர்கள் புன்னகையோடு நிறுத்திக் கொள்வதற்கு காரணமாக அமைகின்றது. அதிக மகிழ்வை வாய்விட்டுசிரித்து வெளிக்காட்டினால் ஆதிக்க சாதியினர் கோபம் கொள்ளும் நிலையிலும், எப்பொழுதும்விரக்தியில் வாழும் சக ஒடுக்கப்பட்ட மக்களின் எரிச்சலுக்கும் ஆளாக வேண்டியிருப்பதாலும்  எவ்வளவு மகிழ்வான உணர்வைக் கொண்டிருந்தாலும் ஒடுக்கப்பட்டவர் புன்னகையோடு நின்று விடுவது உண்டு.பற்கள் தெரிய குரலின் இசையோடு முகத்தின் தசைகள் பலவும் இயங்க மகிழ்வை வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்து கொள்ளும் பெருநகை ஒடுக்கப்பட்டவர்களிடத்தில் எப்போதேனும் ,ஆதிக்க சாதியினரிடம் அடிக்கடி நிகழ்வது கவனிக்கத்தக்கது. மாறாக, நடுத்தர ,மேல்தட்டு மக்கள் அல்லது ஆதிக்க சாதியினர் குறைவான மகிழ்வை வெளிப்படுத்தும்போது இயல்பான புன்னகை வெளிப்படுகின்றது.

மகிழ்வை வெளிப்படுத்த அல்லது பகிர்ந்து கொள்ள வெளிப்பட்ட நகை என்ற  உடலின் குறி, அடித்தட்டு மக்களிடம் இயல்பான ஒன்றாகவும், முதலாளிகளிடம் உடைமைகளைத் தக்கவைக்கவும்,உற்பத்தி செய்யவுமான கருவியாகவும், சாதியவாதிகளிடம் தங்களின் ஆதிக்கத்தக்கவைக்கும், உற்பத்தி செய்யும் கருவியாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. உடைமைச் சமூகத்தில் உற்பத்திக் கருவியாக நின்றுய் அதனுடைய இயற்கையான பண்பு நிலைகெட்டு செயற்கை நிலைகளில் துன்பத்தின் தூண்டுகோலாய்,நகை நச்சாகி விட்டது. சிரிப்பு என்பது உயர்த்தப் பட்டவர்களிடத்தில் ஆளுமையையும், ஒடுக்கப் பட்டவர்களிடத்தில் ஆளுமைச் சிதைவையும் உண்டாக்குகிறது.

ஒரு மனிதருக்கு, குற்ற மனப்பான்மையும் ,இழிவு மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் தோன்றுகிறபோது ஆளுமை சிதைகிறது. இவ்வாறான மனிதர்களைக் கொண்ட சமூகம் ஒற்றுமையை இழக்கிறது. இப்படியாக ஒற்றுமையைக் குலைக்கும், வண்ணம் சமூகத்தின் பெரும்பான்மை நிறத்தையோ, உடல்மொழியையோ,எடுத்துக் கொண்டு தாழ்வு மனங்களை உற்பத்தி செய்யும் வேலைகளையே இன்றைய நகைச்சுவைகள் செய்து கொண்டிருக்கின்றன.
படி நிலையிலுள்ள  இரண்டாம் சாதி தனக்கு மேல் ஒன்று உண்டு என்ற மதிப்பீட்டின் கீழ் உருவாகும் தாழ்வு மனப் பான்மையை, தனக்குக் கீழும் ஒன்று உண்டு என்ற மதிப்பீடின்கீழ் போக்கிக் கொள்கிறது. அவ்வாறு, தனக்குக் கீழே ஒன்று இல்லை என்ற நிலையில், கீழிருக்கும் படியான ஒன்றை உருவாக்க  முயல்கிறது. இதன்படியே தனக்குக் கீழே ஒரு சாதி இருக்க வேண்டும் என்று அனைத்து சாதிகளும் விரும்புகிறபோது, தாம் உருவாகிக் கொள்ளும் நகைச் சுவையில் தனக்குக் கீழே உள்ள சாதியின்மேல் இழிவைப் பொருத்தி மகிழ்கிறது. சிரிக்கிறது.

 உடைமைச் சமூகத்தில் தன உடைமைகளை பெருக்கவும், அதைப் பாதுகாக்கவும், பிறரை அழிக்கும், துன்புறுத்தும் வகையில், இழிவுபடுத்தி தாழ்த்தும் வேலைகளில் ஈடுபடுகிறான். அது வெற்றியடையும்போது மகிழ்கிறான். மகிழ்வின் வெளிப்பாடாக பல ஒலி வடிவங்களில் சிரிக்கிறான். அந்த மனநிலையின் தொடர்சியாகவே தனதாய் உணருகிற வலிமை நிறைந்த கதா நாயகனின் எதிரியை, கதா நாயகனுக்குத் தூணாக நிற்கிற இயலாதவனை துன்புறுத்தும்போது, இழிவுபடுத்தும்போது, அங்கு வெளிப்படும் வேதனைகளில் மகிழ்ந்து சிரிக்கிறான்.

வெற்றி என்ற பிம்பத்தை உணர்ந்த மனிதன் வெற்றியின் அடிப்படையாகக் கருதும் வலிமையின் எதிர் பரிமாணமான இயலாமையை தன்னைச் சுற்றிலும் இருத்தி வைக்கும் வேலைகளை தன்னையறியாமலே செய்கிறான். அத்தகைய அனிச்சையான செயல்பாட்டின் உளவியல் விளைவுதான் இயலாமையைக் கண்டு மகிழ்ந்து சிரிப்பது. அப்படி விளையும் சிரிப்பை எங்கும் விதைக்கும் வேலைகளைத்தான் சினிமா உள்ளிட்ட நகைச் சுவைத் தொழிற்சாலைகள் செய்து கொண்டு இருக்கின்றன.

தன் திறனுக்கும் மேலான பலனை அடைந்துவிடத் துடிக்கும் மனிதன், அறிவிலிகளாகவும், வெகுளிகளாகவும், இயலாதவர்களாகவும், ஊனமுற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும், பயப்படுகிறவர்களாகவும் பிறர் இருக்க வேண்டுமென விரும்புகிறான். ஆகவே, அந்தப் பண்புப் பொருந்திய காட்சிகளை சினிமாவில்   காணும்போதும், பேச்சுக்களில் கேட்கும்போதும் மகிழ்ந்து சிரிக்கிறான்.

சினிமாவில்  நகைச் சுவை நடிகர்களின் நடிப்பு அவ்வாறாகவே அமைக்கப் படுகிறது. உதாரணமாக, இயலாமைகளின் அடையாளமாக நாகேஷ், கோமாளித்தனத்தின் அடையாளமாக சந்திரபாபு, தந்திரத்திற்குச் சார்லி சாப்ளின், ஆதிக்க வாதியின் பிரதிநிதியாய்,இழிவு வார்த்தைகளைக் கொண்டவனாய் கவுண்டமணி, வெகுளி,இயலாமை, வன்முறை ஆகியவைகளுக்கு வடிவேலு, அறியாமைக்கும் அடிவாங்குவதற்குமானவனாய் செந்தில் ஆகியோரைக் காட்டலாம்.

மேலும், கட்டமைக்கப் பட்ட அழகு வடிவத்திலிருந்து மாறுபட்ட உடலமைப்பைக் கொண்டவர்களை இழிவு செய்யும்போதும் மகிழ்ந்து சிரிப்புவருகிறது. உதாரணமாக, நகைச் சுவை நடிகர்கள் உசிலைமணி, குண்டு கல்யாணம், பிந்துகோஷ், தயிர் வடை தேசிகன், ஓமக்குச்சி நரசிம்மன், குள்ளமணி, தவக்களை, செந்தில் ஆகியோரின் உடலமைப்பை இழிவுபடுத்தும், தாழ்வுபடுத்தும், கேலிசெய்யும்,எள்ளல்செய்யும்போதும் சிரிப்பு வருகிறது.

குறிப்பாக, ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கவுண்டமணியின் உடல் மொழியும் வசனங்களும் ஆதிக்க சாதியினரின் உளவியலோடு போருந்திப்போவதால் மகிழ்ச்சி உண்டாகி சிரிப்பு வெளிப்பட்டு சாதியச் சமூகம் ஆதிக்கம் செய்ய்வதர்க்குத் தோதாய் அமைவதைக் காணலாம்.

மேலும், காட்டப்படும் நகைச் சுவை நடிகர்கள் யாவும், ஒடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியாய் காட்டப்படுவதால், அவர்களின் இயலாமை, கோமாளித்தனம், அறியாமை, பேதைமை போன்ற செயல்பாடுகள் ஆதிக்க சமூகத்திற்கு ஆறுதலாகவும் வெளிப்பட்டு நகைச் சுவையாகின்றது.

ஆகவே, இன்றைய நிலையில் சிரிப்புகள்  யாவும் வன்மத்தின் வெளிப்பாடாக அமைவதால் சிரிப்பின்மீது அனைவரும் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

2 கருத்துகள்:

  1. கவுண்டமணியய் பற்றி தாங்கள் சொல்வது 100% சரி...

    பதிலளிநீக்கு
  2. சரியான நகைசுவை யது ?
    கௌண்டமணி என்ற கதாபத்திரம் தாழ்த்தப்பட்ட சமூகத்திலும் உண்டு
    தங்கள் சொல்வது குண்டுமணி ஓமகுச்சி போன்ற உதாரணங்கள் சரி
    கிருஷ்ணன் நகைசுவை விவேக் நகைசுவை எனக்கு உகந்தவை
    சரியான நகைசுவை பட்டியல் இடுங்கள் நண்பரே !!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு