திங்கள், 14 ஜூன், 2010

வைரஸ் வலி -கவிதை

ஆடைகள் உருவப்பட்ட 
அந்தரங்க வெளிகளில்  பாயும் 
தீ நாட்டியத்தின் நளின வெடிப்புகளில் 
தோன்றுகின்றன 
பிரபஞ்சம் விழுங்கும் பெரும் பள்ளங்கள் 

வலி சொருகி வளி கிழித்து 
நீண்டுபெருகும் 
குளோரின்  பின்னலாடைக்குள்
ஒளிந்து உருளும் 
அம்மண உடல்களில் மிளிரும் தோள்களில் 
கூடுகள் கட்டுகின்றன கறையான்கள்

பலர் சுருங்கி கிழிந்த 
குடையில் ஒழுகும் ஊதா மழையில் 
நனைந்து கருகும் 
அலைத் தாவரங்களின் ஆதரவின்றி 
அசைவற்று  நீந்திக் கொண்டிருக்கின்றன 
உயிரற்ற செதில்களுடன் 
ஆழி விலங்குகள் 

வண்ணமற்ற அரவணைப்பை அணைத்து
பசுமைக் கூட்டு வாசிகள் 
புவிக் கோபம் மிக 
அயனம் தாண்டியும் பயணம் செய்கின்றனர் 
கியோட்டாவைக் கடந்து 

வெற்றுப பாவனைகளின் 
வீரியம் விழுங்கி நெளிபவைகள் 
பருவகால நட்பை முறித்து 
உதிர்ந்த இலைகளோடு ஒடிந்து கிடக்கின்றன 
மட்காமல் 
-நன்றி  உன்னதம் பிப் -2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக